தேடுதல்

ஜார்ஜ் H.W. புஷ் அவர்களை வத்திக்கானில் வரவேற்ற புனித 2ம் ஜான் பால் ஜார்ஜ் H.W. புஷ் அவர்களை வத்திக்கானில் வரவேற்ற புனித 2ம் ஜான் பால் 

மறைந்த அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் குறித்து அமெரிக்க ஆயர்கள்

அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்கள், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவரைச் சந்திக்க, இருமுறை, உரோம் நகர் வந்திருந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"தன்னலமற்ற வகையில் தன் நாட்டுக்காக பணியாற்றிய ஓர் உயர்ந்த மனிதரை நாம் நன்றியோடு நினைவு கொள்கிறோம்" என்ற சொற்களுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள், மறைந்த அரசுத்தலைவர், ஜார்ஜ் புஷ் அவர்களைக் குறித்து, செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 41வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவர்கள், நவம்பர் 30, கடந்த வெள்ளியன்று, தன் 94வது வயதில் மரணமடைந்ததையடுத்து, கர்தினால் டினார்டோ அவர்கள், டிசம்பர் 3, திங்களன்று இச்செய்தியை வெளியிட்டார்.

நாட்டுப் பணிக்கென தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அரசுத்தலைவர் புஷ் அவர்கள், நாணயம் மிகுந்த மனிதராக, பொறுப்பு மிகுந்த குடும்பத்தலைவராக, மக்களால் நினைவுகூரப்படுகிறார் என்று, கிளீவ்லாண்ட் ஆயர் நெல்சன் பெரேஸ் (Nelson Perez) அவர்கள் கூறினார்.

1988ம் ஆண்டு முதல், 1992ம் ஆண்டு முடிய அரசுத் தலைவராகப் பணியாற்றிய ஜார்ஜ் புஷ் அவர்கள், 'உன்னைச் சார்ந்தே அனைத்தும் உள்ளன என்ற எண்ணத்துடன் வேலை செய்; கடவுளைச் சார்ந்தே அனைத்தும் உள்ளன என்ற எண்ணத்துடன் செபம் செய்' என்று புனித இஞ்ஞாசியார் கூறிய சொற்களை, தன் பணிக்காலத்தின் இறுதி ஆண்டில், தன் உரைகளில் குறிப்பிட்டார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

தான் அரசுத்தலைவராக இருந்த வேளையில், ஜார்ஜ் புஷ் அவர்கள், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவரைச் சந்திக்க இருமுறை உரோம் நகர் வந்திருந்தார் என்பதும், வாழ்வை ஆதரிக்கும் கருத்துக்களில், இருவரும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டிருந்தனர் என்பதும், குறிப்பிடத்தக்கன.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 41வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு, டிசம்பர் 5 இப்புதனன்று, தலைநகர் வாஷிங்டனில், இறுதி மரியாதைகள் செலுத்தப்படுகின்றன. டிசம்பர் 6, இவ்வியாழனன்று அவரது உடல், டெக்சாஸ் மாநிலத்தில் புதைக்கப்படும். (Zenit/ CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 15:34