தேடுதல்

Vatican News
டப்ளின் பேராயர் Diarmuid Martin டப்ளின் பேராயர் Diarmuid Martin  

குடும்பங்களின் 9வது உலக மாநாட்டின் துவக்கத் திருப்பலி

இவ்வுலகின் எதிர்காலத்தைத் தாங்கி நிற்கும் வலிமை பெற்ற அடித்தளம், குடும்பம் மட்டுமே - டப்ளின் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மார்ட்டின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பம் என்ற அடித்தளமே, இவ்வுலகின் எதிர்காலத்தைத் தாங்கி நிற்கும் வலிமை பெற்றது என்று, அயர்லாந்தின் தலைமை ஆயரும், டப்ளின் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Diarmuid Martin அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

ஆகஸ்ட் 21, இச்செவ்வாய் மாலை, குடும்பங்களின் உலக மாநாட்டு துவக்கத் திருப்பலியை, டப்ளின் நகரின் திறந்தவெளி அரங்கில் தலைமையேற்று நடத்திய பேராயர் மார்ட்டின் அவர்கள், உலகெங்கிலுமிருந்து வந்திருந்த விருந்தினரை, பல்வேறு மொழிகளில் வரவேற்றார்.

கருணை, கனிவு, மென்மை, பொறுமை, மன்னிப்பு ஆகிய உயர்ந்த குணங்களை, குடும்பம் என்ற பள்ளியில் மட்டுமே பயில முடியும் என்று கூறிய பேராயர் மார்ட்டின் அவர்கள், குடும்ப அன்பு மட்டுமே, மனித சமுதாயத்தை சமநிலையில் வைத்திருக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக மாநாட்டிற்கு அனுப்பியிருந்த காணொளிச் செய்தி ஒளிபரப்பான வேளையில், கூடியிருந்தோர் கரவொலி எழுப்பி, மகிழ்வைத் தெரிவித்தனர்.

1994ம் ஆண்டு, இத்தாலியின் உரோம் நகரில் நடைபெற்ற முதல் குடும்பங்களின் உலக மாநாட்டைத் தொடர்ந்து, இதுவரை, எட்டு உலக மாநாடுகள் நடைபெற்றுள்ளன என்பதும், அயர்லாந்தில் நடைபெறும் மாநாடு, ஒன்பதாவது மாநாடு என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த ஒன்பது மாநாடுகளில், ஒன்று ஆசியாவின் பிலிப்பீன்ஸ் நாட்டிலும், ஒன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இரண்டு, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஐந்து மாநாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன

23 August 2018, 15:51