தேடுதல்

Vatican News
பானமா உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்குச் செல்லும் இளையோர் பானமா உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்குச் செல்லும் இளையோர்   (ANSA)

இளையோர், திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பானமா திருத்தூதுப் பயணம் சனவரி 23-27 வரை நடைபெறுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பானமாவில் நடைபெறவுள்ள உலக கத்தோலிக்க இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் உலக இளையோர், இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பால் நிரப்பப்படுவார்கள், கடவுளின் அழைப்பிற்கு, தங்கள் செபங்கள் வழியாக, துணிச்சலுடன் பதில் சொல்வார்கள் என்று தான் நம்புவதாக, அந்நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

பானமாவில், உலக இளையோர் நாள் நிகழ்வுகள் துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்றவேளை, இந்நிகழ்வுகள் நடைபெறும் பானமா நகர் பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்கள், வத்திக்கான் வானொலியின் Massimiliano Menichetti அவர்களுக்கு, அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

இந்த கத்தோலிக்க இளையோர் விழா பற்றிய தனது நம்பிக்கைகள், இளையோர் நாள் தயாரிப்புகள், இளம் திருப்பயணிகளின் எதிர்பார்ப்புகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரவேற்கப்படும் முறை போன்றவை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார், பேராயர் Ulloa Mendieta.

இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 23ம் தேதி பானமா செல்வார் எனவும், இளையோரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, அவர்கள் திருஅவைக்கும், சமுதாயத்திற்கும் அவசியம் என்பதைச் சொல்வார் எனவும், அதற்கு இளையோர் செவிசாய்ப்பார்கள் எனவும், பானமா பேராயர் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற தயாரிப்புகள் பற்றியும் விளக்கிக் கூறிய அவர், இதில் செபம் முதன்மை இடம் பெற்றிருந்தது என்றும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் விழா நாளான 22ம் தேதியை, இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள் தொடங்கும் தேதியாக குறிக்கப்பட்டது என்றும், பேராயர் Ulloa Mendieta அவர்கள் கூறினார்.

15 January 2019, 15:32