Cerca

Vatican News
ஈராக் மொசூல் நகர இடிபாடுகளுக்கிடையே பழைய கோவில் ஈராக் மொசூல் நகர இடிபாடுகளுக்கிடையே பழைய கோவில்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 9

திருத்தந்தையால் ஜெர்மனிக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்ட புனித போனிபாஸ் அவர்கள், ஏனைய துறவிகள் மற்றும் அருள்சகோதரிகளின் உதவியுடன் ஜெர்மனியை முழுவதும் கத்தோலிக்க நாடாக மாற்றினார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தையருக்குப்பின், ஐரோப்பாவை கத்தோலிக்க ஐரோப்பாவாக மாற்றியதில் முக்கிய ஆன்மீக சக்தியாக இருந்தவர்கள் துறவிகள். அக்காலத்தில் ஐரோப்பாவில் மேலோங்கி இருந்த வேளாண் பொருளாதாரமும், கிராமப்புற மக்களும், மேற்கத்திய திருஅவைக்கு ஒரு சவாலாக இருந்தனர். எனவே, துறவிகள், கிராமப்புறங்களில் துறவு இல்லங்களை அமைத்து, மிகப் பயனுள்ள மறைப்பணியை ஆற்றினார்கள். கி.பி.397ம் ஆண்டில் இறைபதம் அடைந்த, பிரான்ஸ் நாட்டின் தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் அவர்கள், இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இவர், தூர்ஸ் நகருக்கு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் துறவு இல்லத்தை நிறுவி, அந்நாட்டின் கிராமப்பகுதியில் மாபெரும் மறைப்பணியாளராய் விளங்கினார். துறவு இல்லத்தில் உடல் உழைப்பை அதிகம் வலியுறுத்தினார். இப்புனிதருடைய துறவு அமைப்பு, புனித பாட்ரிக் அவர்களால் கத்தோலிக்கத்தை ஏற்ற அயர்லாந்து நாட்டின் செல்டிக் இன மக்களையும் கவர்ந்தது. புனிதர்கள் சாம்சன், இல்டிட், கேடக், ஜில்தாஸ், டேவிட் போன்ற, முக்கிய துறவு இல்லத் தலைவர்கள், செல்டிக் இன கிறிஸ்தவ சமூகத்திலிருந்து வந்தவர்கள்.

ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில், ஐரோப்பா எங்கும் பரவலாக, துறவு எண்ணத்தை விதைத்தில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த துறவிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Luxeuil துறவு இல்லம், ஏறத்தாழ 590ம் ஆண்டில், கொலம்பானுஸ் என்பவரால் நிறுவப்பட்டது. மேலும், பிரான்சிலுள்ள Jumeges, பெல்ஜியத்திலுள்ள Stavelot  மற்றும் Malmedy, சுவிட்சர்லாந்திலுள்ள St.Gall, இத்தாலியிலுள்ள Bobbio போன்ற துறவு இல்லங்கள், அயர்லாந்து மறைப்பணியாளர்களால் நிறுவப்பட்டன. இந்த துறவு இல்லங்கள், இயற்கையை வழிபட்டுவந்த விவசாயிகளைக் கிறிஸ்தவர்களாக மாற்றுவதில் முக்கிய அங்கம் வகித்தன. இந்த விவசாயிகள் வாழ்ந்த பகுதிகளில் துறவு இல்லங்களை அமைத்து, அவர்களோடு ஒருவராக, அவர்களின் வாழ்விலும், வேலைகளிலும் துறவிகள் பங்கெடுத்தனர். துறவிகள் காடுகளையும் சுத்தம் செய்தனர். அதோடு, நாகரீகமற்ற பழங்குடியினத்தவர் விட்டுச்சென்ற நிலங்களில் பெரும் பகுதியைப் பயிரிடத் தொடங்கினர். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் கலாச்சாரத்தை, புதிய மத உணர்வில் முற்றிலும் மாற்றியமைத்தனர் துறவியர். அந்த மக்கள் புனிதமாகப் போற்றி வந்த புனிதக் கிணறுகள், புனித மரங்கள், புனிதக் கற்கள் போன்றவற்றின் வணக்கத்தையும் அகற்றாது, அதேநேரம், அவற்றை கிறிஸ்தவப் புனிதர்களோடு இணைத்தனர்.

இதுவரை, இந்தத் துறவிகள் பின்பற்றி வந்தவை, கொலம்பானுஸ் அவர்களால் நிறுவப்பட்ட அயர்லாந்து துறவு வாழ்வு அமைப்பாகும். அதாவது, கடும் தவம் மற்றும் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் போன்ற, எகிப்திய துறவு வாழ்வு அமைப்பை, இந்த அமைப்பினர் பின்பற்றி வந்தனர். இந்த வாழ்வுமுறை, ஐரோப்பாவில் வெற்றியடைந்தாலும், இந்த வாழ்வில் நிலவிய, உறுதியான தலைமைத்துவம் இல்லாமை, தவத்தால் உடலைக் கடுமையாகத் துன்புறுத்துதல் போன்றவை உதவி செய்யவில்லை. எனவே, மேற்கத்திய மனநிலைக்கு ஏற்ற விதிமுறைகளைக் கொண்ட துறவு வாழ்வு தேவைப்பட்டது. இத்தகைய துறவு வாழ்வுக்கு உதவியவர், இத்தாலியின் நோர்சியா நகர் புனித பெனடிக்ட். இவர் ஏறத்தாழ கி.பி.520ம் ஆண்டில், மொந்தே கசினோவில் துறவு இல்லத்தை நிறுவினார். இவரது விதிமுறைகள், இலத்தீன் கலாச்சாரத்தைத் தழுவியிருந்தன. எனவே அந்த துறவு வாழ்வுமுறை ஐரோப்பாவில் வேகமாகப் பரவியது. திருத்தந்தை பெரிய கிரகரி அல்லது முதலாம் கிரகரியைத் தவிர, புனித பென்டிக் போன்று, எந்த ஒரு தனிப்பட்ட மனிதரும், ஐரோப்பாவில் நாகரீகமற்ற பழங்குடியினத்தவர் மத்தியில் கத்தோலிக்கத்தை மிக உறுதியாக வேரூன்றச் செய்யவில்லை எனச் சொல்லப்படுகின்றது. புனித பெனடிக்ட் சபைத் துறவிகள் இங்கிலாந்துக்கு கிறிஸ்தவத்தை எடுத்துச் சென்றனர். புனித அகுஸ்தீன், திருத்தந்தை கிரகரியின் பெனடிக்ட் துறவு இல்லத்திருந்து இங்கிலாந்துக்கு மறைபரப்பச் சென்றவர். இங்கிலாந்தில் Ripon, Hexham, Wearmouth, Jarrow ஆகிய இடங்களிலுள்ள புகழ்பெற்ற புனித பெனடிக்ட் துறவு இல்லங்கள், கிறிஸ்தவ மறைப்பணியை ஆற்றியதுடன், கி.பி. 650க்கும் 680ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், புதிய உயிரூட்டமுள்ள கிறிஸ்தவ கலாச்சாரத்தையும் உருவாக்கின. எட்டாம் நூற்றாண்டில், ஆங்லோ-சாக்சன் பெனடிக்ட் சபை துறவிகள், தங்கள் சமய நடவடிக்கைகளால், அறிவுத்திறமையால், இலக்கியத்தால் தலைசிறந்து விளங்கினர் என்று சொன்னால் மிகையாகாது.

மேற்குலகில், புனித பெனடிக்ட் சபை துறவிகள், மிகவும் வல்லமைமிக்கவர்களாக, திருத்தந்தைக்கு பக்கபலமாக, கத்தோலிக்கத்தைப் பரப்பியுள்ளனர். உரோம் திருத்தந்தைக்கும், திருத்தந்தையின் அதிகாரத்திற்கும் மிகவும் விசுவாசமாக இருந்து,   எட்டாம் நூற்றாண்டில், திருஅவையில் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு, முக்கிய காரணிகளாகச் செயல்பட்டனர். இத்துறவிகளில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர், கி.பி.754ம் ஆண்டில் இறந்த புனித Winfrid. இவர் பின்னாளில் புனித போனிபாஸ் (Boniface) என அழைக்கப்பட்டார். ஜெர்மனியின் திருத்தூதர் என அழைக்கப்படும் இவர், ஜெர்மனியில் மத்தியகாலத்தில் திருஅவையை நிறுவியவர். திருத்தந்தையால் ஜெர்மனிக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்ட, புனித போனிபாஸ், ஏனைய துறவிகள் மற்றும் அருள்சகோதரிகளின் உதவியுடன் ஜெர்மனியை முழுவதும் கத்தோலிக்கமாக மாற்றினார். ஜெர்மனியில் மறைமாவட்டங்களையும், துறவு இல்லங்களையும் இவர் நிறுவினார்.

17 October 2018, 15:51