தேடுதல்

கானடாவின் புனித போனிபஸ் பேராலயம் கானடாவின் புனித போனிபஸ் பேராலயம் 

கனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்

200ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்த, வின்னிபெக் நகரின் புனித போனிபஸ் பேராலயத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Lacroix.

நமக்குப் பழக்கமான, வசதியான சூழல்களை விட்டு வெளியேறி, நம்பிக்கை, வாழ்வு, பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றைத் தேடி அலையும் மக்களைச் சந்திக்கும் நேரம் இது என்று, Quebec பேராயர், கர்தினால் Gerald Cyprien Lacroix அவர்கள், அண்மையில் மறையுரை வழங்கினார்.

கனடாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நற்செய்தி அறிவிப்புப் பணி துவக்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, வின்னிபெக் நகரின் புனித போனிபஸ் பேராலயத்தில் நிகழ்ந்த திருப்பலியை, தலைமையேற்று நடத்திய கர்தினால் Lacroix அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தையின் சார்பில், இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அனுப்பப்பட்ட கர்தினால் Lacroix அவர்கள், கனடா நாட்டில், தற்போதையச் சூழலில் தேவைப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணியைக் குறித்து தன் மறையுரையில் விளக்கம் அளித்தார்.

கனடா நாட்டில் வாழும் பழங்குடியின மக்களுடன் திருத்தந்தை தன் நெருக்கத்தையும், அன்பையும் தன் வழியே அனுப்பியுள்ளார் என்பதைக் கூறிய கர்தினால் Lacroix அவர்கள், பழங்குடியின மக்கள் கனடா நாட்டின் இன்றியமையாத பங்காக ஏற்று, மதிக்கப்படவேண்டும் என்பதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

கனடா நாட்டில் நற்செய்தியை அறிவிக்க, தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வந்த மறைப்பணியாளர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தற்போது, கனடாவில் வாழ்வோர், தங்களுக்குப் பழக்கமான சூழல்களைவிட்டு வெளியேறி, தேவையில் இருக்கும் மக்களைச் சந்திப்பதே, இன்றைய நற்செய்தி அறிவிப்புப்பணி என்று, கர்தினால் Lacroix அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

1818ம் ஆண்டு கனடாவின் மானிடோபா மாநிலத்தின் வின்னிபெக் நகரில் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் ஆரம்பமான நற்செய்தி அறிவிப்புப்பணி, தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2018, 15:45