தேடுதல்

Vatican News
'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' 'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'  

பொதுக்காலம் 31ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

041118 ஞாயிறு சிந்தனை

நாளிதழ்கள், தொலைக்காட்சி, வலைத்தளம் ஆகியவை வழியே, ஒவ்வொருநாளும் நம்மை வந்தடையும் பெரும்பாலானச் செய்திகள், நம் உள்ளங்களை காயப்படுத்துகின்றன. கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 27ம் தேதி வெளியான ஒரு செய்தி, நம்மை, இன்னும் அதிகமாகக் காயப்படுத்தியிருக்கவேண்டும்.

இரத்தத்தில் தண்ணீரைக் கலந்து 6 மாதங்களாக விற்ற கும்பல் கைது என்ற தலைப்பில் வெளியான அச்செய்தியில், “உத்தரப் பிரதேசத்தில் இரத்தத்தில் குளுகோஸ் தண்ணீரை கலந்து கலப்பட இரத்தம் தயார் செய்து ஆறு மாதங்களாக விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். எச்ஐவி சோதனை ஏதும் செய்யாமல் அவர்கள் ஆயிரம் பேருக்கு இரத்தம் விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது” ( தி இந்து ) என்று கூறப்பட்டிருந்தது.

மனித இனம் தோன்றியது முதல், குறிப்பாக, வர்த்தக உலகில், இலாபம், பேராசை என்ற நோய்கள் தோன்றியது முதல், கலப்படம் என்ற கூடுதல் நோயும் நம்மைத் தொற்றிக்கொண்டது. உணவுப்பொருள்கள், மருந்துகள், பயன்படுத்தும் பொருள்கள் என்று, நம்மைச் சுற்றி, வெளி உலகில் உள்ள அனைத்திலும், கலப்படங்களும், போலிகளும் நீக்கமற நிறைந்துள்ளன. வெளியுலகை ஆட்டிப்படைக்கும் இந்நோய்கள், தற்போது, நம் உள் உலகின் உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றிலும், ஆழமாய் ஊடுருவியுள்ளன.

இரத்தத்தில் கலப்படம் என்ற இந்தச் செய்தியை ஓர் உவமையாக எண்ணிப்பார்க்கும் வேளையில், அது, நம் உள் உலகில் நடைபெறும் விபரீதங்களை, குறிப்பாக, அன்பு என்ற உன்னத உணர்வுக்கு எதிராக விளையும் விபரீதங்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

வாழ்வின் ஊற்றாக, ஒருவர் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தம், வேறு ஒருவருக்கு வாழ்வளிக்க உதவும் என்ற நோக்கத்துடன் வெளியே எடுக்கப்படுகிறது. அது, மனசாட்சியற்ற ஒரு வர்த்தகக் கும்பலால் தண்ணீருடன் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்பட்ட இரத்தம், மீண்டும் வேறு ஒருவருடைய உடலுக்குள், அதிலும் குறிப்பாக, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருடைய உடலுக்குள் செலுத்தப்படுகிறது. உயிரை வழங்கவேண்டிய இரத்தம், வர்த்தக உலகினரின் கலப்படத்தால், உயிரை எடுக்கக்கூடிய ஒரு கருவியாக மாற்றப்படுகிறது.

இதே கொடுமை, அன்பு என்ற உன்னத உணர்வுக்கும் நிகழ்கிறது. மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்பு என்ற உணர்வை, வர்த்தக உலகம் திருடிச்சென்று, தனக்கே உரிய வழிகளில் கலப்படம் செய்து, அந்தப் போலியான, கலப்படமான அன்பை, மீண்டும் மனித உள்ளங்களுக்குள், குறிப்பாக, அன்புக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்குள், விளம்பரங்கள் வழியே திணிக்கின்றது.

'அன்பை'க் குறிக்க, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 'Love' என்ற சொல், வர்த்தக, விளம்பர உலகிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல். இச்சொல், மிக எளிதாக, மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அதன் உண்மைப் பொருள் காணாமல் போய்விட்டதைப்போன்ற ஓர் உணர்வு எழுகிறது. ஓர் உணவு பிடிக்கும் என்றோ, தன் வீட்டு நாயை பிடிக்கும் என்றோ, பார்த்த படம், வாசித்த நூல் ஆகியவை பிடிக்கும் என்றோ நாம் தமிழில் கூறுவது அனைத்திற்கும், ஆங்கிலத்தில் 'Love' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். I love ice cream, I love my dog, I love going for a long walk… என்று அனைத்தையும் 'Love' என்ற சொல்லால் குறிக்கும்போது, அந்த சொல்லில் மட்டுமல்ல, அது குறித்துக்காட்டும் உணர்விலும், கூடுதலான கலப்படங்களும், போலிகளும் உருவாக வாய்ப்பு அதிகமாகின்றது. நம் உள் உலகின் ஆணிவேராக, அடித்தளமாக இருக்கவேண்டிய உண்மையான அன்பு உணர்வு, அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்ட, போலியான, கடை சரக்காக விற்கப்படுகிறது.

அன்பை இவ்வாறு கலப்படம் செய்து போலியாக்கி, விளம்பரம் செய்யும் இவ்வுலகில், இன்றைய ஞாயிறு வழிபாடு, அன்பைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது. கிறிஸ்தவ மறைக்கும், உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர், அன்புதான். இந்த அன்பு, முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார்.

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது, அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. இம்மறைநூல் அறிஞர், உண்மையைத் தேடுகிறார், ஏனைய மதத் தலைவர்களைப் போல், மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன் இவர் கேட்கவில்லை என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம், கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். அவற்றை, அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன், இயேசு, மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா? இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார்? என்ற கேள்விகள் எழலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு, இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல், அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன் மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை, இயேசு, ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப்பார்க்கலாம். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று, இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (மாற்கு 12: 31) என்று இயேசு சொன்ன சொற்களைக் கேட்டபோது, எனக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி, திருப்தி. காரணம் என்ன? இந்தக் கட்டளையை நிறைவேற்ற என்னால் முடியும் என்ற மகிழ்ச்சி அது. இயேசு, தன் சீடரோடு இறுதி இரவுணவு அருந்துகையில், அவர்களுக்குக் கொடுத்த கட்டளை, இக்கட்டளையைவிட, அதிகமான சவால் நிறைந்ததாக இருந்தது.

யோவான் நற்செய்தி 15 12-13

இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

இயேசு என்மீது அன்பு கொண்டிருப்பதுபோல் நான் பிறர்மீது அன்பு கொள்ளவேண்டும் என்ற கட்டளை, நான் கனவில் மட்டுமே காணக்கூடிய ஓர் இலட்சியம். ஆனால், என் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் அடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறியிருக்கும் கட்டளை, நான் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒரு சவால்.

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தார் மறைநூல் அறிஞர். இயேசுவின் வார்த்தைகளை முற்றிலும் ஏற்றுக்கொண்ட அவர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார் (மாற்கு 12: 33) என இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

மறைநூல் அறிஞர், மனப்பாடம் செய்த கட்டளைகளை, கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், உண்மையான ஆர்வத்தோடு பேசியதைக் கண்ட இயேசு, அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று, தன் வியப்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்துகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புநிறைந்த வாழ்வு, உண்மையிலேயே, ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளை விட நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாக வாழ்வைக் கூறும் பல்லாயிரம் நிகழ்வுகளை நாம் அறிவோம். அவற்றில் ஒன்று இதோ...

2012ம் ஆண்டு, சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இது. Deng Jinjie என்ற 27 வயது இளைஞர், ஓர் ஆற்றங்கரை ஓரமாக தன் இரு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆற்றில், இளவயது தம்பதியரும், அவர்களின் ஐந்து வயது குழந்தையும் நீந்திக் கொண்டிருந்தனர். அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக, இடுப்பு வளையம் போடப்பட்டிருந்தது. திடீரென, அக்குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெற்றோர் அலறவே, இளைஞர் Deng Jinjie அவர்கள், தனக்கு என்ன ஆகும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், அக்குழந்தையைக் காக்க ஆற்றில் குதித்தார். அந்நேரத்தில், அப்பெற்றோரும் ஆற்றின் ஆழத்திற்கு இறங்கவே, இளையவர் Deng Jinjie அந்த மூவரையும் காக்க வேண்டியதாயிற்று. ஆற்று நீரின் வேகம் கூடிக்கொண்டே இருந்ததால், அவர் அதிக போராட்டத்திற்குப் பின், மூவரையும் கரைக்கு அருகே கொண்டுவந்து சேர்த்தார். அந்த போராட்டத்தில் அவர் தன் சக்தியை முற்றிலும் இழந்ததால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அவரது உயிரற்ற உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிகழ்வின் மிகக் கொடூரமான ஓர் உண்மை என்னவென்றால், Deng Jinjie அவர்களால் காப்பாற்றப்பட்ட மூவரும் கரையை அடைந்ததும், தங்களைக் காப்பாற்றியவருக்கு என்ன ஆயிற்று என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கரையில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவர் அவர்களை இடைமறித்து, அந்த இளைஞனைப் பற்றி கேட்டபோது, "எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.

அன்பையும், சுயநலத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளை எல்லாம் காப்பாற்றினார். பலமுறை எரியும் நெருப்புக்குள் சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில் அந்தப் புகை மண்டலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி, இறந்தார்.

சீன இளைஞர், Deng Jinjieக்கும், இந்திய இளைஞருக்கும், அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தங்கள் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இந்தத் தியாகச் செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஒரு உந்துதலால் அவர்கள் இத்தியாகச் செயல்களைச் செய்தனர். "தன் நண்பர்களுக்காக உயிரைத் தருவதை விட மேலான அன்பு இல்லை" என்று இயேசு சொன்னதையும் தாண்டி, செயலாற்றிய இவ்விரு இளையோரைப் போல், பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில், தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

சுயநலமும், அன்பும் ஒன்றுதான் என்ற எண்ணங்களை மீண்டும், மீண்டும் விளம்பரம் செய்து, உண்மை அன்பை, கலப்படமான, போலியான ஓர் உணர்ச்சியாகச் சொல்லித்தரும் இவ்வுலகில், பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

03 November 2018, 16:43