தேடுதல்

Vatican News
கஜா புயல் பாதிப்பு கஜா புயல் பாதிப்பு  (AFP or licensors)

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஆயர்கள்

கஜா புயலால் நாகபட்டிணம் மற்றும், வேதாரண்யம் மாவட்டங்கள் கடும் பாதிப்பு. இந்த இயற்கைப் பேரிடரால், எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியைத் கடுமையாய்த் தாக்கியுள்ள கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களின் ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசும், திருஅவையும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் விடுத்து, இந்த இயற்கைப் பேரிடரால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இப்புயலில் இறந்தவர்களின் ஆன்மாக்கள், நிறை சாந்தி அடைய செபிப்பதாக அறிவித்துள்ள ஆயர்கள், உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரை பகுதியை கடுமையாய்த் தாக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உள்ளூர் மற்றும் தமிழக திருஅவை அதிகாரிகள் நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றனர்.

கஜா புயலால், எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

17 November 2018, 15:01