Cerca

Vatican News
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மாற்கு 8:34) "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மாற்கு 8:34) 

பொதுக்காலம் 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு கேட்பது, சாதாரண கேள்வி அல்ல, இது ஓர் அழைப்பு. இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்தொடர்வது, என்ற சவால் இணைந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

160918 ஞாயிறு சிந்தனை

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த டயோஜீனஸ் என்ற கிரேக்க மேதை, ஒருநாள், நடுப்பகல் வேளையில், எரியும் விளக்கை கையிலேந்தி, ஏதென்ஸ் நகர வீதிகளில், எதையோ தேடிக்கொண்டிருந்தார். மக்கள் அவரிடம் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "நல்ல மனிதர்களைத் தேடுகிறேன்" என்று சொன்னார்.

மனித சமுதாயம், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், "நல்ல மனிதர்களை"த் தேடியதென்று, வரலாறு நமக்குச் சொல்கிறது. நாம் வாழும் இன்றையச் சூழலிலோ, மனிதர்களையேத் தேடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மறுக்க இயலாது.

நாடுகளுக்கிடையிலும், உள்நாட்டிலும் நிலவும் மோதல்கள், இனவெறி, மதவெறி, சாதிவெறி, சுற்றுச்சூழல் சீரழிவு, வறுமை என்ற பல பிரச்சனைகளால், புலம்பெயரும் கோடான கோடி மக்கள், 'மனிதர்கள்' என்ற அடிப்படை அடையாளத்தை, தங்களிலும், பிறரிலும், தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை, நாம் வேதனையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். 'மனிதர்' அல்லது, 'மனிதம்' என்ற அடையாளங்களைத் தேடிக்கொண்டிருக்கும் நமக்கு, இன்றைய ஞாயிறு வழிபாடு, வழிகாட்ட வருகிறது.

நம்மைப்பற்றியும், வாழ்வைப்பற்றியும் நாம் தேடல்களில் ஈடுபட்டுள்ளோம். நம்மை நாமே தேடும் நேரங்களில், மற்றவர்களுக்கு நான் யார்? மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது, நம் தேடலில் எழும் முக்கிய கேள்விகள். இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இன்றைய நற்செய்தியின் வழியே, இயேசு கேட்கும் இரு கேள்விகள், நம் சிந்தனைகளை இன்று வழிநடத்தட்டும் - "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று, இயேசு எழுப்பிய முதல் கேள்வியைச் சிந்திக்கும்போது, சென்னையில், அரசு அதிகாரிகள் சொன்ன சில தகவல்கள், நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாளும், அன்று காலையும், முந்திய நாள் இரவும், ஊடகங்களில் வந்த தகவல்களை சேகரித்து, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, பிரதம மந்திரி, அல்லது, முதலமைச்சரிடம் கொடுப்பதற்கென அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல்களைத் திரட்டுவதன் முக்கிய நோக்கம், நாட்டில், அல்லது, மாநிலத்தில், தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சியைப்பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதே.

ஒவ்வொரு நாள் காலையிலும், இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அக்கேள்வியின் பின்னணியில், தலைவர்களை உறுத்திக்கொண்டிருப்பன, பயமும், சந்தேகமும். மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனை, நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை.

மக்களின் நலனில் அக்கறையின்றி, அதிகாரத்திலும், வரலாற்றிலும் இடம்பிடிக்க நினைக்கும் தலைவர்கள், இன்று மட்டும் அல்ல, இயேசுவின் காலத்திலும் வாழ்ந்தனர். அத்தகையத் தலைவர்களில் ஒருவரான பிலிப்பு, வரலாற்றில் இடம்பிடிப்பதற்கென உருவாக்கிய ஒரு பிரம்மாண்டமான நகர் பிலிப்புச் செசரியா.

இயேசு, இந்த ஊரை நோக்கி புறப்பட்டுச் சென்ற வழியில், இக்கேள்விகளைக் கேட்டார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். மன்னன் ஏரோதுவின் மகன் பிலிப்பு, தன் நினைவாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரம்மாண்டமான நகரம், பிலிப்பு செசரியா. மேலும், அப்பகுதியில், பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) ஆகிய கடவுள்களுக்கு கோவில்களும் இருந்தன.

அரசர்களையும், கடவுள்களையும், அடையாளப்படுத்தும், பிரம்மாண்டமான பல நினைவுச் சின்னங்கள் அடங்கிய அப்பகுதியில், சீடர்களின் எண்ணங்களில், தான் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை உணர விழைந்தார் இயேசு. அத்துடன், தன் அடையாளமாக, சிலுவை, இவ்வுலகில் தொடரவேண்டும் என்பதையும், ஒரு பாடமாக அவர்களுக்கு வழங்கினார்.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று, இயேசு தன் சீடர்களிடம் கேட்ட இரண்டாவது கேள்வி, அவர்களிடமும், நம்மிடமும் எழுப்பப்படும் நேரடியான கேள்வி. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல், அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்து, மனப்பாடம் செய்தவற்றை விட, நம் மனதில் பதிந்து, நம் வாழ்வை மாற்றும் நம்பிக்கையே, இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தரமுடியும்.

இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. இறைவனை, இயேசுவை அனுபவத்தில் உணர்ந்தால், அவர்மீது உண்மையான நம்பிக்கை கொண்டால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன் விளைவாக, பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ, எளிது. அவரைப்போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல. ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி, சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.

அதையும் அற்புதமாக அவர் முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடிவந்து, அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று புகழ்மாலைகளைச் சூட்டினார். "என் திறமையில் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்விப்பட்ட போது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது, நானே நேரில் அவற்றைக் கண்டுவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வது மட்டுமே என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுப் பேசினார்.

"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி. செய்வீர்களா?" என்று கேட்டார், அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப்போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைகளுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல், காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரின் சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்யப்போவதாக உறுதியளித்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர், தன் சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று கேட்ட இயேசுவிடம், பேதுரு, "நீர் மெசியா" என்று பதில் சொல்கிறார். பேதுரு கூறிய இவ்விரு சொற்கள், அவரது விசுவாச அறிக்கை என்று, விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். 'மெசியா' என்ற சொல்லில் பொதிந்துள்ள முழுப்பொருளையும் பேதுரு உணர்ந்தாரா என்பது தெரியவில்லை.

'மெசியா' என்ற சொல்லின் முதன்மையான அர்த்தம், 'அர்ச்சிக்கப்பட்டவர்' என்றாலும், 'இஸ்ரயேல் இனத்தை மீட்பவர், காப்பவர்' என்ற பொருளே, பொதுவாக இச்சொல்லுக்கு மக்கள் தந்த அர்த்தம். எனவே, பேதுருவின் விசுவாச அறிக்கை, இயேசுவை, இஸ்ரயேல் மக்களின் அரசன் என்று மறைமுகமாகக் கூறும் ஓர் அரசியல் அறிக்கையாக ஒலித்திருக்க வாய்ப்புண்டு.

பேதுரு, தன்னை, இவ்வுலக தலைவர்களில் ஒருவராக கருதுகிறார் என்பதை உணர்ந்த இயேசு, "என் கண் முன் நில்லாதே சாத்தானே" (மாற்கு 8:33) என்று கடிந்துகொண்டார். அத்துடன் இயேசு நின்றுவிடவில்லை. தொடர்ந்து அவர் மக்கள் கூட்டத்திற்கும், சீடருக்கும் கூறும் சொற்கள், நம் அனைவருக்கும் விடப்படும் சவால் நிறைந்த ஓர் அழைப்பாக ஒலிக்கின்றன. "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மாற்கு 8:34)

செப்டம்பர் 14, இவ்வெள்ளியன்று, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளைக் கொண்டாடினோம். செப்டம்பர் 15, இச்சனிக்கிழமை, துயருறும் அன்னை மரியாவின் திருநாளைக் கொண்டாடினோம். சிலுவையை மையப்படுத்திய இவ்விரு திருநாள்களையும் தொடர்ந்து, இஞ்ஞாயிறன்று, இயேசு, சிலுவையையும், தன்னைப் பின்தொடர்வதையும் இணைத்துப் பேசியிருக்கிறார்.

செப்டம்பர் 22, 23, வருகிற சனி மற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். இவ்வேளையில், லித்துவேனியா நாட்டு மக்கள் சிலுவை மீது கொண்டிருக்கும் தனித்துவமிக்க பக்தியை நாம் சிந்திப்பது பயனளிக்கும். இந்நாட்டு மக்கள், பல ஆண்டுகளாக, தங்கள் நாடெங்கும் சிலுவைகளை பதித்து வந்துள்ளனர். இன்றும் பதித்து வருகின்றனர். தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமுழுக்கு, திருமணம் போன்ற அனைத்து நிகழ்வுகளின் நினைவாக, சிலுவைகளை, சாலையோரம், பூங்கா என்று பல இடங்களில் ஊன்றி வந்துள்ளனர். லித்துவேனிய மக்கள் தங்கள் நாட்டில் சிலுவைகளைக் கொண்டு உருவாக்கியுள்ள பல இடங்களில் மிகவும் புகழ்பெற்றது, Šiauliai என்ற இடத்தில் அமைந்துள்ள சிலுவைகளின் குன்று.

1831ம் ஆண்டு முதல், லித்துவேனியா நாடு மேற்கொண்டு வரும் பல போராட்டங்களின் நினைவாக, இக்குன்றின் மீது ஆயிரக்கணக்கான சிலுவைகள் நாட்டப்பட்டன. சோவியத் அடக்குமுறையின்போது, இச்சிலுவைக் குன்று பலமுறை சிதைக்கப்பட்டாலும், மக்கள், அக்குன்றில், சிலுவைகளை நடுவதைத் தொடர்ந்தனர். 1961, 1973, மற்றும் 1975 ஆகிய மூன்று ஆண்டுகள், இக்குன்றின் மீதிருந்த சிலுவைகளை, சோவியத் இராணுவம், முற்றிலும் அழித்தது. இருப்பினும் மக்கள் இடைவிடாமல் தங்கள் சிலுவை பக்தியைத் தொடர்ந்தனர்.

1980ம் ஆண்டு முதல், சோவியத் இராணுவம் தன் அழிவு வேலையை நிறுத்திக்கொண்டது. தற்போது, சிலுவைகளின் குன்று, லித்துவேனிய மக்களுக்கும், அயல்நாட்டவருக்கும் ஒரு திருத்தலமாக விளங்குகிறது. 1990களில் 50,000 என்ற அளவில் அங்கு நாட்டப்பட்டிருந்த சிலுவைகள், 2006ம் ஆண்டளவில் 1 இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

1993ம் ஆண்டு, செப்டம்பர் 7ம் தேதி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் சிலுவைகளின் குன்றைக் காணச் சென்றபோது, "லித்துவேனியர்களே உங்களுக்கு நன்றி, ஏனெனில் சிலுவையின் குன்று, ஐரோப்பிய நாடுகளுக்கும், இவ்வுலகிற்கும் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது" என்று கூறினார். அவர் கூறிய அந்தக் கூற்று, கல்லில் செதுக்கப்பட்டு, அக்குன்றின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறியப் பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரி. 13: 1)

எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற நேரடியானக் கேள்வி. இது சாதாரண கேள்வி அல்ல, இது ஓர் அழைப்பு. இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்தொடர்வது, என்ற சவால் இணைந்துள்ளது. நம் சொந்த வாழ்விலும், அயலவர் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்த இயேசு தரும் இந்த அழைப்பிற்கு, உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உறுதியோடு எழட்டும், நம் பதில்கள்.

15 September 2018, 15:22