தேடுதல்

இந்தோனேசியா நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறார் இந்தோனேசியா நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறார் 

உணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்

பூமி உணவளிப்பது, மக்களின் தேவைகளை நிறைவுச் செய்யவே அன்றி, அவர்களின் பேராசைகளை நிறைவுச் செய்ய அல்ல.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா பெருமறைமாவட்டத்தில் உள்ள 65 பங்குதள மக்களும், ஏழைகளுடன் தங்கள் உணவை பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார், ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo Hardjoatmodjo.

இச்செவ்வாய்க் கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக உணவு நாளையொட்டி, 'பன்மைத் தன்மையில் உணவால் ஒன்றிப்பு' என்ற தலைப்பில், மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பேராயர் Suharyo அவர்கள், ஏழை மக்களின் உணவு தேவை என்பது, மக்களிடையே ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு இட்டுச் செல்லவேண்டுமேயொழிய, பேராசைக்கு அல்ல என, அதில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தேவைகளை நிறைவுச் செய்யவே பூமி உணவையளிக்கிறது, அவர்களின் பேராசையை நிறைவுச்செய்ய அல்ல என்ற, மகாத்மா காந்தியின் வார்த்தைகளையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Suharyo அவர்கள், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை, 2016ம் ஆண்டில் 80 கோடியே 40 இலட்சமாக இருந்தது, 2017ம் ஆண்டில் 82 கோடியே 10 இலட்சமாக உயர்ந்துள்ளது குறித்தும், எடுத்துரைத்துள்ளார்.

உணவை வீணாக்காமல், தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்ண, இந்தோனேசிய மக்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் பேராயர்.

ஒவ்வொரு மனிதரின் சிறு முயற்சிகளும் உலகில் பசியைப் போக்க பேருதவியாக இருக்கும் என, தன் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில், மேலும் அழைப்பு விடுத்துள்ளார், பேராயர் Suharyo (UCAN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2018, 17:02