தேடுதல்

அயர்லாந்து பேராயர் Eamon Martin அயர்லாந்து பேராயர் Eamon Martin 

பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு செப நாள்

சிறார் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக, பாவப்பரிகார மெழுகுதிரிகள், அயர்லாந்து நாட்டில் ஏற்றப்பட உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறார் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக, பாவப்பரிகார மெழுகுதிரிகள், அயர்லாந்து நாட்டின் அனைத்து பங்குத்தளங்களிலும், இம்மாதம் 15ம் தேதி ஏற்றி வைக்கப்படும் என, அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

சிறியோருக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து திருத்தந்தையுடன்,  உலக நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்கள் சந்தித்து விவாதிக்க உள்ள கூட்டத்திற்கும் ஒருவாரத்திற்கு முன்னர், மெழுகுதிரிகள் ஏற்றப்படும் முயற்சியை ஏற்பாடு செய்துள்ள அயர்லாந்து ஆயர்கள், பிப்ரவரி 15, வெள்ளிக்கிழமையை, பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறார்களுக்காகச் செபிக்கும் நாளாகவும் அறிவித்துள்ளனர்.

பாலியல் முறைகேடுகளால் வாழ்நாள் முழுவதும் மனதளவில் பாதிப்பை அனுபவித்து வரும் மக்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள செபத்தை, முறைகேடுகளுக்கு உள்ளான ஒருவரே எழுதியுள்ளது குறித்தும் தெரிவித்த அயர்லாந்து பேராயர் Eamon Martin அவர்கள், திருஅவை அதிகாரிகளால் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளானவர்களுக்காக செபிக்க வேண்டியதன் தேவையை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று கூறினார்.

பாவப்பரிகார மெழுகுதிரி என்பது, எல்லா பங்குதள கோவில்களிலும், ஆண்டு முழுவதும் ஏற்றி வைக்கப்பட்டு செபிக்க உதவவேண்டும் என்பது தன் ஆவல் எனவும் கூறினார் பேராயர் மார்ட்டின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2019, 16:33