தேடுதல்

Vatican News
வத்திக்கான் பசிலிக்காவில் திருத்தந்தை ஒப்புரவு அருளடையாளம் வத்திக்கான் பசிலிக்காவில் திருத்தந்தை ஒப்புரவு அருளடையாளம்   (AFP or licensors)

ஒப்புரவு அருளடையாளத்திற்கெதிரான முயற்சிக்கு கண்டனம்

ஒப்புரவு அருளடையாளம் என்ற கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்கெதிரான தேசிய பெண்கள் அவையின் பரிந்துரை குறித்து கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஒப்புரவு அருளடையாளத்தைத் தடை செய்யுமாறு, இந்திய தேசிய பெண்கள் அவை வலியுறுத்தி வருவது, தனக்கு அதிர்ச்சியளிப்பதாக, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால், ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தேசிய பெண்கள் அவையின் இம்முயற்சி, ஒப்புரவு அருளடையாளத்தின் இயல்பு, அதன் பொருள், அதன் புனிதம் மற்றும் மக்களுக்கு அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளாததையும், இந்த அருளடையாளத்தின் விதிமுறைகளை மீறுவதைத் தடை செய்வதற்கு திருஅவையிலுள்ள கண்டிப்பான சட்டங்கள் பற்றி அறியாமல் இருப்பதையுமே காட்டுகின்றது என்று குறை கூறியுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.  

ஒப்புரவு அருளடையாளத்தைத் தடை செய்வது, இந்திய அரசியலமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள சமய சுதந்திரத்தை நேரிடையாக மீறுவதாக அமையும் என்றும், உலகெங்கும் நூற்றாண்டுகளாக, இலட்சக்கணக்கான மக்கள் இந்த அருளடையாளத்தால் ஆன்மீகப் பலனை அனுபவித்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்திய அரசு, இந்த அவையின் அறிவற்ற வற்புறுத்தலை முற்றிலும் புறக்கணிக்கும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் திறமைகளைக் கட்டியெழுப்புதல், பெண்களின் முன்னேற்றம், குடும்ப வன்முறையைத் தடுத்தல், பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல் போன்ற பெண்கள் சார்ந்த விவகாரங்களில், தேசிய பெண்கள் அவை கவனம் செலுத்துவதை விடுத்து, தான் புரிந்துகொள்ளாத, சமய விவகாரங்களில் தலையிடுவது குறித்து குறை கூறியுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

மேலும், தேசிய பெண்கள் அவையின் தலைவர் ரேகா ஷர்மா அவர்கள், இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ள, ஒப்புரவு அருளடையாளம் குறித்த பரிந்துரை, இந்திய அரசியலமைப்புக்கு முரணானது என, கேரள ஆயர் பேரவையும் தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. (CBCI)

28 July 2018, 14:55