Cerca

Vatican News
முதியோருடன் இளையோர் முதியோருடன் இளையோர்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – முதுமையைப் போற்றுவோம்

நாம் விரும்பும் வருங்காலத்தை சமைப்பது நம் நோக்கமாக இருந்தால், 2030ம் ஆண்டுக்குள், 140 கோடியை எட்டவுள்ள அறுபதுக்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பற்றி நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் - ஐ.நா.

மேரி தெரேசா & அருள்பணி ஜோஸ் – வத்திக்கான்

பாராட்டுவது என்பது மிகச் சிறந்த செயல். ஒருவரின் மிக முக்கியமான ஏக்கம், தான் பாராட்டப்பட வேண்டுமென்பதே. பிறரில் இருக்கின்ற தலைசிறந்தவற்றை பாராட்டும்போது, அவை நமக்குரியதாகவும் ஆகின்றது. இக்காலத்தில் வாழ்கின்ற நம் வயது முதிர்ந்தவர்கள், நம்மைப் போன்று கூகுள் அல்லது விக்கிப்பீடியா போன்றவற்றைப் பயன்படுத்தாமல், இணையதள வசதியில்லாமல்  கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள், அறிவில் சிறந்து விளங்கியவர்கள். ஆயினும், இதனை நம்மில் பலர் மறந்து, வயதானவர்களைப் பயனற்றவர்களாக கருதும் மனநிலையில் வாழ்ந்து வருகிறோம். “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும், என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” என்ற திருப்பாடல் (71:9) எழுப்பும் அபயக்குரல் இன்று ஒரு சமுதாயப் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்று உலகில், ஏறத்தாழ எழுபது கோடிப் பேர், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். 2050ம் ஆண்டுக்குள், உலகில் 200 கோடிப் பேர், அதாவது உலக மக்கள் தொகையில் இருபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர், அறுபதும், அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை கருத்தில்கொண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதியன்று, உலக வயது முதிர்ந்தோர் நாள், அக்டோபர் முதல் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அறிவித்தது. 1991ம் ஆண்டில், வயதானவர்களுக்கென கொள்கைகளையும் ஐ.நா. நிறுவனம் வகுத்தது. 2002ம் ஆண்டில், இஸ்பெயின் தலைநகர் மத்ரிதில், முதுமை பற்றி இரண்டாவது உலக மாநாட்டை நடத்தியது. 21ம் நூற்றாண்டில் வயது முதிர்ந்த மக்கள் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிக்கும் முறைகள் பற்றியும் ஐ.நா. ஆய்வு நடத்தியது. நாம் விரும்பும் வருங்காலத்தை சமைப்பது நம் நோக்கமாக இருந்தால், 2030ம் ஆண்டுக்குள், 140 கோடியை எட்டவுள்ள அறுபதுக்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பற்றி நாம் சிந்தித்து பார்க்க வேண்டுமென ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. கத்தோலிக்கத் திருஅவையும் வயது முதிர்ந்தவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. முதுமை என்பது சகித்துக் கொள்ள வேண்டிய இயற்கையின் நியதியல்ல. மாறாக, அது மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய இறைவனின் மகத்தான கொடையாகும். பெற்றவர் இல்லா வெற்றிடம் எல்லாம், காற்று இல்லா விளைநிலம்தான். முதியோர் இல்லங்களில் வாழ்கின்ற வயது முதிர்ந்தோர் சொல்கிறார்கள், இன்று எனக்கு, நாளை உனக்கு என்று. பெரியமுள் மட்டும் மணி பன்னிரண்டைக் கடக்கக் கூடாது. சிறிய முள்ளும் கடந்துதான் தீர வேண்டும்.

இன்றைய நம் நிகழ்ச்சியில், முதுமையைப் போற்றுவோம், வயது முதிர்ந்தவர்களைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி ஜோஸ், குளித்துறை மறைமாவட்டம். இவர், உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

வாரம் ஓர் அலசல் - முதுமையைப் போற்றுவோம்
29 October 2018, 15:49