Cerca

Vatican News
இயேசு பன்னிருவரை இருவர் இருவராக அனுப்பினார் இயேசு பன்னிருவரை இருவர் இருவராக அனுப்பினார்  

பொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் என்ற உண்மையை, முதலில் ஏற்றுக்கொள்வோம். இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நம் அனைவருக்கும் தேவையானப் பாடங்களை, இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்

ஜெரோம் லூயிஸ்  -  வத்திக்கான் செய்திகள்

1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் அவர்கள், அதற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகள், ஜார்ஜியா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். ஆளுநர் பணியை அவர் நிறைவு செய்தபோது, அவருக்கு வயது 51. தன் 50 வருட வாழ்வின் பல அனுபவங்களைத் தொகுத்து, அவர் ஒரு நூலை வெளியிட்டார். அந்நூலுக்கு "Why Not the Best?" அதாவது, "மிகச் சிறந்ததாக ஏன் இருக்கக்கூடாது?" என்று தலைப்பிட்டார். இந்நூலில், தான் கிறிஸ்துவைப் பறைசாற்றத் தவறியதை, ஒரு நிகழ்வின் வழியே அவர் பகிர்ந்துள்ளார்.

ஜார்ஜியா மாநிலத்தில், ஒவ்வோர் ஆண்டும், பாப்டிஸ்ட் சபையினர், மறுமலர்ச்சி வாரத்தைக் கொண்டாடி வந்தனர். கிறிஸ்துவ வாழ்வில் ஆர்வம் குறைந்தோர், கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டோர் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களை மீண்டும் அந்த மறுமலர்ச்சி வாரத்தில் பங்கேற்க அழைத்து வந்தனர் அச்சபையினர்.

ஒரு தியாக்கோன் என்ற முறையில், ஜிம்மி கார்ட்டர் அவர்கள், கிறிஸ்துவ வாழ்வில் ஆர்வம் குறைந்தோரைத் தேடிச்சென்று, அவர்களுடன் நேரம் செலவழித்து, அவர்களை மீண்டும் கோவிலுக்கு அழைத்துவர அரும்பாடு பட்டார். மறுமலர்ச்சி வாரத்தில் ஒருநாள், "கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்தல்" என்ற தலைப்பில் பேசுவதற்கு அவர் அழைக்கப்பட்டார். அந்த உரையைத் தயார் செய்வதற்கு, அவர் அமர்ந்தபோது, தான் எத்தனை இல்லங்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கச் சென்றோம் என்பதைக் கூறி, மக்களை வியப்பில் ஆழ்த்த விழைந்தார். ஆனால், அவர் கண்டுபிடித்த உண்மை, அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

இராணுவச் சேவையிலிருந்து இல்லம் திரும்பிய காலத்திலிருந்து, 14 ஆண்டுகள், கார்ட்டர் அவர்கள், கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், 140 முறை குடும்பங்களைச் சந்தித்து, கிறிஸ்துவைப்பற்றி பேசியுள்ளதை உணர்ந்தார். அதற்கு மாறாக, ஜார்ஜியா ஆளுநராகப் போட்டியிடத் தீர்மானித்த வேளையில், மூன்று மாதங்களில், ஒவ்வொரு நாளும், 16, அல்லது 18 மணி நேரங்கள் செலவிட்டு, ஒவ்வொரு தொகுதியாகச் சென்று, 3,00,000த்திற்கும் அதிகமானோரைச் சந்தித்து, தனக்கு வாக்களிக்கும்படி கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார். "எனக்காக, என் பதவிக்காக, மூன்று மாதத்தில், 3.00,000 சந்திப்புக்கள்; இறைவனுக்காக, 14 ஆண்டுகளில், 140 சந்திப்புக்கள்" என்று அவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நம்மைப்பற்றிப் பறைசாற்றவோ, அல்லது, நம் தலைவர்களைப்பற்றி துதிபாடவோ பெரும் முயற்சிகள் மேற்கொள்ளும் நாம், இறைவனைப் பறைசாற்ற என்ன முயற்சிகள் எடுக்கிறோம் என்பது, இன்றைய ஞாயிறு வழிபாடு நம்முன் வைக்கும் ஒரு சங்கடமானக் கேள்வி.

இறைவனைப் பறைசாற்றும் இறைவாக்கினர்களைப் பற்றி சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இறைவாக்கினர்களைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு நமக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறைவாக்கினர் ஆமோசை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கிறோம். இறைவனின் பணியாளராய் வாழ்வதைப்பற்றி, இயேசு, தன் சீடர்களுக்குத் தந்த அறிவுரைகள், இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளன.

இறைவாக்கினர்கள், இறைப்பணியாளர்கள் என்ற சொற்களைக் கேட்டதும், இது குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஒதுக்கப்பட்டத் தொழில் என்று முடிவெடுத்து, நாம் ஒதுங்கிவிட நினைக்கிறோம். இன்றைய வாசகங்களில் நாம் சந்திக்கும் யாருமே குருக்களாக, துறவிகளாக வாழ பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அனைவருமே, எளியத் தொழிலாளிகள்.

“நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு என்று அனுப்பினார்” (ஆமோஸ் 7: 14-15) என்று இறைவாக்கினர் ஆமோஸ் தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்வதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர்களில், இறைவாக்கினர் ஆமோஸ், மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. அவரது நூலில் நாம் கேட்பதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகள். ஆமோஸ் கூறிய கசப்பான உண்மைகளைக் கேட்க மறுத்த தலைமைக்குரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். "அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.

அமட்சியா சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தால், அதில் புதைந்திருக்கும் அரசியலை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும் நீ கூறும் எச்சரிக்கைகள் எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல், நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்பதே ஆமோசுக்கு, அமட்சியா கூறும் அறிவுரை. ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை, அமட்சியாவின் சொற்களில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு, இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது. "இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். "நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில் ஆடு, மாடு மேய்த்து வாழ முடியும்" என்று சுட்டிக்காட்டுகிறார், ஆமோஸ்.

பிழைப்புக்காக இறைவாக்கு உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த குருக்கள், மதத்தலைவர்கள், போலி இறைவாக்கினர்கள் மத்தியில், ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். உண்மை இறைவாக்கினர்கள், இன்றும் நம் மத்தியில் வாழ்வதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு அனுப்பி வைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது. இயேசு தன் சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் என்பதில் நமது முதல் பாடம் ஆரம்பமாகிறது. இருவர் இருவராக அனுப்பியதற்குப் பதில், சீடர்களை, ஒவ்வொருவராக, தனித்தனியாக அனுப்பியிருந்தால், அவர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்று இறையரசைப் பறைசாற்றியிருக்கலாமே; மனித சக்தியை (man power) சரிவரப் பயன்படுத்தும் மேலாண்மைப் (management) பாடங்கள் இயேசுவுக்குத் தெரியவில்லையே என்று  குறைசொல்லத் தோன்றுகிறது.

மேலாண்மைப் பாடங்களில், இருவராக, குழுவாகச் செயல்படும் வித்தைகள் சொல்லித் தரப்பட்டாலும், தனியொருவர் பெறும் வெற்றியே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. தனியொருவர் வெற்றி பெறுவதற்கு, அடுத்தவரைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என்ற பாதகமான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.

அருள் பணிகளுக்குச் செல்பவர்கள், இருவர் இருவராய்ச் செல்லும்போது, ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும்; பல வேளைகளில், ஒருவர், மற்றொருவரின் மனசாட்சியாகவும் செயல்பட முடியும்.

அருள்பணி புரியும் நேரங்களில், போதனைகள் நிகழும்; புதுமைகள் நிகழும்; மக்களிடம் பேரும் புகழும் ஓங்கும். இந்நேரங்களில், ஒருவர் தனியாகச் செயல்பட்டால், அந்தப் போதனைகளும், புதுமைகளும் ஏதோ தன் சொந்த சக்தியால் நிகழ்ந்ததைப்போல அருள்பணியாளர் உணரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் எழும். இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர், தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவருவார். நான், எனது, என்னால் முடியும் என்று, சுயநலத்தில் சிக்கி, சிதைந்துவரும் நம் உலகிற்கு, இயேசு சொல்லித்தரும் இந்த முதல் பாடம் மிகவும் தேவை.

இரண்டாவது பாடம்... இவ்விதம் அனுப்பப்பட்டவர்களுக்கு இயேசு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? மக்களுக்குப் பணிபுரியச் செல்லும் சீடர்கள், அம்மக்கள் மீது அதிகாரம் செலுத்த, இயேசு, அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள் மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை, தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித் தந்தார். அதிகாரம் என்ற பெயரில், மக்களை வதைக்கும் நம் தலைவர்கள், இயேசுவின் காலடிகளில் அமர்ந்து, இந்த ஒரு பாடத்தையாவது பயிலவேண்டும் என நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்வோம்.

பணியாளர், வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்வாலும் போதிக்கவேண்டும் என்பது, இயேசு சொல்லித்தரும் மூன்றாவது பாடம். பணியாளரின் வாழ்வு, மிக எளிமையான வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை, “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” (மாற்கு 6: 8-9) என்ற இயேசுவின் வார்த்தைகள் எளிமையான வாழ்வைத் தெளிவாக்குகின்றன. வாழ்க்கைப் பயணம் எளிமையாய் அமைந்தால், தேவையில்லாத சுமைகளை உள்ளத்தில் தாங்கி, பயணம் முழுவதும் பாடுபடவேண்டாம் என்று இயேசு சொல்வது, எல்லாருக்கும் பொதுவான ஒரு நல்ல பாடம்.

"உங்களை வரவேற்பவருடன் தங்கி இருங்கள், வரவேற்க மறுப்பவர்களிடம் இருந்து விரைவில் விலகிச் செல்லுங்கள்" என்பது, இயேசு நமக்குச் சொல்லித் தரும் நான்காவது பாடம். வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, “உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதை இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார்.

கால் தூசியை உதறிவிடுவதை, வழக்கமாக, ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாக, நாம் சிந்தித்துள்ளோம். இச்சொற்களை மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். பணிசெய்ய செல்லுமிடத்தில் சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு அடுத்த இடம் செல்லவேண்டாம். காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள் வழியே நமக்குச் சொல்லித்தந்த இறைவனுக்கு நன்றி பகர்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... தனக்கென தனி வழியை உருவாக்கி, ஓர் இறைவாக்கினராக, இறைப்பணியாளராக வாழ்ந்த காமராஜ் அவர்களின் பிறந்தநாளை, ஜூலை 15, (1903ம் ஆண்டு ஜூலை 15) இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கிறோம். வறியோர் மட்டில் கருணை உள்ளம் கொண்ட, அப்பழுக்கற்ற, நேர்மையான, இந்தக் கருப்பு வைரத்தை தமிழகத்திற்குத் தந்து, அவர் வழியாக, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க உதவிய இறைவனுக்கு நன்றி சொல்வோம்

 

14 July 2018, 15:55