தேடுதல்

Vatican News
தென் கொரிய இளையோர் வத்திக்கான் வளாகத்தில் ஆற்றிய சாகசங்கள் தென் கொரிய இளையோர் வத்திக்கான் வளாகத்தில் ஆற்றிய சாகசங்கள்  (ANSA)

ஆகஸ்ட் 11 முதல், 15 முடிய கொரிய இளையோர் நாள் நிகழ்வுகள்

"நான்தான், அஞ்சாதீர்கள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் கொரிய இளையோர் நாள் நிகழ்வுகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் சோல் உயர் மறைமாவட்டத்தில், ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை முதல், 15, வருகிற புதன் முடிய கொரிய இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

"நான்தான், அஞ்சாதீர்கள்" (யோவான் 6:20) என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த இளையோர் நிகழ்வில், கொரியாவின் 16 மறைமாவட்டங்களிலிருந்து 2000த்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்ளவிருப்பதாக சோல் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி, சோல் பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung நிகழ்த்தும் திருப்பலியுடன் துவங்கும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் போது, மறைசாட்சிகளின் திருத்தலத்திற்கு இளையோர் திருப்பயணம் மேற்கொள்வது, ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு Jejuவில் முதல் இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு Uijeongbuவில் இரண்டாம் இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

2014ம் ஆண்டு Daejeonல் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டது, அவர் மேற்கொண்ட முதல் ஆசிய திருத்தூதுப்பயணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

09 August 2018, 15:24