தேடுதல்

Vatican News
இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, இந்து தீவிரவாதக் குழுக்கள் நடத்திவரும் வன்முறைகள் பற்றி மம்தா பானர்ஜி அவர்கள் கவலை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்திய அரசியல்வாதிகள், தங்களின் பிரித்தாளும் அரசியல் நடவடிக்கையையும், வாக்குகளைக் கவர்வதற்காக மதத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நடத்திய கூட்டம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, ஜூலை 31ம் தேதி, புதுடெல்லியில் நடத்திய கூட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உட்பட, பல்வேறு முக்கிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்தியாவில் வருகிற ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், தங்களின் இந்து ஆதரவு கருத்தியலை வலியுறுத்திவரும்வேளை, இந்திய ஆயர் பேரவை, “உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இக்கூட்டத்தை நடத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, மம்தா பானர்ஜி அவர்கள், சாதி, மதம், மற்றும் சமயக்கோட்பாட்டின் அடிப்படையில், சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்றும், இந்நிலையில் நாம் வெறும் செவியற்றவர்களாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், மத நம்பிக்கையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதில், சில அடிப்படைவாத சக்திகள், தங்கள் கொள்கையைத் திணிக்க முயற்சித்துவரும்வேளை, இக்கூட்டத்திற்குச் சரியான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும், மம்தா பானர்ஜி அவர்கள் பாராட்டினார். (CBCI)

03 August 2018, 15:45