தேடுதல்

பிரான்ஸ் கோவில் கோபுர பின்னணியில் முழு நிலா பிரான்ஸ் கோவில் கோபுர பின்னணியில் முழு நிலா 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 10

அரசர் சார்லஸ், திருத்தந்தை ஒருவரால் உரோமையரின் பேரரசராக வாழ்த்தப்பட்டதே, மத்தியகால ஐரோப்பாவில் ஜெர்மன் திருஅவைக்கும் உரோம் ஆயருக்கும் இடையே உறவு முறிவதற்கு காரணம்

மேரி தெரேசா – வத்திக்கான்

புனித போனிபாஸ் அவர்கள், மத்தியகால ஜெர்மன் திருஅவையை நிறுவியவர். இவர், ஜெர்மனியின் திருத்தூதர் என அழைக்கப்படுகிறார். எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில், ஐரோப்பாவில் மறைப்பணியாளராகப் பணியாற்றியவர் மற்றும், ஜெர்மனியிலும், பிராங்க் அரசிலும், திருஅவையை சீரமைப்பு செய்ய உதவியவர் திருத்தந்தைக்கும், பிராங்க் இனத்தவருக்கும் இடையே உறவு ஏற்படுவதற்குப் பாதை அமைத்தவர். இதுவே வருங்கால ஐரோப்பாவிலும், இலத்தீன் கிறிஸ்தவ உலகை உருவாக்க வழியமைத்தது. இந்த வாய்ப்பை  புனித போனிபாஸ் அவர்களுக்கு வழங்கியவர், பிராங்க் இன அரசராவார். அச்சமயத்தில் ஊழலில் நிறைந்திருந்த பிராங் திருஅவை அதாவது ஜெர்மன் திருஅவையைச் சீர்படுத்த, அந்த அரசர் போனிபாஸ் அவர்களை அழைத்தார். கி.பி.742க்கும், 747ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நடைபெற்ற பொதுச்சங்கங்கள் வழியாக, ஜெர்மன் திருஅவையில் ஒழுங்குமுறைகள் புத்துயிர் பெறுவதை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். உரோம் திருத்தந்தைக்கும், பிராங்க் இனத்தவருக்கும் இடையே உறுதியான உறவை உருவாக்கினார். ஆனால் இவ்வுறவு, 754ம் ஆண்டில் முறிந்தது. திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்கள் தொடங்கி, திருத்தந்தையரின் ஆட்சியில் நிலவிய அரசியல் சூழல்களை அறிந்து கொண்டால்தான் இந்த உறவு முறிவுக்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியும்.

திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்கள், உரோம் நகரின் ஆட்சியாளராய் இருந்து, அதன் சுற்றுப் பகுதிகளையும் படிப்படியாய்க் கைப்பற்றி ஆட்சி செய்தார். திருஅவையின் பெருமளவான சொத்துக்களை பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தினார். பொது மக்களும், உரோம் ஆயரான திருத்தந்தையை, தங்களின் உண்மையான தலைவராக ஏற்றுக்கொண்டனர். அச்சமயத்தில், இத்தாலியின் ரவேன்னாவில், கீழை உரோமைப் பேரரசரின் உதவி அரசியல் நிர்வாகி ஆட்சி செய்துவந்தார். ஆனால் அதன் உண்மையான ஆட்சியாளர் திருத்தந்தையே. இந்த ஆட்சியாளர், திருத்தந்தையின் நிழலாகவே இருந்தார். 751ம் ஆண்டில், வட இத்தாலியிலிருந்து லொம்பார்தி இனத்தவர், ரவேன்னாவை ஆக்ரமித்து, அந்த உதவி ஆட்சியாளரை விரட்டிவிட்டனர். எனவே திருத்தந்தை, லொம்பார்தி பிரச்சனையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டியதாயிற்று. லொம்பார்தி இனத்தவர், கத்தோலிக்கராய் மாறியிருந்தாலும், இத்தாலி தீபகற்பம் முழுவதும் தாங்களே முதலாளிகள் என்ற இலக்கை வளர்த்து வந்தனர். இந்த எண்ணத்தை திருத்தந்தை அனுமதிக்கவில்லை. திருத்தந்தையின் சொந்தப் படைகள், லொம்பார்தி இனப் படைகளை எதிர்ப்பதற்கு போதுமானதாக இல்லாததால், திருத்தந்தை, ஜெர்மனியின் பிராங்க் இனத்தவரின் உதவியை நாடினார். திருத்தந்தையின் இந்த நடவடிக்கையைப் பயன்படுத்தி, பிராங்க் இன அரசர் பெப்பின், குளோவிஸ் மரபினரிடமருந்து பறிக்கப்பட்ட மகுடத்தைப் பெற்றார். இதனால் பிராங்க் இன அரசரின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. அரசர் பெப்பினும், உரோம் ஆயருக்கு விசுவாசமாக இருந்தார். ரவேன்னா உள்ளிட்ட, இத்தாலியின் பெரும்பகுதியை ஆட்சிசெய்யும் உறுதியை திருத்தந்தைக்கு அளித்தார், அரசர் பெப்பின். அதற்கு பிரதிபலனாக, திருத்தந்தையும், பெப்பின், அவரது இரு மகன்களான சார்லஸ், கார்லோமான் ஆகிய மூவருக்கும் “உரோமையரின் பாதுகாவலர்கள்” என, கவுரவப்பட்டமளித்தார். இது மேற்கத்திய கிறிஸ்தவ உலகில் இவர்களின் ஆட்சியின் ஆரம்பமாக அமைந்தது.

768ம் ஆண்டில் பெப்பின் இறந்தபோது, தனது இரு மகன்களுக்கும் ஆட்சியைப் பிரித்துக்கொடுத்தார். 771ம் ஆண்டில் கார்லோமான் இறந்தபின், முழு ஆட்சிப்பொறுப்பையும் சார்லஸ் ஏற்றார். உரோமையரின் பாதுகாவலர் என்ற வகையில், உரோமைத் தாக்கிய லொம்பார்தி அரசர் தெசிதேரியுசுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார் சார்லஸ். லொம்பார்திக்கும் தான் அரசர் என அறிவித்தார் சார்லஸ். நாளடைவில், திருத்தந்தை மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் இவர். கி.பி.800ம் ஆண்டுக்குள், ஐரோப்பாவில் பல இடங்களைக் கைப்பற்றி, மேற்கு உரோமை பேரரசின் அரசியல் அமைப்பை மீண்டும் அமைத்தார். 800ம் ஆண்டில் இவர் உரோமைக்கு வந்து, அச்சமயத்தில் திருத்தந்தையாகப் பணியாற்றிய, 3ம் லியோ அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட, பாலியல் மற்றும், பொய்சாட்சியக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தினார். ஆனால் விசாரணைக்கு உட்படாத திருத்தந்தை, தான் குற்றமற்றவர் என்பதை, நற்செய்தி மீது ஆணையாக பொதுவில் சத்தியம் செய்தார். பின்னர் ஒருநாள், கிறிஸ்மஸ் நாளில், புனித பேதுரு பசிலிக்காவில் நடந்த திருப்பலியில் சார்லஸ் கலந்துகொண்டவேளை, அவர் தலையில் மகுடத்தை வைத்து, உரோமையர்களுக்கு அமைதியைக் கொணர்ந்த மாபெரும் பேரரசர், அகுஸ்துஸ் சார்லஸ் வாழ்க என வாழ்த்தினார். கீழை உரோமைப் பேரரசுக்கு அஞ்சி, இதனை முதலில் ஏற்க மறுத்தார் சார்லஸ். திருத்தந்தையின் இச்செயலே, பிராங்க் இன அரசுக்கும், திருத்தந்தைக்கும் இடையே உறவு முறியக் காரணமானது. இது, மேற்கு மற்றும் உரோம் வரலாற்றில், ஒரு புதிய வரலாறு (சகாப்தம்) தொடங்க காரணமானது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2018, 15:44