தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை 23ம் ஜான் புனித திருத்தந்தை 23ம் ஜான்  

இமயமாகும் இளமை - நம்பிக்கைகளோடும், கனவுகளோடும், வாழுங்கள்

"உங்களுடைய அச்சங்களோடு அல்ல; மாறாக, உங்கள் நம்பிக்கைகளோடும், கனவுகளோடும் கலந்துபேசுங்கள்." - திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இளையோருக்கு கூறிய அறிவுரை

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

60 ஆண்டுகளுக்கு முன், 1958ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 28ம் தேதி, திருஅவையின் தலைமைப் பொறுப்பை, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் ஏற்றார். 60 ஆண்டுகளுக்குப் பின், அதே அக்டோபர் 28ம் தேதி, 15வது உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில் நிறைவடையும். திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் துவக்கிவைத்த 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம், கத்தோலிக்கத் திருஅவையில் வசந்தத்தைக் கொணர்ந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. அதேபோல், இளையோரை மையப்படுத்தி, இளையோரின் ஆர்வமான பங்கேற்போடு நடைபெற்றுவரும் இந்த மாமன்றத்தின் பயனாக, மற்றுமோர், வசந்தம் திருஅவையில் உருவாகும் என்று நம்புகிறோம். மாமன்றத்தில் பங்கேற்கும் இளையோர், தங்கள் கருத்துக்களை, அச்சமின்றி வெளிப்படுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார். அத்துடன், தன் பல்வேறு உரைகளில் கூறிவந்துள்ள ஒரு கருத்தை, இந்த மாமன்றத்தின் துவக்க உரையில், மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். வயதில் முதிர்ந்தோர், தங்கள் அனுபவத்தால் பெற்றுள்ள ஞானத்தை, இளையோருக்கு வழங்கவேண்டும் என்றும், இளையோர், தங்கள் கனவுகளை, வயதில் முதிர்ந்தோருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் துவக்க உரையில் கூறினார்.

இளையோர், அச்சங்களைக் களையவேண்டும், நம்பிக்கையையும், கனவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 60 ஆண்டுகளுக்குமுன் கூறியுள்ளார்:

"உங்களுடைய அச்சங்களோடு அல்ல; மாறாக, உங்கள் நம்பிக்கைகளோடும், கனவுகளோடும் கலந்துபேசுங்கள். உங்கள் தோல்விகளைப்பற்றி சிந்திக்காதீர்கள்; மாறாக, இன்னும் நீங்கள் நிறைவேற்றாத திறமையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். நீங்கள் முயன்று, தோற்றுப்போனதை பற்றி கவலை கொள்ளாதீர்கள்; மாறாக, நீங்கள் இன்னும் சாதிக்கக்கூடியதைப்பற்றி அக்கறை கொள்ளுங்கள்."

திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், தன் 77வது வயதில் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, அவர் எதையும் பெரிதாகச் சாதிக்கமாட்டார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவரோ, திருஅவை வரலாற்றில், தனியொரு இடம்பிடிக்கும்வண்ணம், 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் துவக்கினார். தூய ஆவியாரின் புத்துணர்வைச் சுமந்துவரும் காற்று, உள்ளே புகும்படி, திருஅவையின் சன்னல்களை, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் திறந்து வைத்ததால், கத்தோலிக்கத் திருஅவை, தன் இளமையை மீண்டும் கண்டுகொண்டது.

1962ம் ஆண்டு, அக்டோபர் 11ம் தேதி, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவங்கிய நாள் என்பதால், அந்த நாளே, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

09 October 2018, 16:27