தேடுதல்

Vatican News
எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். - மாற்கு 10:9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். - மாற்கு 10:9 

பொதுக்காலம் 27ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்." மாற்கு 10:9 என்று இயேசு கூறும் சொற்கள், திருமண வாழ்வில், கணவன் மனைவி இருவருக்கு மட்டும் அல்ல, மாறாக, அவர்களைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் உள்ள முக்கியமான கடமையை நினைவுறுத்தும் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

071018 ஞாயிறு சிந்தனை

அக்டோபர் 3, கடந்த புதனன்று, உலக ஆயர்களின் 15வது மாமன்றம் வத்திக்கானில் துவங்கியது. இம்மாமன்றத்திற்கு, “இளையோர், நம்பிக்கையும், அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலும்” (Young People, the Faith and Vocational Discernment) என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையக்கருத்தில், "அழைத்தல்" என்ற சொல்லைக் கண்டதும், குருத்துவ, அல்லது, துறவற அழைத்தல் என்ற குறுகிய பொருளே முதலில் மனதில் தோன்றுகிறது. குருக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமல்ல, திருமண வாழ்வில் ஈடுபடுவோருக்கும் இறைவன் சிறப்பான அழைப்பு விடுக்கிறார் என்பதே, "அழைத்தல்" என்ற சொல்லின் முழுமையான பொருள். இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் இத்தருணத்தில், இளையோருக்கு, இறைவன் விடுக்கும், சவால்கள் நிறைந்த அழைப்பான திருமண வாழ்வைக் குறித்து சிந்திக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளிக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்குமுன், 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், குடும்பத்தை மையப்படுத்தி, 14வது உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெற்றது. அந்த மாமன்றத்தின் துவக்கத் திருப்பலி, அக்டோபர் 4ம் தேதி, அதாவது, பொதுக்காலத்தின் 27ம் ஞாயிறன்று நிகழ்ந்தது. எனவே, இன்று நாம் கேட்கும் இதே வாசகங்கள், அன்றும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், திருஅவையின் அனைத்து கோவில்களிலும் பறைசாற்றப்பட்டன.

14வது மாமன்றமும், 15வது மாமன்றமும் துவங்கிய வேளைகளில், திருமண வாழ்வைக் குறித்து பேசும் ஞாயிறு வாசகங்கள் நம்மை அடைந்திருப்பதை, இறைவன் நமக்குக் வழங்கும் ஓர் அருள் அடையாளமாகக் கருதலாம்.

திருமணத்திற்கு நாள் குறிக்க, ஓர் இளைஞன், பங்குத்தந்தையைத் தேடிச்சென்றார்.  இளைஞன், விவிலியத்தை எவ்வளவு தூரம் வாசித்திருக்கிறார் என்றறிய விரும்பியப் பங்குத்தந்தை, இளைஞனிடம், “இயேசு, திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவ்விளைஞன், "ம்.. சொல்லியிருக்கார் சாமி" என்று கூறவே, பங்குத்தந்தை, "என்ன சொல்லியிருக்கிறார்? சொல்லுங்கள்" என்று, ஆவலோடு காத்திருந்தார். இளைஞன், சிறிதும் தயக்கமின்றி, “‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார்" என்று பெருமையுடன் சொல்லி முடித்தார். பங்குத்தந்தை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

வேடிக்கைத் துணுக்குகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் உதவும் என்பதை மறுக்க இயலாது. திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? இக்கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு தகுந்த விடைகள் தேட, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

திருமணத்திற்கு முன், குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவையனைத்தும் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்கிறோம். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கும், எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தமும் நடைபெறுகின்றன. இத்தனைப் பொருத்தங்கள் பார்த்து, ஒப்பந்தங்கள் செய்து, நடத்தப்படும் திருமணங்கள் வெற்றிகரமாக அமையாவிட்டால், ஒருவர் ஒருவரை குறைகூறும் படலம் ஆரம்பமாகிறது.

திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறிய வேண்டும்? பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது - "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்." மனப்பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது, மிகவும் அரிது. மனம், குணம் இவை பொருந்தவில்லை என்றால், போகப் போகச் சரியாகிவிடும் என்று, நமக்கு நாமே சமாதானம் வேறு சொல்லிக்கொள்கிறோம். மனம், குணம் இவற்றில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவற்றிற்கு என்ன உத்தரவாதம்? மனம், குணம் இவற்றைப் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட, இந்த உத்தரவாதம் இல்லையே.

உத்தரவாதத்தைப் பற்றி பேசும்போது, மற்றோர் எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும்போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்துவிட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்ற முடியுமா? இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி.

பரிசேயர் கேட்கும் கேள்வி இது: "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" (மாற்கு 10:2) மனைவி, திருமணம் என்ற சந்தையில் வாங்கிய ஒரு பொருள் போலவும், அந்தப் பொருள், திருப்திகரமாக இல்லாததால், கணவன் அந்தப் ‘பொருளை’த் திருப்பிக் கொடுப்பது போலவும், இந்தக் கேள்வியின் தொனி அமைந்துள்ளது!

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ள, இஸ்ரயேல் சமுதாயத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவிய உறவைப் புரிந்துகொள்ளவேண்டும். திருமண ஒப்பந்தத்தின் விளைவாக, மனைவி, கணவனின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டார். பெண்ணின் உரிமையும், சுதந்திரமும் பறிபோயின.

மோசே, தன் சட்டத்தின் வழியே, இந்த அநீதியை ஓரளவு குறைக்க முயன்றார். மனைவியை விலக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், மறுமணம் செய்வதற்கும் ஏற்றவாறு, 'மணவிலக்குச் சான்றிதழ்' வழங்கச் சொன்னார்.

திருமணத்தின் புனிதத்தை உணராமல், அதை, ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்ற அளவில் மட்டுமே கருதிவந்த பரிசேயர்கள், மோசே கூறிய மணவிலக்குச் சான்றிதழை வைத்து, திருமண உறவை முறிக்கமுடியும் என்று இயேசுவிடம் கூறுகின்றனர். அவர்களிடம், இயேசு, மோசேயைவிட மேலான இறைவனின் திட்டத்தை தெளிவுபடுத்த, தொடக்க நூலில் கூறப்பட்ட வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறார்.

மாற்கு 10:6-8

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு, தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.

இதற்குப்பின் இயேசு கூறும் சொற்கள், திருமண வாழ்வில் கணவன் மனைவி இருவருக்கு மட்டும் அல்ல, மாறாக, அவர்களைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் உள்ள முக்கியமான கடமையை நினைவுறுத்தும் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன.

மாற்கு 10:9

எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

இயேசு தந்த தனித்துவம் மிகுந்த இக்கட்டளையை மனிதர்களாகிய நாம் எத்தனையோ வழிகளில் மீறியிருக்கிறோம். கடவுள் இணைத்ததை மனிதர்களாகிய நாம் பல வழிகளில் பிரித்துவருகிறோம். இன்றைய உலகில், மணமுறிவு என்பது மிக, மிக சிறு காரணங்களால் உருவாவதை அவ்வப்போது செய்திகளாகக் கேட்டு வருகிறோம்.

மணமுறிவுக்காக நீதி மன்றத்தில் விண்ணப்பித்திருந்த தம்பதியரிடையே, இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று கருத்து சேகரிப்பு நடத்தியது. மணமுறிவுக்கு அவர்கள் தந்த காரணங்கள், வேடிக்கையாகத் தோன்றினாலும், வேதனையான நம் உண்மை நிலையை, வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

"நான் செல்லும் விருந்துகளுக்கு என் மனைவி வருவதில்லை" என்று ஆணும், "நான் பொருள்கள் வாங்கச் செல்லும்போது, என் கணவன் உடன் வருவதில்லை" என்று பெண்ணும் சொல்லும் காரணம் துவங்கி, குறட்டை விடுதல், சாப்பாட்டுப் பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் இத்தொகுப்பில் சொல்லப்பட்டுள்ளன.

இதற்கு நேர் மாறாக, அன்றைய கால திருமணங்கள் அமைந்திருந்ததைப் பற்றி கதைகள் சொல்லப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமண வாழ்வை நிறைவு செய்த ஒரு தம்பதியரிடம், அவர்கள் வாழ்வின் இரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "நாங்கள் பிறந்து வளர்ந்த காலத்தில், ஏதாவது ஒரு பொருள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதை தூக்கி எறிந்துவிடுவதில்லை. அதை எப்படியாவது சரி செய்து, மீண்டும் வேலை செய்ய வைத்துவிடுவோம். அதையே நாங்கள் திருமண வாழ்விலும் கடைபிடித்தோம்" என்று, 85 வயது நிறைந்த கணவர் சொன்னார்.

மனநல மருத்துவரும், இறையியல் ஆசிரியருமான நீல் கிளார்க் வாரன் (Neil Clark Warren) அவர்கள், பல ஆண்டுகளாக திருமண வாழ்வில் இணைந்துள்ள 100 தம்பதியரிடமிருந்து, வாழ்வின் இரகசியங்களைத் தொகுத்தார். அதனை 'வெற்றிகரமான மணவாழ்வு' (The Triumphant Marriage) என்ற நூலில், பத்து பகுதிகளாக வழங்கியுள்ளார். இந்நூலில் அவர் கூறும் ஒரு கருத்து, இளையோர், தங்கள் காதல் உறவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் 'கெமிஸ்ட்ரி' என்ற சொல்லை மையப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, ஓர் ஆணும், பெண்ணும் ஒருவர் ஒருவர் மீது ஈர்ப்புக் கொள்வதைப் பற்றிப் பேசும்போது, "எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது" என்று கூறுவர். அதேபோல், அவர்கள் பிரியும்போது, "ஆரம்பத்தில் எங்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி இப்போது இல்லை" என்று சொல்பவர்களும் உண்டு.

'கெமிஸ்ட்ரி' என்பது வெளியிலிருந்து அவர்களுக்குள் வந்துசேர்ந்த ஒரு பொருளைப்போல் கருதும்போது, பிரச்சனைகள் உருவாகும். அதற்குப்பதில், தங்களுக்குள் ஏற்பட்ட 'கெமிஸ்ட்ரி'யை, சக்திமிக்கதாக மாற்ற, புதிது, புதிதாக முயற்சிகளை, இருவரும் மேற்கொள்வது அவசியம். எந்த ஒரு வேதியல் பொருளும், தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லையெனில், நாளடைவில் தன் சக்தியை இழந்துவிடும் அதேபோல், காதல் உணர்வுகளையும் கருத்தாக வளர்க்காமல், அப்படியே விட்டுவிட்டால், அவை நீர்த்துப்போகும் என்று வாரன் அவர்கள் அறிவுரை வழங்குகிறார்.

"தரமான உறவுக்கு மருந்து" (Prescription for a Quality Relationship) என்ற தலைப்பில், ஆலன் பே (Allen Fay) என்ற மனநல மருத்துவர் எழுதியுள்ள நூலில் கூறும் ஓர் அழகிய அறிவுரை இது: "உறவை வளர்ப்பதில், நல்ல வேதியல் மேதையாக மாறுவது முக்கியம். அதே வேளையில், உறவை வளர்ப்பதற்கு, கணக்கு சரியாகத் தெரியாதவராக மாறுவதும் அவசியம்" என்று கூறியுள்ளார். (But as important as it is to become a good chemist, it is equally important to become a bad mathematician.)

நம் உறவுகளில், எத்தனை முறை தவறுகள் நிகழ்ந்தன, எத்தனை பரிசுகள் பரிமாறப்பட்டன, யார் அதிகம் நேரம் காத்திருந்தது போன்ற கணக்கு பார்க்கும் நேரங்கள் குறைந்து, இருவருக்கும் இடையே இருக்கும் உறவை இன்னும் சக்தி மிகுந்ததாக மாற்றும் 'கெமிஸ்ட்ரி' மாற்றங்களை உருவாக்க கற்றுக்கொண்டால், குடும்ப உறவு, உன்னத நிலையை அடையும்.

மணமுறிவுகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள். எத்தனையோ குழந்தைகள், பிரிய நினைத்த தங்கள் பெற்றோரை இணைத்து வைத்துள்ளன என்பதை செய்திகள் வழியே அறிகிறோம். இந்த ஞாயிறு, மூன்றாவது வாரமாக, குழந்தைகள் வழியே பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

யார் பெரியவர் என்று, போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்... இறையாட்சி இத்தகையோருக்கே உரியது" என்கிறார். மூன்று வாரங்களாய், குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள, இயேசு தொடர்ந்து நினைவுறுத்தி வருகிறார். வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான பணிவை இறைவனிடம் வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம். இன்று, அக்டோபர் 7, செபமாலை அன்னை மரியாவின் திருநாள். கானா திருமண விருந்தில் குறை ஒன்று உருவானதும், அதை இயேசுவின் கவனத்திற்கு கொண்டு வந்தவர், அன்னை மரியா. "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்ற சொற்கள் வழியே, திருமண வாழ்வுக்குத் தேவையானதொரு முக்கியப் பாடத்தைச் சொல்லித்தந்தவர் மரியா. அந்த அன்னையிடம், நம் உறவுகள், மற்றும், நண்பர்கள் வட்டங்களில், மணவாழ்வில் உருவாகியிருக்கும் குறைகளைக் கூறுவோம். அன்னையின் துணையையும், வழிநடத்துதலையும் நாடுவோம்.

06 October 2018, 16:29