தேடுதல்

Vatican News
இயேசு 5000த்திற்கும் அதிகமானோருக்க உணவளித்தல் இயேசு 5000த்திற்கும் அதிகமானோருக்க உணவளித்தல் 

பொதுக்காலம் 17ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள, நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். பகிர்வுப் புதுமை இவ்வுலகில் பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

280718 Sundayweb

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நேரத்தில், போரினால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை, கூட்டணி நாடுகளின் இராணுவ வீரர்கள், முகாம்களில் தங்கவைத்தனர். அக்குழந்தைகள், பட்டினியால் மிகவும் மெலிந்திருந்ததைக் கண்ட வீரர்கள், அவர்களுக்குத் தேவையான உணவளித்தனர். இரவில், அக்குழந்தைகளில் பலர், உறங்குவதற்குப் பயந்து, விழித்திருந்ததைக்கண்ட வீரர்கள், செய்வதறியாது திகைத்தனர். அவர்களில் ஒரு வீரர், குழந்தைகள் தூங்கப்போவதற்குமுன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரொட்டியைக் கொடுத்தார். அக்குழந்தைகள், அந்த ரொட்டியை தங்கள் தலையணைக்கு அடியில் வைத்தவாறு, அன்றிரவு, அமைதியாக உறங்கினர்.

இந்நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்ததா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால், இந்நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பெற்றோரையும், இல்லங்களையும் இழந்து, பாதுகாப்பின்றி வாழ்ந்த குழந்தைகளுக்கு, ஒரு ரொட்டி, ஏதோ ஒருவகையில் பாதுகாப்பைத் தந்திருக்க வேண்டும். இந்நிகழ்வு, மனிதவாழ்வைப் படம் பிடித்துக்காட்டும் ஓர் உவமை என்பதை மறுக்க இயலாது. அடுத்த வேளை உணவு கிடைக்கும் என்ற உறுதி மட்டும் கிடைத்தால், இவ்வுலகில், கோடான கோடி மக்கள், நிம்மதியாக உறங்க முடியும்.

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை, இயேசு, மக்களுக்கு வழங்கியப் புதுமையை இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம். இயேசு, தன் பணி வாழ்வில் ஆற்றிய புதுமைகளில், ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு, 5000த்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்தப் புதுமை - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

நான்கு நற்செய்திகளும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் எழுதப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, சீடர்கள், தங்கள் நினைவுகளில் பதிந்திருந்த நிகழ்வுகளையும், இயேசுவின் போதனைகளையும் பதிவு செய்ததே, நான்கு நற்செய்திகளாக நம்மை அடைந்துள்ளன. எந்த ஒரு நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளதோ, அந்நிகழ்வு, சீடர்களின் உள்ளங்களில் மிக ஆழமாகப் பதிந்த நிகழ்வாக, இருந்திருக்கவேண்டும் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு.

இயேசு 5000த்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்த புதுமை, சீடர்களின் நினைவுகளில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்றால், இப்புதுமையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள் அனைத்தும் நான்கு நற்செய்திகளிலும் மாற்றம் ஏதுமின்றி, ஒரே அளவு எண்ணிக்கைகளாக உள்ளன. பெண்களும், சிறுவர், சிறுமியரும் நீங்கலாக, இப்புதுமையால் பயனடைந்த ஆண்களின் எண்ணிக்கை 5000; இப்புதுமையைத் துவக்கிவைக்கப் பயன்படுத்தப்பட்டவை, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்; அனைவரும் வயிறார உண்டபின், மீதமிருந்த துண்டுகள், சேகரிக்கப்பட்டது, பன்னிரண்டு கூடைகளில்... என்று, நான்கு நற்செய்திகளும் ஒரே எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளது, வியப்பைத் தருகிறது. அவ்வளவு ஆழமானத் தாக்கம் அது!

இந்தப் புதுமையை, பல கோணங்களில் சிந்திக்க இயலும். இன்றைய நம் வழிபாட்டில், ஒரு சில கோணங்களை மட்டும் சிந்திக்க முயல்வோம். மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி, அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை நம்பி, உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது என்பதை, இரு வாசகங்களிலும் காண்கிறோம்.

இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, மக்களின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைத் தீர்க்க, இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இரு வாசகங்களையும் சற்று ஆழமாக ஆய்வு செய்தால், ஓர் உண்மை தெளிவாகும். இந்த உணவை, இறைவன், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. ஒரு மனிதரும், ஒரு சிறுவனும் கொண்டுவந்து கொடுத்த உணவே, இவ்விரு புதுமைகளின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.

அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப்பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.

என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து தந்த அந்த உணவு ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித் தருகிறார். தன்னை நோக்கி பெருந்திரளாய் வந்த மக்களைக் கண்டதும், 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' (யோவான் 6:5) என்ற எண்ணமே, இயேசுவின் உள்ளத்தில் முதலில் எழுந்தது. தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாற நினைத்த இயேசுவின் ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன; பின்னர், ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் இயேசு வழங்கிய ஆசீர், இவை இணைந்தபோது, 5000த்திற்கும் அதிகமானோர், வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு, தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது, நாம் வழக்கமாகக் கருதும் பாரம்பரியக் கண்ணோட்டம். 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு துவக்கிவைத்தார் என்ற இரண்டாவது கண்ணோட்டம், ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. மாறுபட்ட இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு நம்மைத் தூண்டுவது, சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற ஒரு கேள்வி.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது, அல்லது, கொடுத்தனுப்புவது, பெற்றோரே. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?

பல தலைமுறைகளாய், இஸ்ரயேல் மக்கள், அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போதெல்லாம், மறவாமல், மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது, அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. குடும்பமாய்ச் சென்ற அவர்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், குடும்பத்தலைவி முன்மதியோடு தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலையானதும், பசி, வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசியது பலருக்கு நினைவிலிருந்தது. ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? இந்தக் கேள்விகளில் பெரியவர்கள் முழ்கி இருந்தபோது, அங்கிருந்த சிறுவனின் எண்ண ஓட்டம் வேறுபட்டிருந்தது. அதுவே, அந்தப் புதுமைக்கு வழிவகுத்தது.

தன்னைத் தேடிவந்த மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அச்சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தான். பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், தன்னிடம் இருந்ததையெல்லாம் இயேசுவிடம் தந்தான். அச்சிறுவனின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத விருந்து.

அங்கு நடந்த பகிர்வு தந்த மனநிறைவில், அங்கிருந்தவர்களுக்கு, பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியான உணவை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று திபேரியக் கடல் அருகே நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம். குழந்தைப்பருவத்தில், பகிர்வதன் அழகைக் குறித்து பாடங்கள் பல சொல்லித்தரும் நாம், வளர, வளர, பகிர்வதற்குப் பதில், சேர்ப்பதைக் குறித்து, சேர்த்ததைப் பாதுகாப்பது குறித்து அதிகப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம், கற்றுத்தருகிறோம்.

நாம் வாழும் இன்றைய உலகில், இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் புதுமை நிகழவேண்டுமெனில், நம் அடிப்படை கண்ணோட்டம் மாறவேண்டும். இதை, நமக்குத் தெரிந்த ஒரு கதை வழியே புரிந்துகொள்ள முயல்வோம். 'Chicken Soup for the Soul' என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கதை இது...

உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான் சிறுவன். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்குப் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் அதிக அன்பு உண்டு. எனவே, எனக்கு, கிறிஸ்மஸ் பரிசாக இதைத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஏனெனில், அந்தக் காரைப் பார்த்த அவரது நண்பர்கள் பலர், தங்களுக்கு இப்படி ஓர் அண்ணன் கிடைக்கவில்லையே என்று ஏக்கத்துடன் சொன்னதை, காரின் உரிமையாளர் கடந்த சில நாட்களாகக் கேட்டுவந்தார். எனவே, இச்சிறுவனின் ஏக்கமும் அதுபோலவே இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சொன்னான்.

"ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று கார் உரிமையாளரைப் போல் எண்ணுவது, நாம் என்னென்ன பெறமுடியும் என்று கணக்கிடும் மனம். "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று ஏழைச் சிறுவனைப்போல் எண்ணுவது, நாம் என்னென்ன தரமுடியும் என்று சிந்திக்கும் மனம். பகிர்வதும், தருவதும், பொதுவாக, குழந்தைகளுக்கு எளிதில் தோன்றும் எண்ணங்கள். ஆனால், அவர்கள் வளர, வளர, மாற்றுப்பாடங்கள் அவர்கள் மனங்களில் திணிக்கப்படுகின்றன.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான், இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான், வறுமை நீங்கும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான், இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை, அச்சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம். நற்செய்தியில், நாம் இன்று சந்திக்கும் அச்சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள, நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம். பகிர்வுப் புதுமை இவ்வுலகில் பலுகிப்பெருகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

28 July 2018, 14:30