தேடுதல்

Vatican News
உலக கிறிஸ்தவ சபைகள் அவை உலக கிறிஸ்தவ சபைகள் அவை  (ANSA)

கானடா கிறிஸ்தவ சபைகளின் அமைதிக் கொள்கைகள்

அன்பு, இரக்கம், மன்னிப்பு, உண்மையை அங்கீகரித்து ஊக்குவித்தல், மனித மாண்பு, மனித உரிமைகள் ஆகியவை, அமைதியை உருவாக்குவதற்கு அதிகம் தேவை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கானடா நாட்டின் கிறிஸ்தவ சபைகள், அமைதி பற்றிய தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளன.

CCC எனப்படும், கானடா கிறிஸ்தவ சபைகள் அவையின் நிர்வாகக் குழு, கடந்த மே மாதம் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர், "அமைதியின் கொள்கைகள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஏட்டில், அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் மறைப்பணி மற்றும், தனித்துவத்தின் எடுத்துக்காட்டாய் அமைவது, அமைதி எனக் கூறப்பட்டுள்ளது.

அமைதி, கடவுளோடு உள்ள உறவில் வேரூன்றியுள்ளது; அக அமைதி; இறைமக்களின் மறைப்பணி அமைதி; அமைதியும், திருஅவையும்; அமைதி என்பது, ஓர் அழைப்பு மற்றும் சான்று வாழ்வு; அமைதி, நீதியை உருவாக்குவதில் அடிப்படையைக் கொண்டுள்ளது; அமைதியை ஏற்படுத்துவது, அரசியல் நடவடிக்கை; அமைதி, போர்கள் மற்றும் நாடுகள்; அமைதி பற்றிய ஒருங்கிணைந்த கண்ணோட்டம் போன்ற தலைப்புகளில், அமைதி பற்றிய கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைதி, உண்மை மற்றும் நீதியைக் கட்டியமைப்பதிலும் அடங்கியுள்ளது என்றும், அமைதியை ஏற்படுத்துவது, குறிப்பாக, மனிதக் குடும்பத்தை, அச்சமும் சோர்வும் அச்சுறுத்தும் வேளையில், அதை ஏற்படுத்துவது அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்றும் அவ்வேடு வலியுறுத்துகிறது.

07 September 2018, 15:18