வாரம் ஓர் அலசல் - அகில உலக பெண்கள் தினம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெண்கள் நாட்டின் கண்கள். உடலுக்குக் கண் எவ்வாறு முக்கியமோ அது போல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பெண்கள் மிக முக்கியம். அம்மா, அக்கா, தங்கை, தோழி, மகள், மருமகள் என்று எல்லா வடிவத்திலும் பெண்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்றும், பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மகாகவி பாரதியார். “பெண்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளே காரணம் என்று கூறியதோடு “ஆணுக்கு பெண் சமம்” என்றும் கூறினார் பாரதி. இன்று பெண்கள் சாதனை படைக்காத துறை எதுவுமில்லை என்று கூறும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதனைகள் படைத்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிகுந்த நாளான பெண்கள் தினம் பற்றி இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் காணலாம்.
இன்று நாம் மிக மகிழ்வோடு கொண்டாடி மகிழும் பெண்கள் தினத்திற்காக பலரும் பெரிதும் போராடி, இந்த நாளைக் கொண்டாட அனுமதி பெற்றுத்தந்திருக்கின்றார்கள். 18ஆம் நூற்றாண்டில் பெண்கள் என்றாலே அவர்கள் வீட்டு வேலை செய்வதற்கு மட்டும் தான் என்று முடக்கப்பட்டார்கள். இந்நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி பெண்கள் தொழிற்சாலை அலுவலகம் என்று கால் பதிக்க ஆரம்பித்தார்கள். இருப்பினும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்தில் நெசவுத்தொழிலில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். 16 மணி நேரம் வேலை செய்தாலும் மிகவும் குறைவான ஊதியம் தான் அவர்களுக்குக் கிடைத்தது. அந்த ஊதியம் சரியாகக் கிடைக்க, நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசைக்கு பணிந்து போகவேண்டும் என்கின்ற நிலைமை இருந்தது. இதனை எதிர்த்து 1857ஆம் ஆண்டில் நியுயார்க் நகர உழைக்கும் பெண்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, போராட்டம் நடத்தினார்கள். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சமுதாய உரிமை, வேலைக்கு ஏற்ற சம்பளம், வாக்குரிமை, பெண் விடுதலை என்று நிறைய கோரிக்கைகளை முன் வைத்து ஏராளமான போராட்டங்களும் நடந்தன.
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் அகில உலக பெண்கள் தினம் நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல, மாறாக போராட்டத்தில்தான் தொடங்கியது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. 1975ஆம் ஆண்டுதான் இந்நாளை அகில உலக பெண்கள் நாளாக ஐ.நா. அங்கீகரித்தது. பெண்களின் வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும், வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தியும் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் இறுதியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்து, முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இந்நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணியாவார். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அம்மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே 2011ஆம் ஆண்டு நூறாவது அகில உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அவ்வகையில் இவ்வாண்டு 112-வது பெண்கள் தினம்.
சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், மற்றும் வேலை நிறுத்தங்களில் தான் இந்நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன. 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8ஆம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும். 2023 இவ்வாண்டிற்கான கருப்பொருள் "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" ஆகும். “புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றம், பாலின சமத்துவத்தை அடைவதற்கான டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் அனைவருக்கும் கல்வியையும் அதிகாரத்தையும் அளிக்கிறது என்ற நோக்கத்தில் இக்கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள். சர்வதேச பெண்கள் தினம் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை ஒட்டி 3-4 நாள்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காகிறது. சீனாவில் அரசு கவுன்சில் அளித்த அறிவுரைப்படி பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், எல்லா இடங்களிலும், நிறுவனங்கள் இந்த விடுமுறையை நடைமுறையில் தருவதில்லை. இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது.
சமூகத்தின் ஓர் அங்கமாக உள்ள பெண்கள், தேசத்தை கட்டியெழுப்புவதற்குப் பெரும் பங்களிப்பைத் தருகின்றார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படுகின்றார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் அதிகளவில் இயற்கை வளங்களை நம்பி வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவை குறைவாகவே கிடைப்பதோடு, பெண்கள் உணவு, நீர், எரிபொருள் முதலானவற்றைப் பெறுவதில் பொறுப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, தீர்வை நோக்கி நகர்வது முதலான பணிகளை மேற்கொள்வது போன்றவற்றில் பெண்களின் தலைமை இன்றியமையாதது எனவும் கூறியுள்ளது.
இந்தியாவில் அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் ஆண்களை விட அதிக நேரம் பெண்களே உழைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. சராசரியாக ஆண்கள் 7 மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் 9 முதல் 11, மணி நேரம் உழைக்கிறார்கள். அதுமட்டுமன்றி, இந்தியாவில் பாலின பேதம் இன்றும் ஊதியரீதியாகவும் தொடர்கின்றது. ஆண்களை காட்டிலும் 34 விழுக்காடு குறைந்த ஊதியத்தை பெண்கள் பெறுகிறார்கள் என 2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது. ஆண் பெண் சமம் என்று வாயளவில் பேசினாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உரிமைகள் சம அளவில் இன்னும் வந்துவிடவில்லை.
சர்வதேச மகளிர் தினம் என்பது நாடு, குழு அல்லது அமைப்புக்குச் சொந்தமானதல்ல மாறாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமானது. இந்நாளில் மட்டுமன்று ஒவ்வொரு நாளும் பெண்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும். பெண்கள் எதிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தக் கொண்டாடப்படும் இந்நாள் பெண்களின் உரிமைகள் கிடைக்கும் வரை கொண்டாடப்பட வேண்டும். ’ஆணுக்குப் பெண் இளைத்தவறில்லை’ என்பதை இந்த உலகத்தில் பல பெண்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். கார்க்கி, மைத்ரேகி, அவ்வையார், காரைக்கால் அம்மையார், சரோஜினி நாயுடு, செல்வி ஜெயலலிதா, பாத்திமாபீவி, போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திவருகிறார்கள். அத்தகையோர் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே தெரிகின்றார்கள்.
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ், உலகப் பெண்கள் கிரிக்கெட் அரங்கில் ராஜபாட்டை செய்திவரும் வீராங்கனை ஷஃபாபி வர்மா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சாய்னாநேவால், பிவி சிந்து, பல உலக வீராங்கனைப் பட்டங்களை தன் வசப்படுத்திய மேரிகோம் ஆகியவர்களை இந்தியா உலகத்தரத்தில் சாதனைப் படைத்துவருவதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்று, விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை,அரசியல், நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், கார்ப்பரேட் உலகம், விமானம், விளையாட்டு, சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல்துறை, போன்ற எல்லாவகைத் துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது உலகிற்கு மழையைப் போன்று அளப்பரியதாக உள்ளது. இன்றைய சமூகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும் எனில், பெண்களை மதிக்கின்றவர்களாக ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.
வாழ்வின் எல்லா கட்டங்களிலும் நம்மையும் நமது சமூகத்தையும் தனது பணிகளால் உயர்த்தி கொண்டிருக்கும் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வன்முறைகள் இல்லாமல் வாழ வழி செய்ய வேண்டும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய உலகை நாம் உருவாக்குவதன் வழியாக நமது சமுதாயத்தை காப்போம். இந்நாளில் அன்றாடம் தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் எல்லா பெண்களையும் நினைத்துப் பார்ப்போம். போராடினால் தான் வெற்றி என்கின்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நமக்கு, எல்லா தடைகளையும் மீறி அரசியல், சமூக செயல்பாடு, பொழுது போக்கு, விளையாட்டு, தொழில்துறை என்று எல்லா துறைகளிலும் சாதனை செய்து கொண்டு இருக்கும் எல்லா பெண்களும் வாழும் சாதனையாளர்கள் தான். ரிது கரிதால், கல்பனா சாவ்லா, மலாலா யூசுசாய், கமலா ஹாரிஸ், என்று நிறைய பெண்கள் தடைகளையும் வெற்றிப்படிக்கட்டுக்களாக மாற்றிக்கொண்டு வருகின்றார்கள். பெண்களுடைய தலைமைத்துவத்தையும், ஆளுமையையும் மக்கள் அங்கிகரிக்கின்ற நாள் வந்துவிட்டது. பெண்கள் பெண்களுக்கு எதிரிகள் இல்லை. ஆண்கள் பெண்களுக்கு துணையாக இருப்பதே எல்லை என்பதை உணர்ந்து வாழ முயற்சிப்போம். தடைகளை தகர்த்து தனியுகம் படைப்போம். பெண்ணை வாழ்த்துவோம் பெண்மையை போற்றுவோம். சாதனை படைத்த, படைக்கத் துடிக்கும் அத்தனை பெண்குலத்திற்கும், பெண்ணாக பிறந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பொழிவு சேர்க்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்