தேடுதல்

கறுப்பு நாசரேன் திருஉருவ பவனியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் கறுப்பு நாசரேன் திருஉருவ பவனியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 

பக்தியும், வெறித்தனமான ஆர்வமும் வேறுபட்டவை

கறுப்பு நாசரேனை சுற்றி உருவாகும் பக்தி முயற்சிகள், வெறித்தனமான ஆர்வமாக மாறிவிடக் கூடாது - கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், கறுப்பு நாசரேனை சுற்றி உருவாகும் பக்தி முயற்சிகள் வெறித்தனமான ஆர்வமாக மாறிவிடக் கூடாது என்று, அந்நாட்டின் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

மணிலா பெருநகரில், சனவரி 9, இப்புதன் விடியற் காலையில், கறுப்பு நாசரேன் திரு உருவத்தைத் தாங்கிய பவனியின் துவக்கத்தில், திருப்பலி நிறைவேற்றிய மணிலா பேராயர், கர்தினால் தாக்லே அவர்கள், பக்திக்கும், வெறித்தனமான ஆர்வத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வலியுறுத்திக் கூறினார்.

ஒருவர் கொண்டுள்ள பக்தி என்பது, அன்பின் வெளிப்பாடாக உள்ளது என்றும், வெறித்தனமான ஆர்வம், அவர் தன்னையே முன்னிலைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாக உள்ளது என்றும், கர்தினால் தாக்லே அவர்கள், தன் மறையுரையில் விளக்கிக் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், கறுப்பு நாசரேன் திருவிழா கொண்டாடப்படும் வேளையில், இது பக்தி முயற்சியா அல்லது, வெறித்தனமான ஆர்வமா என்ற கேள்வியை எழுப்பும்வண்ணம் நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்ற எச்சரிக்கையை, தன் மறையுரையில் முன்வைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த பக்தி முயற்சியைத் தூய்மைப்படுத்த நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

சனவரி 9, இப்புதன் அதிகாலையில் துவங்கிய கறுப்பு நாசரேன் பவனி, குறைந்தது 20 மணி நேரங்கள் நீடிக்கும் என்பதும், இவ்வாண்டு, இந்த பவனியில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 50 இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2019, 15:23