தேடுதல்

Vatican News
திருவருகைக்காலத்தின் 3ம் ஞாயிறு - மகிழும் ஞாயிறு திருவருகைக்காலத்தின் 3ம் ஞாயிறு - மகிழும் ஞாயிறு 

திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மகிழ்வதென்றால் என்ன, எதற்காக மகிழ்கிறோம், மகிழ்வை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறோம், என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் தேட, மகிழும் ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், வாய்ப்பளிக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

161218 திருவருகைக் காலம் 3 - ஞாயிறு சிந்தனை

"The Little Prince" (by Antoine de Saint-Exupery) அதாவது, “குட்டி இளவரசன்” என்பது, பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஓர் அரிதான, அழகான கற்பனைக் கதை. வேறு ஒரு கோளத்திலிருந்து, நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில் வரும் இளவரசன், பூமியில், ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. முதல்நாள் நிகழ்ந்த சந்திப்பிற்குப் பின், அடுத்த நாள், இளவரசன் வந்ததும், நரி அவனிடம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு, நரி சொல்லும் விளக்கம் அழகானது. "நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக, இருக்கமுடியாதே" என்று நரி சொல்கிறது.

நிகழ்வுக்கு முன் எழும் மகிழ்வைப்பற்றி கூறும் அழகானதோர் உவமை இது. நடக்கப்போகும் நல்லதொரு நிகழ்வுக்காக, அல்லது, மனதுக்குப் பிடித்த ஒருவரைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கும் நேரம் ஆனந்தமானது. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம். காத்திருக்கும் மகிழ்வைத் தருவது, திருவருகைக் காலம்.

இன்று நாம் கொண்டாடும், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை, Gaudete Sunday, அதாவது, மகிழும் ஞாயிறு என்று அழைக்கிறோம். மகிழ்வதென்றால் என்ன, எதற்காக மகிழ்கிறோம், மகிழ்வை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறோம், என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் தேட, இன்றைய வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

இறைவாக்கினர் செப்பனியா 3: 14-15

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்: மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

சீயோன் என்றும், எருசலேம் என்றும் அழைக்கப்படும் புனித நகரை, இறைவாக்கினர் செப்பனியா, ஒரு மகளாக உருவகித்துப் பேசுவது, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. நகரங்களையும், நாடுகளையும் பெண்களாக உருவகிப்பதும், இந்தியா போன்ற நாடுகளில், தெய்வங்களை பெண்களாக உருவகிப்பதும் பரவலாக நிலவும் பழக்கம். பெண்களை இவ்வாறு பலவழிகளிலும் பீடமேற்றி, வணங்கும் நாம், அவர்கள் மகிழ்வைக் குலைக்கும் பல்லாயிரம் கொடுமைகளையும் தொடர்கிறோம் என்பதை, வேதனையுடன், வெட்கத்துடன் ஏற்று, இறைவனிடமும், பெண்களிடமும் மன்னிப்பு கேட்போம்.

அடுத்ததாக, எருசலேமின் மகிழ்ச்சிக்கு, இறைவாக்கினர் செப்பனியா வழங்கும் காரணங்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிடுதல், பகைவர்களை அப்புறப்படுத்துதல் என்ற இரு காரணங்களை முதலில் கூறும் இறைவாக்கினர், "ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்" என்பதை, இம்மகிழ்ச்சிக்கு மகுடமானக் காரணமாகக் கூறுகிறார்.

இறைவாக்கினர் கூறும் "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார்" அல்லது, "இறைவன் நம்மோடு" என்ற உண்மையே, கிறிஸ்மஸ் விழாவின் மையம். இந்த உண்மைக்கு எதிர்மறையான எண்ணங்களை நமக்குள் திணிக்க, இன்றைய உலகம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. "இறைவன் நம்மோடு" என்ற உண்மை, மறைந்து, மறந்துபோகும் அளவு, ஒளி விளக்குகள், பரிசுகள், வாழ்த்து மடல்கள் என்ற வெளி ஆடம்பரங்களை, விளம்பர, வியாபார உலகம் நம் உள்ளங்களில் திணிக்கின்றன.

முதல் கிறிஸ்மஸ் நாளன்று, குழந்தை இயேசு பிறப்பதற்கு, சத்திரத்தில், இடமின்றி போனதுபோல், இன்று, சரித்திரத்தில், இயேசுவுக்கு மீண்டும் இடமின்றி போகும் அளவு, இவ்வுலகம் குவித்துவைக்கும் வர்த்தக எண்ணங்கள், நம் உள்ளங்களை நிறைத்துவிடாமல் இருக்க, நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல், மகிழ்வைக் குறித்து கூறும் எண்ணங்கள் நமக்கு ஒரு சில பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 4

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.

இச்சொற்களை, புனித பவுல், பிலிப்பியருக்கு எழுதிய வேளையில், அவர் சிறையில் பல்வேறு துன்பங்களை அடைந்து வந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எந்தச் சூழலிலும் ஒருவரால் மகிழ்ந்திருக்க முடியும், ஏனெனில், மகிழ்வு, ஒருவர் வாழும் சூழலிலிருந்து வருவதைக்காட்டிலும், அது, அவரது மனநிலையிலிருந்து உருவாகிறது என்ற உயர்ந்த பாடத்தை புனித பவுலடியார் நமக்குச் சொல்லித்தருகிறார்.

அடுத்ததாக, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் என்று, புனித பவுல் விடுக்கும் அழைப்பு, நாம் எத்தகைய 'இணைப்புகளில்' மகிழ்வடைகிறோம் என்ற ஆய்வை மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இன்றைய தலைமுறை, தொடர்புகளாலும், இணைப்புக்களாலும் சூழப்பட்டுள்ள ஒரு தலைமுறை. பலருக்கு இந்த இணைப்புக்களே அவர்களது உலகம் என்று கூறும் அளவு, ஒரு மயக்க நிலை உருவாகியுள்ளது. நம் கரங்களுக்குள் அடங்கிய கருவிகள் வழியே, எண்ணற்ற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் வசதி பெற்றுள்ளோம். முகமுகமாய் பார்த்து, நேருக்கு நேர் மற்றவர்களோடு, 'மெய்வழித்' (real) தொடர்பு கொள்வதற்குப் பதில், நமது கருவிகள் வழியே, 'மெய்நிகர்' (virtual) தொடர்புகள் கொள்வதில், நம் நேரம், திறமை அனைத்தையும் செலவிடுகிறோம்.

நம்மை இந்த 'மெய்நிகர்' வலையில், மாய இணைப்புகளில் சிக்கவைத்துள்ள சமூக வலைத்தள நிறுவனங்களைப் பற்றிய பயங்கரமான செய்திகளை, அண்மைய சில மாதங்களாகக் கேட்டுவருகிறோம். நம் செல்லிடப்பேசி வழியே, நமது விருப்பு, வெறுப்புக்கள், நாம் செல்லுமிடங்கள் என்று, அனைத்தையும் பற்றிய விவரங்களைத் திரட்டி வைத்துள்ள இந்நிறுவனங்கள், நாம் எடுக்கும் முடிவுகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. வாங்கும் பொருள்கள், விடுமுறைத் திட்டங்கள் என்ற தனிப்பட்ட முடிவுகளில், இதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த இந்நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக, நாடுகளில் நடக்கும் தேர்தல்களிலும் தலையிட்டு, முடிவுகளை மாற்றியுள்ளன. ஒரு சில நாடுகளில் வன்முறைகளைத் தூண்டும் போலிச் செய்திகளைப் பரப்புவதற்கும் இந்நிறுவனங்கள் வழிவகுத்துள்ளன.

அளவற்ற சக்தி பெற்ற சமூக வலைத்தள நிறுவனங்கள், நம்மை எவ்வகை இணைப்புக்களில் கட்டி வைத்துள்ளன, அவை எவ்விதம் நம்மத்தியில் செயற்கையான மகிழ்வை உருவாக்குகின்றன என்ற உண்மைகளை நாம் விரைவில் புரிந்து, விழித்துக்கொள்வது நல்லது. ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் என்று புனித பவுலடியார் அழைப்பு விடுக்கும்போது, நம் வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் இணைப்புகளைக் குறித்து தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இறைவனின் துணையை நாடுவோம்.

ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்தின் இரண்டு, மற்றும் மூன்றாம் ஞாயிறுகளில், திருமுழுக்கு யோவானைக் குறித்து சிந்திக்க, தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார். சென்ற ஞாயிறு, நாம் வாசித்த நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அந்த நற்செய்திப் பகுதியின் தொடர்ச்சியை இந்த வாரம் சிந்திக்கிறோம். சென்ற வாரம், “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்கா 3: 4) என்று திருமுழுக்கு யோவான் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பைக் கேட்ட மக்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்பதாக, இன்றைய நற்செய்தி துவங்குகிறது.

அவர்கள் கேட்ட கேள்விக்கு, "சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக்கொண்டு, கடும் தவம் செய்யுங்கள்" என்ற பதிலை, யோவானிடமிருந்து மக்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஏனெனில், யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வந்தவர். ஆனால், யோவான் கூறிய பதில், பகிர்தல், மன்னித்தல், யாரையும் ஏமாற்றாமல் வாழ்தல் என்ற பாணியில் அமைந்திருந்தது. (லூக்கா நற்செய்தி 3: 10-18)

இன்று நம் நடுவே திருமுழுக்கு யோவான் வருகிறார் என கற்பனை செய்து கொள்வோம். "நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று அவரிடம் நாம் கேள்வி எழுப்பினால், அவர் அன்று சொன்னதையே மீண்டும் நமக்குச் சொல்வார்: “உடையும் உணவும் உடையவர்கள் இல்லாதாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்; எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்று வாழுங்கள்” என்ற எளிமையான வழிகளையே அவர் மீண்டும் சொல்லித் தருவார்.

வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைத் தேடி எங்கும் செல்லவேண்டாம், அவை, நம்மைத் தேடி வருகின்றன, நம்மைச் சுற்றியே எப்போதும் உள்ளன. நாம்தான் அவற்றைக் காணத் தவறுகிறோம். இந்த அற்புத பாடத்தைச் சொல்லித்தரும் விழாதானே கிறிஸ்மஸ்! கடவுளைத் தேடி காடு, மலை, பாலைநிலம் என்று இஸ்ரயேல் மக்கள் அலைந்தபோது, அவர், ஒரு பச்சிளம் குழந்தையாய், மக்கள் மடியில் வந்து அமர விரும்பினார். கடவுளை இவ்வளவு எளிமையாய் காணமுடியும், அடையமுடியும் என்று சற்றும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அம்மக்கள், அக்குழந்தை கடவுளாக இருக்கமுடியாது என்று தீர்மானித்து, மீண்டும், கடினமான வழிகளில், கடவுளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

நம் கதை என்ன? நாம் எவ்வகையான கடவுளை, எந்தெந்த இடங்களில் தேடுகிறோம்? எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுத்துவருகிறோம்? கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னர் நாம் மேற்கொள்ளக்கூடிய ஒரு நல்ல ஆன்ம ஆய்வு இது.

இந்த ஆய்வில் நாம் காணும் எளிய பதில்கள் நம்மை வியப்படையச் செய்யும். சுற்றி வளைக்காமல் சொல்லப்படும் நேரடியான, எளிதான, தெளிவான, பதில்கள், பல நேரங்களில், நம் நெற்றியில் விழும் அடிபோல, நம்மை, பொறிகலங்கச் செய்யும்.

இராபர்ட் ஃபுல்கம் (Robert Fulghum) என்பவர் எழுதிய ஒரு நூலின் ஆரம்பம், நமது இன்றையச் சிந்தனையை நிறைவு செய்கிறது. "நான் உண்மையில் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பாலர் பள்ளியில் பயின்றேன்" (All I Really Need To Know I Learned In Kindergarten) என்ற நூலில் அவர் சொல்லியுள்ள கருத்துக்கள் இவை:

வாழ்வில் நான் எப்படி இருக்கவேண்டும், என்ன செய்யவேண்டும், அவற்றை எப்படி செய்யவேண்டும் என்ற அனைத்தையும், நான் பாலர் பள்ளியில் பயின்றேன். உண்மையான அறிவுத் தெளிவு, பல்கலைக்கழகம் என்ற உயரமான மலை மீது கிடைப்பது அல்ல. பாலர் பள்ளி என்ற மணல் மேட்டில் கிடைப்பது. நான் பாலர் பள்ளியில் கற்றுக்கொண்டவை இவைகளே:

அனைத்தையும் பகிர்ந்துகொடு. ஏமாற்றாமல் விளையாடு. யாரையும் அடிக்காதே. எடுத்தப் பொருட்களை அதனதன் இடத்தில் மீண்டும் வைத்துவிடு.

நீ அழுக்காக்கிய இடத்தை நீயே சுத்தம் செய். உனக்கு உரிமையில்லாத பொருளை எடுக்காதே. யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேள்...

இந்தப் பாலர் பள்ளிப் பாடங்களை மறக்காமல் நாம் இன்றுவரை வாழ்ந்திருந்தால், நம் வாழ்வு ஆனந்தமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை. நமது சமுதாயம், நமது அரசுகள், தொழில் நிறுவனங்கள், எல்லாமே, இந்த அடிப்படை அரிச்சுவடிப் பாடங்களைக் கடைபிடித்திருந்தால், இவ்வுலகம் இத்தனைப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்காது என்பது நிச்சயம்! பகிர்ந்து கொடுப்பது, ஏமாற்றாமல் விளையாடுவது, அழுக்காக்கியதைச் சுத்தமாக்குவது, தனக்கு உரிமையில்லாததை எடுக்காமல் இருப்பது, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது, என்ற அனைத்துமே, பாலர் பள்ளிப் பாடங்கள். இவை, இன்றைய உலகை, குறிப்பாக, அரசியல் உலகை, பயமுறுத்தும் பாடங்கள். இந்தப் பயத்தை விலக்கி, எளிய இப்பாடங்களை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள, குழந்தை இயேசுவிடம் மன்றாடுவோம். பகிர்தல், மன்னித்தல், நேர்மையாய் வாழ்தல் என்ற வழிகளில், குழந்தை இயேசு கற்றுத்தர விழைந்த உண்மையான, எளிமையான மகிழ்வை, நம்மைச் சுற்றியுள்ள சிறிய உலகில் பரப்புவோம்.

15 December 2018, 14:19