உக்ரைன் அணு மின் நிலையத் தாக்குதல் குறித்து கவலை
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன் நாட்டிலுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய Zaporizhzhia அணுமின் நிலையம் மீண்டும் குண்டுவீச்சுக்களால் தாக்கப்பட்டிருப்பது, மிக ஆபத்தான சூழல்களை உருவாக்கியுள்ளது என்று, IAEA எனப்படும், பன்னாட்டு அணுசக்தி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Rafael Mariano Grossi அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய மிகப்பெரிய அணு மின் நிலையங்கள், இராணுவத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பது, மிகக் கடுமையான எதிர்விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்று, ஆகஸ்ட் 11, இவ்வியாழன் மாலையில், இரஷ்யாவின் விண்ணப்பத்தின்பேரில் நடைபெற்ற கூட்டத்தில் Grossi அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு அணுசக்தி நிறுவனம், அணு சக்தி, அமைதி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும், அணு ஆயுதங்கள், இராணுவத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவுமென உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்ப வல்லுனர்கள், குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள Zaporizhzhia அணுமின் நிலையப் பகுதியைப் பார்வையிட அனுமதியளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் Grossi அவர்கள் முன்வைத்துள்ளார்.
Zaporizhzhia அணுமின் நிலையத்தின் தற்போதைய உண்மையான நிலை குறித்து அறிவதற்கு, IAEA நிறுவனம், உக்ரைன் மற்றும், இரஷ்யாவைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறது எனவும், அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.
எத்தகைய அணுப் பேரிடரும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும், அணு ஆயுத அச்சுறுத்தலற்ற உலகம் என்ற நமது இலக்கை எட்டுவதற்கு அத்தகையப் பேரிடர் தடுத்துநிறுத்தப்படவேண்டும் எனவும், இதற்கு ஐ.நா.வின் இந்த அணுசக்தி நிறுவனத்தோடு, இரஷ்யாவும் உக்ரைனும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் Grossi அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, அந்த அணுமின் நிலையத்தில், ஓர் உலையின் மின்இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், நைட்ரஜன் ஆக்ஜிசன் நிலையத்திலும் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனவும், ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
1957ஆம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, IAEA பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது. (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்