Cerca

Vatican News
இயேசுவின் இறை இரக்கம் இயேசுவின் இறை இரக்கம்  (ANSA)

புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 2

“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9:2 - சீடர்கள் எழுப்பும் கேள்வி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

யோவான் நற்செய்தி 9ம் பிரிவில், கூறப்பட்டுள்ள புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் அந்த புதுமை, ஒரு நிகழ்வாக மட்டும் அல்ல, மாறாக, ஓர் இறையியல் பாடமாகவே தரப்பட்டுள்ளது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களின் துவக்கமாக, இன்றையத் தேடலில், துன்பத்தைப்பற்றி சிந்திக்க முயல்வோம்.

இயேசுவும் சீடர்களும் நடந்து செல்லும்போது, பார்வையற்ற ஒரு மனிதரைப் பார்க்கின்றனர். அவரைக் கண்டதும், சீடர்களின் உள்ளங்களில் "ஐயோ, பாவம்" என்ற பரிதாப உணர்வு எழுந்திருக்கலாம். அந்தப் பரிதாப உணர்வு மட்டும் அவர்களை வழிநடத்தியிருந்தால், அவர்கள் இயேசுவிடம் சென்று, "ரபி, பார்வையற்ற அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர் நலமடைய ஏதாவது செய்யுங்கள்" என்ற விண்ணப்பம் அவர்களிடம் எழுந்திருக்கும். ஆனால், சீடர்களிடம் உருவான 'பாவம்' என்ற பரிதாப உணர்வு, யாரோ செய்த 'பாவம்' என்ற மற்றொரு எண்ணத்தையும் அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. எனவே, அவர்கள் இயேசுவிடம் விண்ணப்பம் எழுப்புவதற்குப் பதில் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9:2 என்று சீடர்கள் எழுப்பும் இக்கேள்வி, மனிதர்களாகிய நம்மை வாட்டியெடுக்கும் சில முக்கியமான ஐயங்களை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

நாமோ, நம்மைச் சார்ந்தவர்களோ, உடலளவிலும், மனதளவிலும் துன்பங்களைச் சந்திக்கும் வேளையில், அத்துன்பங்களுக்குக் காரணங்கள் தேடுகிறோம். அதேபோல், இவ்வுலகில் நடைபெறும் பல கொடுமைகளும் நம்மை கேள்விகளால் நிறைக்கின்றன. துன்பம் ஏன்? அதிலும், மாசற்றவர்கள் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு, தெளிவான, முழுமையான பதில்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆயினும், துன்பம் பற்றியத் தேடலில் ஈடுபடுவது, ஓரளவு உதவியாக இருக்கும்.

துன்பத்தை இரு வகையாகப் பார்க்கலாம். காரணம் உள்ள துன்பங்கள், காரணமற்ற துன்பங்கள். ஓர் எடுத்துக்காட்டின் வழியே இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, ஒரு மரத்தின் மீது மோதி அடிபடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த விபத்திற்கும், அதனால் அவருக்கு உண்டான துன்பத்திற்கும் அவரே காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே விபத்தை, சற்று வித்தியாசமாக சிந்தித்துப் பார்ப்போம். குடிபோதையில் வாகனம் ஓட்டிய அம்மனிதர், மரத்தில் மோதுவதற்கு பதில், சாலையோரம், நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோதி, அவர் கீழே விழுந்து அடிபட்டால், அவர் அடைந்த துன்பத்துக்கு அவ்வளவு எளிதில் காரணம் கிடைக்காது. அவர் அந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தார் என்பது காரணமாகி விடுமா? ஆனால், "அவர் ஏன் அந்த நேரத்தில் அங்கே இருந்தார்?" என்று கேட்பவர்களும் உண்டு. அல்லது, ஏதோ பெரிய விளக்கம் சொல்வது போல், "அவருக்கு அந்த நேரத்தில் அப்படி நடக்கணும்னு இருந்தது" என்று சொல்பவர்களும் உண்டு.

தெளிவான காரணம் ஏதுமின்றி, நம்மை வந்தடையும் துன்பங்களுக்கு, இப்படி எதையாவது சொல்ல முற்படுகிறோம். முன்வினைப் பயன் என்று சொல்கிறோம். நம்மைச் சோதிக்கக் கடவுள் அனுப்பிய துன்பம் என்கிறோம். அல்லது இயேசுவின் சீடர்கள் சொன்னது போல், நம் முன்னோர் செய்த குற்றம் என்கிறோம்.

“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று சீடர்கள் எழுப்பிய இக்கேள்வியில், இரு பகுதிகள் உள்ளன. 'இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று சீடர்கள் கேட்கும் கேள்வியில் பொதிந்திருக்கும் கருத்தை, சற்று எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பெற்றோர் அல்லது முன்னோர் செய்த தவறுகள், அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் என்பதை, அறிவியல் வழியாகவும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

எடுத்துக்காட்டாக, குழந்தை கருவில் வளரும் வேளையில், குழந்தையின் தாய், சிகரெட், மது, போதைப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால், கருவில் வளரும் குழந்தை பல பாதிப்புக்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். உடலளவில் அல்லது அறிவுத்திறனில் பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்கக்கூடும்.

கருவுற்றிருக்கும் தாய், கணவனாலோ, மற்றவர்களாலோ, உடலளவில் கொடுமைப்படுத்தப்பட்டால், கருவில் உள்ள குழந்தை அந்த பாதிப்புக்களைத் தாங்கவேண்டியிருக்கும். கருவில் வளரும் குழந்தைக்கு, செவித்திறன் முதலில் உருவாவதால், கருவுற்றிருக்கும் தாய், கணவனாலும் மற்றவர்களாலும் வசைமொழிகளைக் கேட்கவேண்டியிருந்தால், அவை, அக்குழந்தையைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில், பார்வைக்குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகம். இதற்கு ஒரு முக்கிய காரணம், குழந்தைகளை கருவில் சுமந்திருக்கும் பல அன்னையர், தகுந்த உணவு உண்ண வழியின்றி இருப்பது. மேலும், இந்த அன்னையர், குழந்தையைப் பெற்றெடுக்கும் நாள் வரை உழைக்கும் கட்டாயத்தில் இருப்பது. இவ்வாறு உழைக்கவேண்டியுள்ள பெண்கள், வயல் வெளிகளில், தொழில்கூடங்களில், உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரசவ வலி உண்டாகி, பணியிடங்களிலேயே குழந்தையைப் பெற்றெடுப்பதையும், அல்லது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பேருந்துகளில் குழந்தையைப் பெற்றெடுப்பதையும் செய்திகளாக அடிக்கடி கேட்கிறோம்.

ஊட்டச்சத்து குறைவு, இறுதி நேரம் வரை உழைக்கும் கட்டாயம் போன்ற கொடுமைகளுக்கு அன்னையர் உள்ளாகும்போது, கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படுகின்றது. குழந்தையின் உறுப்புக்களிலேயே மிகவும் மென்மையான, வலுவற்ற உறுப்பு, அதன் கண்கள். எனவே, கருவுற்ற அன்னைக்கு ஏற்படும் எந்த ஒரு குறைவும், குழந்தையின் கண்களை முதலில் பாதிக்கின்றது. எனவே, வறுமைச் சூழலில் வாழும் அன்னையர், பார்வைக்குறைவுள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலை உருவாகிறது.

இவ்வாறு, பெற்றோரும், முன்னோரும், சமுதாயமும் செய்யும் தவறுகள், கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்பதை அறிவியல் வழியாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீடர்களின் கேள்வியில் இருந்த "பெற்றோர் செய்த பாவமா?" என்ற பகுதிக்கு, ஓரளவு தெளிவான பதில்களை நம்மால் தர முடிகிறது. ஆனால், சீடர்களின் கேள்வியில் இருந்த, "இவர் செய்த பாவமா?" என்ற மற்றொரு பகுதி, வேறு வகையான எண்ணங்களை முன்வைக்கின்றன.

பெற்றோரோ, முன்னோரோ தவறுகள் ஏதும் செய்யாதபோதும், குழந்தைகள் குறையுடன் பிறந்தால், அதற்கு, இந்தியா போன்ற நாடுகளில், முந்தைய பிறவியில் செய்த வினைகளின் விளைவு என்ற முடிவு எடுக்கப்படுகிறது. பிறவியிலேயே பார்வையற்று பிறந்த மனிதரைப் பார்க்கும் சீடர்கள், "இவர் செய்த பாவமா?" என்று கேட்கும்போது, அவர் முந்திய பிறவியில் செய்த பாவமா என்று அவர்கள் கேட்பதுபோல் தோன்றுகிறது.

யூதர்கள் நடுவே முந்தைய பிறவி அல்லது மறுபிறவி ஆகிய எண்ணங்கள் இல்லையெனினும், கிரேக்க கலாச்சாரத்தில், குறிப்பாக, சாக்ரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் கூற்றுகளில் இந்த எண்ணங்கள் கூறப்பட்டிருப்பதால், அவ்வெண்ணங்கள் யூதர்கள் நடுவிலும், சீடர்கள் மத்தியிலும் பேச்சுவழக்கில் வலம் வந்திருக்கக்கூடும் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

வாழ்வில் வரும் இன்பமும் துன்பமும் நம்மில் கேள்விகளாக மாறுவதை, கண்ணதாசன் அவர்கள், ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறியுள்ளார்: "ஏன் என்ற கேள்வி ஒன்று, என்றைக்கும் தங்கும். மனித இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்." இன்பம் வரும்போது, அதிகமான கேள்விகள் எழுவதில்லை. எதிர்பாராத மகிழ்ச்சி நம்மை திக்கு முக்காட வைக்கும்போது, ஒரு சில கேள்விகள் எழும். ஆனால், துன்பங்கள் வரும்போது, அவை, தம்முடன், கேள்விகளை, கூட்டமாய் சேர்த்துக் கொண்டுவரும். காரணத்தோடு வரும் துன்பம், அறிந்து வரும் துன்பம் இவற்றைத் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். அறியாமல் வரும், காரணம் இல்லாமல் வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது கடினம்.

வாழ்வில் வரும் துன்பங்களை, உடலில் படும் அடிகளோடு ஒப்புமைப்படுத்தி, சிந்தித்துப் பார்க்கலாம். உடலில் படும் அடிகளில் ஒரு சில, நாம் எதிர்பாக்கும் இடத்திலிருந்து, எதிர்பார்க்கும் நேரத்தில் வரும். இந்த அடிகளை நாம் எதிர்பார்ப்பதால், அந்த அடிகள் விழும் இடங்களில் உள்ள தசைகள் ஏற்கனவே அந்த அடியைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தயாராகிவிடும். குத்துச் சண்டை பயிற்சியில், சில நேரங்களில், உடலில் ஒரு சில பகுதிகளில், யாரையாவது குத்தச் சொல்லி, அவற்றைத் தாங்கிக்கொள்ள பழகிக்கொள்கிறோம், அல்லவா? எதிர்பார்க்கும் அடிகளுக்கு உடல் தயாராகி விடுகிறது.

எதிர்பாராமல் விழும் அடிகள், நம்மை நிலைகுலையச் செய்கின்றன. நாம் ஏதோ ஒரு நினைவில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, பின்னிருந்து ஒருவர் முற்றிலும் எதிபாராத நேரத்தில் முதுகில் அடித்தால், அந்த அடி, சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம், அந்த அடிக்கு உடல் தயாராக இல்லை. அதேபோல், எதிர்பார்க்கும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனம் தயாராகி விடுகிறது. தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிந்தால், அடுத்த வாரம் வரப்போகும் முடிவுகள் சரியாக இருக்காது என்று என் மனம் தயாராகி இருக்கும்.

எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வடிவங்களில் வரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. துன்பங்களைக் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு, ஓரளவு தெளிவைத் தருகிறார், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள். இவர், 1981ம் ஆண்டு எழுதிய புகழ்பெற்ற ஒரு நூல், When Bad Things Happen to Good People. “நல்லவர்களுக்கு பொல்லாதவை நடைபெறும்போது” என்ற இந்த நூல், வாழ்வில் நாம் சந்திக்கும் பல வகை துன்பங்களை ஆராய்கிறது. இந்நூலில் குஷ்னர் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் அடுத்தத் தேடலில் அசைபோட முயல்வோம்.

17 July 2018, 16:04