தேடுதல்

Vatican News
இயேசு தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசினார். (யோவான் 9: 6) இயேசு தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசினார். (யோவான் 9: 6) 

புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 5

ஓய்வுநாள் விதிகளை மீறி, தான் செயலாற்றியது போதாதென்று, பார்வை இழந்தவரையும் செயலில் ஈடுபட இயேசு அழைக்கிறார். அவரை 'சிலோவாம்' குளத்திற்குச் சென்று கழுவும்படி இயேசு உத்தரவிடுகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியம்-புதுமைகள் 070818

பார்வையற்றவரைக் கண்ட சீடர்கள், யாருடைய பாவம் என்ற கேள்வியில் தங்கள் கவனத்தைச் செலுத்தியபோது, “இவருக்கு ஏற்பட்டுள்ள துன்பம், யாரால், எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வது முக்கியமல்ல. பார்வையற்ற அவர் பார்வை பெற வேண்டும். அதன் வழியாக, கடவுளின் செயல் வெளிப்பட வேண்டும். அதற்கான வழியைச் சிந்திப்போம்” என்று கூறிய இயேசு, செயலில் இறங்கினார்… என்று, சென்ற வார விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். பார்வையற்றவரைக் குணமாக்க, இயேசு, எவ்வகை செயலில் இறங்கினார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: இவ்வாறு கூறியபின் இயேசு தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார். (யோவான் 9: 6-7)

இயேசுவின் இச்செயல், விவிலிய விரிவுரையாளர்களால், பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வேறு சில புதுமைகளில், இயேசு, ஒருவரைத் தொட்டதும் அவர் குணம் பெறுவதைக் காண்கிறோம். நயீன் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனைச் சுமந்து சென்றோரை நிறுத்தி, அந்தப் பாடையைத் தொட்டதும், இளையவர் உயிரோடு எழுந்தது, ஓர் எடுத்துக்காட்டு. (லூக்கா 7: 14-15). சில புதுமைகளில், இயேசு சொல்லும் சொற்கள் நோயுற்றவரைக் குணமாக்கின. பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகள் நோயுற்று கிடந்தவரிடம் இயேசு, "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (யோவான் 5: 8-9) என்று வாசிக்கிறோம். இன்னும் சில புதுமைகளில், இயேசு தூரத்திலிருந்தபடியே சொல்லும் சொற்களின் சக்தியால் மக்கள் நலமடைந்துள்ளனர். அரச அலுவலரின் மகனை, இயேசு நேரடியாகச் சந்திக்காமலேயே, "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" (யோவான் 4:50) என்று அரச அலுவலரிடம் உறுதி கூறி அனுப்பினார். இயேசு அச்சொற்களைச் சொன்ன அதே நொடியில், அரச அலுவலர் மகன் நலமடைந்தான்.

இவ்வாறு, தன் சொற்களாலும், தொடுதலாலும், மக்களைக் குணமாக்கிய இயேசு, பார்வையற்றவரையும், அவ்வாறே நேரடியாகக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, புதிரான ஒரு செயலைச் செய்தார். தரையில் உமிழ்ந்து, சேறு உண்டாக்கி, அதை பார்வையற்றவர் கண்கள் மீது தடவி, 'சிலோவாம்' என்ற குளத்தில் கழுவும்படி அனுப்பி வைக்கிறார்.

இயேசு தன் உமிழ்நீரைப் பயன்படுத்தி வேறு இரு புதுமைகளில் குணமளித்துள்ளார் என்பதைக் காண்கிறோம். அதாவது, திக்கிப் பேசும் ஒருவரின் நாவில், தன் உமிழ்நீரால் தொட்டு, அவருக்கு பேசும் திறனை அளித்தார் என்றும் (மாற்கு 7:33-35), பார்வையற்ற ஒருவரின் விழிகளில் தன் உமிழ் நீரைக் கொண்டு பார்வை அளித்தார் என்றும் (மாற்கு 8:23-25) மாற்கு நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆனால், இந்த ஒரு புதுமையில் மட்டுமே, இயேசு தன் உமிழ் நீருடன், மண்ணையும் இணைத்து பயன்படுத்தியுள்ளதைக் காண்கிறோம். மண்ணைக் கொண்டு இயேசு ஆற்றிய இப்புதுமையைக் காணும்போது, தொடக்க நூலில் இறைவன் முதல் மனிதரைப் படைத்த சொற்கள் நினைவில் நிழலாடுகின்றன: அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். (தொடக்க நூல் 2:7)

இயேசுவின் இந்தச் செயல்பாடு, ஒய்வு நாளன்று நடைபெறுகின்றது என்பது, மிக முக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டிய எண்ணம். ஒய்வு நாளில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்ற ஒரு பட்டியலை, மதத்தலைவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அந்த பட்டியலின்படி, மண்ணில் எச்சில் துப்பி, அதைக்கொண்டு சேறு உண்டாக்குவது, ஒய்வு நாளில் தடைசெய்யப்பட்ட செயல். இந்த ஒழுங்குமுறையை மீறுவதற்கென்றே இயேசு இவ்விதம் செய்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" (மாற்கு 2:27-28) என்று பரிசேயரிடம் கூறியச் சொற்களுக்கு, இயேசு செயல்வடிவம் கொடுத்ததுபோல், இந்நிகழ்வு இடம்பெற்றது.  

ஓய்வுநாள் விதிகளை மீறி, தான் செயலாற்றியது போதாதென்று, பார்வை இழந்தவரையும் செயலில் ஈடுபட இயேசு அழைக்கிறார். அவரை 'சிலோவாம்' குளத்திற்குச் சென்று கழுவும்படி இயேசு உத்தரவிடுகிறார். சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர்" என்பது பொருள் (யோவான் 9: 7) என்ற சொற்களை நற்செய்தியாளர் இவ்விடத்தில் இணைத்திருப்பது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தந்தையால் அனுப்பப்பட்டவரான இயேசு, பார்வையற்ற மனிதரை, சிலோவாம் குளத்திற்கு அனுப்புகிறார். அந்தக் குளத்தில் தன் கண்களைக் கழுவியதால் பார்வை பெறப்போகும் மனிதர், அந்த நல்ல செய்தியைப் பறைசாற்றுவதற்கு அனுப்பப்பட்டவராக மாறப்போகிறார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் முன்னோட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், தந்தையால் அனுப்பப்பட்டவரான தான், ஓய்வுநாள் விதிகளை மீறுவதுபோல், தன்னால் அனுப்பப்படுபவரும் ஓய்வுநாள் விதிகளை மீறலாம் என்பதை, இயேசுவின் இச்செயல் சொல்லாமல் சொல்கிறது. ஒரு மனிதர் நலம்பெறுவதற்கு, ஓய்வுநாள் விதிகள் தடையாக இருக்கக்கூடாது என்பதை நிலைநாட்ட, இயேசு துணிவுடன் முயன்றார்.

இயேசு நிகழ்த்திய 26 குணமளிக்கும் புதுமைகளில், 7 புதுமைகளை அவர் ஓய்வுநாளில் செய்தார். அதுமட்டுமல்ல, இவற்றில் 4 புதுமைகளை, இயேசு, ஓய்வுநாளில், தொழுகைக்கூடத்தில் செய்தார். ஓய்வு நாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக் கூடத்தில் மீறுவது, அதைவிட பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இவ்வாறு செய்தார்? மேலோட்டமாகப் பார்த்தால், அவர் வேண்டுமென்றே பிரச்சனைகளைத் தேடி சென்றதைப்போல் தோன்றலாம். ஆனால், இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு இவற்றை ஒரு தீர்மானத்தோடு செய்வது விளங்கும்.

புதுமைகளால் தனியொருவர் மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது தேவையுள்ளவர் வீடு தேடிச்சென்று புதுமைகள் செய்திருக்கலாம். இத்தகையப் புதுமைகளும் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், யூதர்களுக்கும், யூத மதத்தலைவர்களுக்கும், ஒய்வு நாளையும், தொழுகைக்கூடத்தையும் குறித்த உண்மையானப் புரிதலை உருவாக்குவது, இயேசுவின் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. எனவே, ஓய்வு நாள், தொழுகைக் கூடம் இவற்றை இணைத்து, பிரச்சனைகளையும், கேள்விகளையும் உருவாக்கும் வண்ணம், இயேசு இப்புதுமைகளை ஆற்றுகிறார்.

யோவான் நற்செய்தி 9ம் பிரிவுக்குத் திரும்புவோம். தன் கண்களில் பூசப்பட்ட சேற்றுடன், பார்வையற்றவர் 'சிலோவாம்' குளத்திற்குச் சென்றார். "அவரும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பிவந்தார்" (யோவான் 9:7). என்ற சொற்களுடன், நற்செய்தியாளர் யோவான், இப்புதுமையின் முதல் பகுதியை நிறைவு செய்துள்ளார். இதே சொற்கள், இப்புதுமையின் இரண்டாம் பகுதிக்கு முன்னுரையாக அமைகின்றன.

அவர் திரும்பிவந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப் பிரச்சனையை ஒரு வழக்கைப்போல் யோவான் பதிவுசெய்துள்ளார். இந்தப் புதுமை, 9ம் பிரிவின் முதல் ஏழு இறைவாக்கியங்களில் நிறைவடைகிறது. ஆனால், அதைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள் வழியாக, நற்செய்தியாளர் யோவான், ஓர் இறையியல் பாடத்தை இரண்டாம் பகுதியில் நடத்துகிறார்.

பிறவியிலிருந்து பார்வைத் திறனின்றி வாழ்ந்தவர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறும் அழகையும், யூதர்களும், பரிசேயர்களும் தங்கள் உள்ளத்தில் படிப்படியாக பார்வை இழக்கும் சோகத்தையும், ஓர் இறையியல் பாடமாக, நற்செய்தியாளர் யோவான் வழங்கியுள்ளார். இந்த இறையியல் பாடத்தின் நுணுக்கங்களை, நம் அடுத்த தேடலில் கற்றுக்கொள்ள முயல்வோம்.

07 August 2018, 15:16