மாற்றுத்திறன் கொண்ட.வர் மாற்றுத்திறன் கொண்ட.வர் 

டிசம்பர் 3 - மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாள்

இன்றைய உலகில் வாழும் நூறு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளில், 80 விழுக்காட்டினர், வளரும் நாடுகளைச் சார்ந்தவர்கள். இவர்களில், 46 விழுக்காட்டினர், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாற்றுத்திறன் கொண்டோர், சட்டம், சமுதாயம், பொருளாதாரம் என்ற பல்வேறு தளங்களில் சந்தித்துவரும் தடைகள் நீக்கப்படுவதும், அவர்கள், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நம் நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் பெறுவதும், அனைத்து அரசுகளும் நிறைவேற்றவேண்டிய கடமை என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 3, இவ்வெள்ளியன்று, மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், 2030ம் ஆண்டுக்குள், நீடித்து நிலைக்கும் முன்னேற்றம், உலகெங்கும் உருவாக, மாற்றுத்திறன் கொண்டோரையும் உள்ளடக்கிய திட்டங்கள் தேவை என்று கூறியுள்ளார்.

பொதுவாகவே, மாற்றுத்திறன் கொண்டோர் பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கும், நலவாழ்வு திட்டங்களில் பங்கேற்பதற்கும் தடைகள் நிலவிவரும் சூழலில், கோவிட் பெருந்தொற்று சூழல், இந்தத் தடைகளை இன்னும் கூடுதலாக்கியுள்ளன என்று, யூனிசெஃப் அறிக்கையொன்று கூறுகிறது.

துபாய் நகரில் நடைபெற்றுவரும் உலகத் தொழில் கண்காட்சியில், டிசம்பர் 3 இவ்வெள்ளியன்று, "அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை அனைவருக்காகவும் வடிவமைத்தல்: உறுதியான உள்ளத்துடன் தலைமையேற்றுச் செல்லுதல்" என்ற தலைப்பில் பன்னாட்டு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாளில், நியூ யார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில், "தொழிநுட்பங்கள் வழியே சமத்துவம் அற்ற நிலையைக் குறைத்தல்: மாற்றுத்திறன் கொண்டோரை உள்ளடக்கிய முன்னேற்றம் குறித்த கண்ணோட்டம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவண்ணம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில், "புதியத் தலைமுறைகளின் தலைமைத்துவம்: கோவிட்-19க்குப் பின், மாற்றுத்திறன் கொண்ட சிறியோர் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் குரல்கள்" என்ற மையக்கருத்துடன் ஒரு சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றைய உலகில் வாழும் நூறு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளில், 80 விழுக்காட்டினர், வளரும் நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும், உலகெங்கிலும், உள்ள மாற்றுத்திறனாளிகளில், 46 விழுக்காட்டினர், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் ஐ.நா.வின் புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும், டிசம்பர் 3, இவ்வெள்ளியன்று, சிறப்பிக்கப்படும் மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாளையொட்டி, மாற்றுத்திறன்களோடு வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் வழங்கும் சான்று வாழ்க்கையை, “நானே திருஅவை” (#IamChurch) என்ற ஹாஷ்டாக்குடன், ஒலி-ஒளி வலைத்தள காட்சிகளாக வெளியிடுவதற்கு திருப்பீடம் திட்டமிட்டுள்ளது.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, டிசம்பர் 06, வருகிற திங்கள் முதல் புதிதாகத் துவங்கவுள்ள வலைக்காட்சித் தொடர்களை, மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 14:55