தேடுதல்

புனித மோனிக்கா, புனித அகுஸ்தீன் புனித மோனிக்கா, புனித அகுஸ்தீன் 

"உங்களுக்கு ஆயராகவும், உங்களோடு கிறிஸ்தவனாகவும்"...

ஆயர்களின் பணி பெரும் சவால்களைச் சந்திக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், எடுத்துக்காட்டான ஆயராக வாழ்ந்த புனித அகுஸ்தீன் பரிந்துரையை நாம் நாடுவோம் - கர்தினால் Ouellet

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தனக்கு வழங்கப்பட்ட ஆயர் பணியின் சுமைகளைக் கண்டு கலக்கம் அடைந்த புனித அகுஸ்தீன், "உங்களுக்கு நான் ஆயராகவும், உங்களோடு கிறிஸ்தவனாகவும் இருக்கிறேன்" என்ற புகழ்மிக்க சொற்களை பயன்படுத்தியுள்ளார் என்று, ஆயர்கள் பேராயத் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித அகுஸ்தீன் திருநாளையொட்டி, இத்தாலியின் மிலான் நகருக்கருகே அமைந்துள்ள பவியா எனுமிடத்தில், புனித அகுஸ்தீன் உடல் புதைக்கப்பட்டுள்ள பசிலிக்காவில், கர்தினால் Ouellet அவர்கள் தலைமையேற்று நடத்திய திருப்பலியில், ஆயர் பணியைக் குறித்து புனித அகுஸ்தீன் கொண்டிருந்த எண்ணங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

மிகவும் உண்மையுள்ள கிறிஸ்தவனாக வாழ்வதே தன் வாழ்வின் முக்கிய அழைத்தல் என்பதை தன் மனமாற்றத்திற்குப் பின் உணர்ந்திருந்த புனித அகுஸ்தீன், இதே உணர்வுகளை தன் ஆயர் பணியிலும் வெளிப்படுத்தினார் என்று, கர்தினால் Ouellet அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

"நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது" என்று, திருத்தூதர் பணிகள் நூலில், முதல் கிறிஸ்தவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ள சொற்கள், புனித அகுஸ்தீன் வாழ்வில் பெரிதும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று, கர்தினால் Ouellet அவர்கள் எடுத்துரைத்தார்.

முதல் கிறிஸ்தவர்களின் வாழ்வை பின்பற்றும் நோக்கத்தில், புனித அகுஸ்தீன், தான் ஆயராக அருள்பொழிவு பெற்றதன் ஆண்டு நிறைவு நாளில், வறியோரை தன் ஆயர் இல்லத்திற்கு அழைத்து அவர்களோடு உணவருந்தினார் என்பதை, கர்தினால் Ouellet அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆயர்களின் பணி, பெரும் சவால்களைச் சந்திக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், எடுத்துக்காட்டான ஆயராக வாழ்ந்த புனித அகுஸ்தீன் பரிந்துரையை நாம் நாடுவோம் என்று, கர்தினால் Ouellet அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2018, 15:38