தேடுதல்

Vatican News
அசிசியின் புனித பிரான்சிஸ் அசிசியின் புனித பிரான்சிஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் துறவு சபைகள் -3

1206ம் ஆண்டில் ஒருநாள், புனித தமியான் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்தபோது, அங்கு தொங்கிய சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட புனித பிரான்சிஸ், தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஐரோப்பாவில் 11ம், 12ம் நூற்றாண்டுகளில், கடும் தவ, ஏழ்மை மற்றும் செப வாழ்வு வாழத் தொடங்கிய, சிஸ்டர்சியன், நார்பெர்டைன், Camaldolese துறவு சபைகளைத் தொடர்ந்து, கர்த்தூசியன் சபையும் பிறந்தது. உலகினரின் தொடர்பில்லாத,  தனிமையான இடங்களில், தவ முனிவர்களாக இவர்கள் வாழ்ந்தனர். கர்த்தூசியன் சபையை ஆரம்பித்தவர், கொலோன் நகர புனித புருனோ. இவர், ஜெர்மனியின் கொலோன் நகரில் ஏறக்குறைய 1030ம் ஆண்டில் பிறந்தார். Rheimsல் புகழ்பெற்ற ஆசிரியராக விளங்கிய இவர், 45வது வயதில், கொலோன் உயர்மாறைமாவட்டத்திற்கு சான்சிலராக நியமிக்கப்பட்டார். உரோமையிலும், மற்ற இடங்களிலும், அருள்பணியாளர்களிடையே பெருகிக்கிடந்த சீர்கேடுகளையும், அவலங்களையும் களைந்தெறிவதில், திருத்தந்தை ஏழாம் கிரகரி அவர்களுக்கு, வலக்கரமாக இருந்து உழைத்தார். இந்த துர்மாதிரிகையில், இவர் தனது சொந்த பேராயரையே பதவியிலிருந்து நீக்க வேண்டியிருந்தது. புருனோ அவர்களின் அசாத்திய திறமையைக் கண்டு வியந்து, அவரைப் பேராயராக்க முயற்சித்தபோது அதை மறுத்துவிட்டார். ஒருமுறை இவருடைய நண்பர் ஒருவர் இறந்து அவரது அடக்கச்சடங்கு நடைபெற்றபோது, அவர் உயிர் பெற்றெழுந்து "நான் நரகத்திற்கு தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன்" என்றார். இதைக் கண்டு அஞ்சி நடுங்கிய புருனோ, ஆறு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தார். பின்னர், தனிமையை நாடி, செப, தவ முயற்சிகளில் வாழ்வைச் செலவிட வேண்டும் என்ற புருனோ அவர்களின் ஆவலை ஏற்றுக்கொண்ட ஆறு நண்பர்களோடு, Dauphiné ஆல்ப்ஸ் மலையில், ஷார்ட்ரூஸ் (Chartreuse) என்ற காடுகள் நிறைந்த இடத்தில், மனிதர் எளிதில் அணுகமுடியாத சூழலில் தனிமை வாழ்வைத் தொடங்கினார்.

இந்த துறவிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக குடிசைகளில் வாழ்ந்தனர். பொதுவாக அமைந்திருந்த சிற்றாலயத்தில், காலை, மாலை கட்டளை செபங்களுக்கு ஒன்றாகக் கூடினர். பெரிய திருநாள்களில் மட்டும், உண்பதற்கு ஒன்றாய்ச் சேர்ந்தனர். புனித புருனோ அவர்கள், முதலில் சென்று வாழத் தொடங்கிய இடத்தை வைத்தே, அவர் ஆரம்பித்த சபையும், கர்த்தூசியன் என்னும் பெயரைப் பெற்றது. மௌனம், கடும் ஏழ்மை, நீண்டகாலம் நோன்பு, காய்கறி உணவு என, கர்த்தூசியன் துறவிகள் கடின வாழ்வை மேற்கொண்டனர். அவர்களின் முக்கிய வேலை, கைப்பிரதிகளை நகல் எடுப்பதாகும். அவர்களின் வளர்ச்சி தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும், 15ம் நூற்றாண்டில், ஏறத்தாழ 150 கர்த்தூசியன் துறவு இல்லங்கள் இருந்தன. தொடக்க முதல் இன்று வரை இத்துறவிகள், தங்களின் ஒழுங்குமுறைகளில் சிதைவுறாமல் இருப்பதால், சீர்திருத்தம் தேவையில்லாமல் இருக்கின்றது என்று, இச்சபை பற்றி பலகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

யாசக துறவு சபைகள்

மத்திய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடுந்தவ துறவு சபைகள், உலகிலிருந்து முற்றிலும் தனித்து வாழ்ந்தன. ஆயினும், 13ம் நூற்றாண்டில், புதிய வழிமுறையில் துறவு சபை ஒன்று உருவெடுத்தது. இந்தப் புதிய துறவு சபைகள், உலகினர் மத்தியில் வாழ்ந்துகொண்டே, கடுந்தவ துறவு சபைகள் பின்பற்றிய, தன்மறுப்பு, ஏழ்மை மற்றும் தன்னையே தியாகம் செய்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வு மற்றும் போதனையால் மக்களை மனந்திருப்ப விரும்பின. இந்த துறவு சபையினர், Friars என அழைக்கப்பட்டனர். சகோதரர்கள் எனப் பொருள்படும் Fratres என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். தங்களின் வாழ்வுக்குப்  பிச்சையெடுத்ததால், இவர்கள், பிச்சையெடுக்கும் சபைகள் என அழைக்கப்பட்டன. இவைகள் முக்கியமாக, பிரான்சிஸ்கன், தொமினிக்கன், கார்மேல் மற்றும் அகுஸ்தீன் சபைகளாகும். நகரங்கள் வளர்ந்து வந்தது, வர்த்தகத்தில் ஏற்பட்ட புத்தெழுச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற புதிய சமுதாய நிலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இச்சபைகள் உருவெடுத்தன. மக்கள் பெருமளவில் கிராமங்களிலிருந்து நகரங்களில் குடியேறத் தொடங்கியது, திருஅவைக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏனெனில், திருஅவை, பழைய கிராமப்புற, நிலப்பண்ணை பிரபுத்துவ முறையைக் கொண்டிருந்தது. அதனால், கிராம பங்குத் தளங்களிலிருந்து நகரங்களில் குடியேறிய மக்களுடன் தொடர்பின்றி விடப்படும் நிலையை திருஅவை எதிர்நோக்கியது. இந்த மக்கள், நகரங்களின் மதில்சுவர்களுக்கு வெளியே சேரிகளில் வாழ்ந்தனர். திருஅவை எதிர்கொண்ட இப்பிரச்சனைக்கு தீர்வாக, யாசகம் செய்த துறவு சபைகள் செயல்பட்டன.

பிரான்சிஸ்கன் சபை

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், துறவு வாழ்வைத் தழுவியதிலிருந்து யாசக சபைகளின் ஆரம்பம் இருந்தது. இப்புனிதர், இத்தாலியின் அசிசியில், கி.பி.1181 அல்லது கி.பி.1182ம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை, பணக்கார துணி வியாபாரி. பிரான்சிஸ் அவர்கள், இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், 1206ம் ஆண்டில் ஒருநாள், புனித தமியான் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்தபோது, அங்கு தொங்கிய சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். இவர் ஏழ்மையை தன் துணைவியாக்கிக் கொண்டார். இயற்கையில், படைப்புக்களில் கடவுளைக் கண்டார். இவர் துறவு பூண்ட பத்தே ஆண்டுகளில் பல ஆயிரம் இளையோர் இவரைத் தம் தலைவராக ஏற்று இவரைப் பின்தொடர்ந்தனர்.

06 February 2019, 16:02