தேடுதல்

Vatican News
2008ல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் கிறிஸ்தவர்கள் 2008ல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் கிறிஸ்தவர்கள் 

ஒடிசா திருஅவையில் கந்தமால் நினைவு நாள்

ஒடிசா மாநில கத்தோலிக்க திருஅவை, கந்தமால் மறைசாட்சிகளின் குருதியால் வளப்படுத்தப்பட்டுள்ளது - பேராயர் ஜான் பார்வா

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

2008ம் ஆண்டில், ஒடிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக நடத்தப்பட்ட வன்முறையின் பத்தாம் ஆண்டு நினைவு, ஆகஸ்ட் 25, இச்சனிக்கிழமையன்று, புபனேஸ்வர் நகரில், கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், புபனேஸ்வர் புனித யோசேப் பள்ளியில், இந்திய ஆயர் பேரவை பிரதிநிதிகளுடன் இணைந்து, “ஒப்புரவு, நன்றியறிதல் மற்றும் திருவருள்” என்ற தலைப்பில், திருப்பலி நிறைவேற்றி இந்நாளை நினைவுகூர்கிறார்.

ஒடிசாவில் பெய்யும் மழையினால், இந்த நினைவு நாளில் பெருமளவில் மக்களால் கலந்துகொள்ள இயலாதெனினும், இந்நாள் அந்தந்தப் பகுதிகளில், பல்வேறு முறைகளில், நினைவுகூரப்படும் எனவும் கூறினார், பேராயர் பார்வா.

2008ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில், பலர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளும், ஆலயங்களும், கத்தோலிக்க நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

மேலும், ஆகஸ்ட் 28ம் தேதி, ஒடிசாவின் தலைநகரில், கிறிஸ்தவர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி, முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களிடம், அந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி மற்றும் இழப்பீடு கேட்டு மனு ஒன்றையும் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 25ம் தேதி, கந்தமால் நாள் எனவும் அழைக்கப்படுகிறது.

24 August 2018, 15:33