புகையால் பாதிக்கப்படும் நகரம் புகையால் பாதிக்கப்படும் நகரம்  

வாரம் ஓர் அலசல் – அனைத்துலக புகையிலை எதிர்ப்பு நாள்

புகையிலையைப் பயன்படுத்துவதாலும் புகை பிடிப்பதாலும் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு 1987 ஆம் ஆண்டு முதல் உலக நலவாழ்வு நிறுவனம்(WHO) மே - 31 ஆம் நாளை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உற்ற நண்பர்களுக்கு உரிய நேரத்தை கொடுக்க முடியாமல் எடுத்துக்கொள்ளும் புகை அழகு குழந்தையை கைகளில் அள்ளி அன்போடு கொஞ்சுவதைத் தடுக்கும் புகை, வயதான தாய்தந்தையை, வளர்ந்த பின்னும் தேடாமல் வழிமாற வைக்கும் புகை, செழிப்பான குடும்பத்திற்கு செல்வத்தைச் சேர்க்காமல் செலவழிக்க வைக்கும் புகை, உயிரைப் பறிக்கும் என்றறிந்தும் உயிர் மூச்சாக நினைக்க வைக்கும் புகை. இத்தகைய புகைப் பழக்கத்தை ஒழிப்பதற்காகக் கொண்டாடப்படும் நாளே அனைத்துலக புகையிலை எதிர்ப்பு நாள்.

ஆண்டுதோறும் மே 31ஆம் நாள் அனைத்துலக புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்படுகின்றது. புகையிலையைப் பயன்படுத்துவதாலும் புகை பிடிப்பதாலும் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு  இந்நாள் கடைபிடிக்கப்படுகின்றது. 1987 ஆம் ஆண்டு உலக நலவாழ்வு நிறுவனம்(WHO) மே - 31 ஆம் நாளை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது. ஆண்டுதோறும் ஏறக்குறைய 55 இலட்சம் பேர் புகைப் பழக்கத்தால் இறந்து வருகிறார்கள் என்றும், இவர்களுள் 10 இலட்சம் பேர் இந்தியர்கள் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57 விழுக்காட்டினரும், பெண்களில் 10.8 விழுக்காட்டினரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்துகின்றனர்.

எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் இறப்புகள் அதிகமாக இருக்கின்றன. வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் புகையிலையினால் வருகின்றன. தொடர் புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் இளம்வயதிலேயே வருகின்றது. புகைப் பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். நாளொன்றிற்கு ஒரு சிகரெட் பிடிக்கும் ஒருவர் தன் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்களை இழக்கின்றார். ஒருவர் புகை பிடிப்பதால் அவருக்கும், சிகரெட் பீடி போன்று அவர் விடும் புகையை பிறர் நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனைகளும் வருகின்றன. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே ஆபத்தை வரவழைக்கிறது இப்புகை. கர்ப்பிணி பெண்கள் புகைபிடிப்பதால்  கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படுகின்றது.

2023ஆம் ஆண்டிற்கான புகையிலை எதிர்ப்பு நாளுக்கான கருப்பொருள் 

புகை பழக்கத்தைக் கைவிடும் மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 10 முதல் 15 ஆண்டுகள் கழித்துதான் முழு ஆரோக்கியத்தைப் பெறுகிறான். அது வரை புகையின் பாதிப்பு உடலுக்குள்ளே இருக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறார், இளம்வயதினர் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது. புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் பிற நாடுகளில் ஆரோக்கிய பராமரிப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 9 விழுக்காடு செலவிடப்படும் நிலையில், இந்தியாவில் இது வெறும் 3 விழுக்காடாகவே  இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படும் இந்த புகையிலை எதிர்ப்பு நாளுக்கான இவ்வாண்டு கருப்பொருள் ‘‘எங்களுக்கு தேவை உணவு, புகையிலை அல்ல‘‘ என்பதேயாகும். 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இக்கருப்பொருள் புகையிலையைப் பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்று பயிர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல், அதன்வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நிலையான, சத்தான பயிர்களை வளர்ப்பதை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் வழியாக உலகளாவிய உணவு நெருக்கடிக்கு தனது பங்களிப்பை இந்நாள் வழங்குகின்றது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 35 இலட்சம் ஹெக்டேர் நிலம் புகையிலை சாகுபடிக்காக மாற்றப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 2,00,000 ஹெக்டேர் காடழிப்புக்களும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் அதிக பயன்பாடு தேவைப்படுவதால்  மண் சிதையும் ஏற்படுகின்றன. பொதுவாக நாம் உண்ணும் உணவுகளை விளைவிப்பதற்கு உதவும் நிலத்தின் திறனை விட புகையிலை பயிரிடப்படும் நிலத்தின் திறன் மிகவும் குறைவுபடுகின்றது. மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் அளவிற்கு தனது திறனை நிலம் இழக்கின்றது. எனவே, புகையிலை உற்பத்தியைக் குறைப்பதற்கும், மாற்று உணவுப் பயிர்களின் உற்பத்தியில் விவசாயிகள் முன்னேறுவதற்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையில் நாம் உள்ளோம்.

புகையிலை என்னும் உயிர்கொல்லும் நச்சு

புகையிலை சாகுபடியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயனங்கள் போன்றவற்றால் நிலம் மட்டுமல்லாது அதனைப் பயன்படுத்தும் விவசாயிகளும் அவர்களது குடும்பத்தாரும் பாதிக்கப்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக புகையிலை எதிர்ப்பு நாளானது அரசின் சட்டங்களை மறுசீர் செய்யவும் சீர்தூக்கிப் பார்க்கவும், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்கவும் அழைப்புவிடுக்கின்றது. புகையிலைப் பயிரிடும் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குதல், உணவுப் பயிர்களை வளர்த்தல், சந்தை நிலைமைகளை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கும் இந்நாள் உதவுகின்றது.

புகைபிடித்தல் உடலுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கக்கூடியது. இதனால் உடலை காயப்படுத்தக்கூடிய மற்றும் கொல்லக்கூடிய பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சிகரெட் புகையில் 4,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன, இதில் 43 இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்குகின்றன. நிகோடின், தார், கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைட், அம்மோனியா, ஹைட்ரஜன் சயனைடு, ஆர்சனிக் டிடிடி ஆகியவை இப்புகையில் உள்ள  400 பிற நச்சுக்களாகும். சிகரெட் புகையில் உள்ளிழுக்கப்படும் பெரும்பாலான இரசாயனங்கள் நுரையீரலில் தங்கிவிடுகின்றன. இதனால் நுரையீரல், வாய், உதடு, இரத்தம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றது.

புகையிலை பொதுவாக அதன் இலைகள் மற்றும் பிற பாகங்களுக்காக வளர்க்கப்படும் தாவரமாகும். புகையிலையின் இலைகளை காயவைத்து புளிக்கவைத்து புகையிலை பொருட்களில் பயன்படுத்துகின்றனர். இதில் நிகோடின் என்னும் போதை பொருள் உள்ளது. ஜீனஸ் நிகோடினா என்பது 60 க்கும் மேற்பட்ட இனங்கள்  அடங்கியது. அதில் நிகோடினா டுபாகோ, மற்றும் நிகோடினா இரஷ்டிகா பொதுவாக சாகுபடி செய்யப்படும் வணிகப் புகையிலைகள் ஆகும். இதில் நிகோடினா இரஷ்டிகா இந்தியா, இரஷ்யா மற்றும் சில ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளபோதும் நிகோடினா டுபாகோ பரவலாக உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகின்றது. தென் அமெரிக்கா மற்றும் பெரு பகுதிகள் நிகோடினா டுபாகோ மற்றும் நிகோடினா இரஷ்டிகா தோன்றிய முக்கிய மையமாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவில் புகையிலை உற்பத்தி

இந்தியாவில் புகையிலை பெரும்பான்மையாக ஆந்திரா, குஜராத், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சாகுபடி செய்யப்படுகின்றது. குஜராத்தில் 45 விழுக்காடு உற்பத்தி (0.13mஏக்கர்) உள்ளது. குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதி, கர்நாடகாவின் நிப்பானி பகுதி வட பீகார் மற்றும் வங்காளம் பகுதியில் புகையிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. குறைந்த அளவில் மெல்லும் உணவுப்பொருள், மூக்குப்பொடி வகைகளில் டுபாகோ மற்றும் இரஷ்டிகா வகைகள் இங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் சிகார், வடிகட்டி, சேர்ப்பான் மற்றும் மெல்லும் புகையிலைகள் பயிரிடப்படுகின்றன.

நமது உடலின் உறுப்புக்கள் அனைத்தும் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை. குறிப்பாக இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நாளங்கள் வாய்ப்பு கிடைக்கும்போது தங்களைத் தாங்களே குணப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளன. புகைபிடிப்பதை ஒருவர் நிறுத்தினால், உடல் உடனடியாக தன்னைத்தானே சரிசெய்யத் தொடங்குகின்றது. சரியான ஊட்டச்சத்து மற்றும் செயல்பாடுகள் வழியாக ஒருவர் எத்தனை ஆண்டுகள் தொடர் புகைப்பழக்கம் உள்ளவராக இருந்தாலும், சில ஆண்டுகளுக்குள் நுரையீரல் மற்றும் இதய செயல்பாட்டை மீட்டெடுக்க முடிகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய்க்கான ஆபத்துக்கள் உடனடியாக குறையத் தொடங்குகின்றன.

தமிழகத்தில் புகையிலைக்குத் தடை

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி, இத்தகைய போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குட்கா, பான்மசாலாவை ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல்  நடவடிக்கைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  தடை மே 23-ம் நாளுடன் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 2024ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு கெட்ட பழக்கமும் நாம் பிறந்த போதே நம்முடன் பிறந்ததல்ல, எனவே அவற்றை எளிதில் மாற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் மனமும், மாறவேண்டும் என்ற மனஉறுதியும் இருந்தால் போதுமானது. ஒரு தீய பழக்கத்தை கற்றுக்கொள்ள மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனம் உதவும். மனதை முதலில் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். புகை நமக்கும் பகை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பகை என்பதை உணர்வோம். காற்றில் கலந்து காணாமல் போகும்  நச்சுப்புகை போல நமது மேன்மையான வாழ்வும் காணாமல் போகாமல் காப்போம். புகையை ஒழிப்போம் புற்று நோயைத் தவிர்ப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம் ஆயுளைக் காப்போம். அனைவருக்கும் அனைத்துலக புகையிலை எதிர்ப்பு நாள் நல்வாழ்த்துக்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2023, 13:03