கிளாஸ்கோ COP26 உலக மாநாட்டின்போது விழிப்புணர்வு கிளாஸ்கோ COP26 உலக மாநாட்டின்போது விழிப்புணர்வு 

வாரம் ஓர் அலசல்: அழிவைத் தெரிவு செய்யாதே மனிதா!

மனிதகுலம் இயற்கை மீது தொடுக்கும் போரினால் இப்பூமிக்கோளத்தின் ஏறத்தாழ 75 விழுக்காட்டு நிலப் பகுதி சேதமடைந்துள்ளது. ஏறத்தாழ பத்து இலட்சம் விலங்கு மற்றும் தாவர இன வகைகள் அழியும் ஆபத்தில் உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

வெட்டப்பட்ட மரங்களால் வெப்பமானது புவிப்பந்து, துளிமழையும் நனைக்கவில்லை, துயருண்ட விளை நிலத்தை… தொழிற்சாலைப் பெருக்கத்தினால் சுருங்கிப் போனது சுவாசக்காற்று. பாலித்தீன் குப்பைகளால் பலியாகும் வனவிலங்குப் பட்டியலோ நெடுந்தொடராய்… ஓசோனில் ஓட்டையிட்டும் ஓயவில்லை மண்ணில் மாசோட்டம். தொழிற்நுட்ப வளர்ச்சியென தொலைக்கிறோம் இயற்கையினை. இழந்தபின் இயலுமா சுற்றுச்சூழலைச் சீரமைக்க….?  (சா.சுல்தான் இப்ராஹிம்). ராம்மலர் என்ற வலைப்பக்கத்தில் சுற்றுச்சூழல் பற்றி (https://rammalar.wordpress.com) இபபடியொரு கவிதை பதிவாகியிருந்தது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், கனமழை, வெள்ளம், புயல், காட்டுத் தீ, வறட்சி, கடும் வெப்பம் என இயற்கைப் பேரிடர்களை மனித சமுதாயம் தொடர்ந்து சந்தித்து வருகிறது. தலைநகர் சென்னையில் 2015ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கனமழை. நகரின் முக்கிய தெருக்கள் தண்ணீரில் மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணமாக, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகள், இன்னும் ஒன்பது ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

போர்களும் சுற்றுச்சூழலும்

ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியிருப்பதுபோல, மனிதகுலம் இயற்கை மீது தொடுக்கும் போரினால் இப்பூமிக்கோளத்தின் ஏறத்தாழ 75 விழுக்காட்டு நிலப் பகுதி சேதமடைந்துள்ளது. ஏறத்தாழ பத்து இலட்சம் விலங்கு மற்றும் தாவர இன வகைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பனில் மூன்றில் ஒரு பகுதியை உறிஞ்சும் பெருங்கடல்கள் மாசடைந்துள்ளன. இதனால் அவை காலநிலை மாற்றத்தைத் தடுக்க திறனற்று உள்ளன. மேலும், உலக அளவில் நடைபெற்றுவரும் போர்கள், மற்றும், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மட்டுமன்றி, நாடுகளில் இடம்பெறும் அரசியல் சார்ந்த வன்முறைகள், போராட்டங்கள், தெருக்கலவரங்கள் போன்றவையும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கின்றன. இவை காலநிலை மாற்றத்திற்கு கூடுதலாக உரமிடுகின்றன. இன்றும் உலகில் முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் போர்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு ஐ.நா. வின் வளர்ச்சித்திட்ட அமைப்பு (UNEP) கூறியுள்ளது.     

போர் என்றாலே, அதில் மனித உயிர்கள் பலியாவது, காயமடைவது, நகரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் சேதமடைவது ஆகியவையே எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் போர்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது பற்றி அதிகம் விளம்பரப்படுத்தப்படுவதில்லை. போர்களால், நீர் வளங்கள் மாசடைகின்றன, அறுவடைகள் எரிக்கப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றன, மண்வளம் மாசடைகின்றது, இராணுவத்திற்காக விலங்குகள் கொல்லப்படுகின்றன. உலகில் கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுப் போர்களில் ஏறத்தாழ நாற்பது விழுக்காடு, மரங்கள், வைரம், தங்கம், எண்ணெய், செழிப்பான நிலம், நீர் வளம் போன்ற உயர் மதிப்புடைய இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக இடம்பெற்றுள்ளன. போர்களால் இயற்கை வளங்கள் இரட்டிப்பாகவும் சேதமடைகின்றன. மேலும் இராணுவத்தால் புவி மாசடைவதையோ, அதனால் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தையோ, இராணுவத்திற்கு நாடுகள் செலவழிக்கும் தொகையை குறைக்கவேண்டும் என்பது பற்றியோ அதிகம் பேசப்படுவதில்லை என்ற ஆதங்கமும் பலரில் உள்ளது. எனவே, காலநிலை மாற்றத்திற்கு எதிராய் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உலகத் தலைவர்களுக்கு பலநிலைகளிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வேளையில், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வளர்ச்சித்திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புதிய விழிப்புணர்வு வலைக்காட்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அழிவைத் தேடிச் செல்லாதே மனிதா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலைக்காட்சியில், டைனோசர் என்ற உயிரினம், ஐ.நா. அவையில் அத்துமீறி நுழைந்து உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் டைனோசர் இவ்வாறு பேசுகிறது

டைனோசரின் எச்சரிக்கை

cop 26 மாநாட்டையொட்டி ஐ.நா.வின் விழிப்புணர்வு காணொளி

மனிதர்களே, அழிவைத் தெரிவுசெய்யாதீர்கள். அழிவை நோக்கிச் செயல்படுவது மிகவும் மோசமானது. எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக எரி கல் விழுந்ததால் நாங்கள் அழிந்துபோனோம். ஆனால், மனிதர்களே, நீங்கள் அழிவைத் தெரிவுசெய்வதற்குக் காரணம் என்ன? பணத்தால் நீங்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். உலகம் முழுவதும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். முழு இனத்தையும் அழிப்பதற்குப் பணத்தைச் செலவிடுவதைவிட, அவர்களைக் காப்பாற்றுவதற்கு அதனைச் செலவிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஆயினும், காலம் கடந்துவிடவில்லை, இன்னும்கூட நேரம் இருக்கிறது. தவறுகளுக்கு காரணங்களையும் மன்னிப்புகளையும் சொல்வதை நிறுத்திவிட்டு, மாற்றங்களைத் தொடங்குங்கள். உங்களது இனத்தை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இவ்வாறு அந்தக் காணொளியில் டைனோசர் கூறுகிறது.

எர்த்ஷாட் விருது பெற்ற வினிஷா உமாசங்கர்

தமிழகத்தின் திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் அவர்கள், சூரிய மின்சக்தியால் இயங்கும், துணிகளுக்கு இஸ்திரி போடும் நடமாடும் வண்டி ஒன்றை உருவாக்கி இருக்கின்றார். 40 ஆயிரம் ரூபாய் செலவில் இவர் உருவாக்கியுள்ள இஸ்திரி வண்டியில் அடுப்புக்கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இதற்காக, தேசிய மற்றும், பன்னாட்டு அளவிலும் விருதுகளை இவர் பெற்றுள்ளார். பிரிட்டன் இளவரசர் வில்லியம் அவர்கள் உருவாக்கி நடத்திய எர்த்ஷாட் (Earth Shot) எனும் சுற்றுச்சூழல் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு போட்டியில், வினிஷா அவர்களும் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இப்போட்டி, சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இளவரசர் வில்லியம் அவர்கள், COP26 உலக மாநாட்டில் உரையாற்ற, சிறுமி வினிஷா அவர்களுக்கு விடுத்த அழைப்பின்பேரில், இளவரசர் வில்லியம் அவர்கள் தலைமையில் அம்மாநாட்டில் அனல்பறக்கும் உரையொன்றை ஆற்றி, அவையோர் அனைவரையும் அச்சிறுமி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

COP26 உலக மாநாட்டில் வினிஷா உமாசங்கர்

COP உலக மாநாட்டில் வினிஷா உமாசங்கர்

உலகத் தலைவர்களே, மரியாதையுடன் உங்களுக்கு ஒன்றைக் கூற விழைகிறேன். பழைய சிந்தனைகள், பழக்கவழக்கங்களை விட்டொழித்து, புதிய சிந்தனையுடன் எங்களுடன் இணைந்து பணியாற்ற உங்களை அழைக்கிறோம். வருங்காலத்தைக் கட்டியமைப்பதில் கடந்த காலத்திலே நீங்கள் சிக்கிக்கொண்டாலும், நீங்கள் செயல்படவேண்டும் என்று நாங்கள் காத்திருக்கப்போவதில்லை. பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எங்களை நீங்கள் வழிநடத்தத் தவறினாலும், நாங்கள் முன்நின்று வழிநடத்துவோம். நீங்கள் தாமதப்படுத்தினாலும் நாங்கள் செயலில் இறங்குவோம். நீங்கள் கடந்த காலத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் புதிய எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் அதற்காக பின்னர் வருந்துவீர்கள். நம் பொருளாதாரத்தை, வாகன எரிபொருள், புகை மற்றும் சுற்றுச்சூழல் மாசினால் வளர்த்தெடுக்கக் கூடாது. புதிய எதிர்காலத்துக்கு புதிய பார்வை எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. எங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள், திட்டங்கள், தீர்வுகளை உங்களுடன் பகிர்ந்து, உடன்பணியாற்றத் தயாராக இருக்கிறோம். வெற்று வாக்குறுதிகளைத் தந்து, அவைகளை நிறைவேற்றாமல்போன தலைவர்கள் மீது என்னுடைய தலைமுறையினரில் ஏராளமானோர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர் இப்படி கோபப்பட எல்லா காரணங்களும் இருந்தாலும், அதற்கு எனக்கு நேரமில்லை. ஏனெனில் நான் நேர்மறைச் சிந்தனை உள்ளவள். செயல்படவே விரும்புகிறேன். நான் வெறும் இந்தியச் சிறுமி மட்டுமல்ல, இப்பூமிக்கோளத்தின் சிறுமி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

COP26 சில தீர்மானங்கள்

கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் 31ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் COP26 இரு வார உலக மாநாட்டின் முதல் வாரத்தில், உலகத் தலைவர்கள் அறிவித்துள்ள சில தீர்மானங்கள் நம்பிக்கையளிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், காடுகள் அழிவைத் தடுக்கவும், 2030ம் ஆண்டுக்குள் மீத்தேன் வாயு வெளியேற்றத்தை 30 விழுக்காடாகக் குறைக்கவும் உறுதியளித்துள்ளனர். ஆனால் மீத்தேன் வாயுவை அதிகமாக வெளியிடும் சீனா, இரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் இதில் இணையவில்லை. காலநிலை மாற்றத்திற்குப் பெருமளவில் காரணமான நிலக்கரியைக் கைவிடுவதாக அறிவித்திருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், அதனைப் பயன்படுத்தி, மின்சாரம் தயாரிப்பில் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ புதியதாக எந்த முதலீடுகளையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் இசைவு தெரிவித்துள்ளன. ஆயினும், நிலக்கரியை அதிகம் சார்ந்துள்ள ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவை இசைவுதெரிவிக்கவிலை. உலக அளவில் ஏறத்தாழ நாற்பது விழுக்காடு, அதாவது 130 டிரில்லியன் டாலர் முதலீடுகளை வைத்திருக்கும் 450 நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.

ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர் பங்குபெறும் இந்த உலக மாநாட்டில், புதைபடிம எரிபொருள் தொழிற்சாலைகளோடு தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளே, அதிகமாக, அதாவது 503 பேர் கலந்துகொள்கின்றனர் எனவும், இந்த எரிபொருள்களுக்கு ஆண்டுக்கு 423 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகின்றது எனவும், 2019ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 37 விழுக்காட்டு மின்சாரம் நிலக்கரியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மனிதருடைய வாழ்க்கை, அவர் வாழ்கின்ற சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நல்ல சூழல் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது அதேசமயம் மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும், மன அழுத்தம் மிக்கவனாகவும் மாற்றுகிறது. மனிதர், தான் வாழும் சூழலைப் பாதுகாத்து வாழும்போது, அச்சூழல் அவருக்கு மட்டுமல்ல, அவர் வாழ்கின்ற சமுதாயம் முழுவதுமே நலமோடு வாழ உதவும். அழிவைத் தேடிச் செல்லாதே மனிதா என்ற உயிரினத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற, உலகத் தலைவர்களைச் சார்ந்திருப்பதோடு, நாம் தனிப்பட்ட மற்றும், குழும வாழ்விலும் செயல்படுத்த முனைவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2021, 14:23