தேடுதல்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ 

ஈராக் நாடு மீண்டும் பிறப்பதற்கு மக்களின் பங்கு

போரினால் சிதைந்திருக்கும் ஈராக் நாட்டில், பல்வேறு இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பு மட்டுமே, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க இயலும் - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தை இயேசு வழங்கிய எடுத்துக்காட்டைப் பின்பற்றி, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், ஈராக் நாடு மீண்டும் பிறப்பதற்கு நம்மால் இயன்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

போரினாலும், வன்முறைகளாலும் சிதைந்திருக்கும் ஈராக் நாட்டில், பல்வேறு இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையே நலவவேண்டிய ஒன்றிப்பு மட்டுமே இந்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க இயலும் என்று கர்தினால் சாக்கோ அவர்களின் செய்தி கூறுகிறது.

மேலும், டிசம்பர் 24, வருகிற திங்கள் முதல், 28ம் தேதி முடிய, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஈராக் நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

திருஅவை வரலாற்றில் முதல் முறையாக, திருப்பீடத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் ஈராக் நாட்டிற்கு செல்கிறார் என்பதும், கர்தினால் பரோலின் அவர்கள், ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத், எர்பில் மற்றும் நினிவே சமவெளியின் சில நகர்களில் பயணம் மேற்கொள்வார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

இந்தப் பயணத்தின்போது, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் தலைமையேற்று நடத்தும் கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலியில், கர்தினால் சாக்கோ அவர்கள் இணைந்து திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:42