உள்மன அமைதி உள்மன அமைதி 

வாரம் ஓர் அலசல்: ஐ.நா.வின் உலக அமைதி நாள்

உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உனது நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதி இருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும் - அப்துல் கலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

அமைதி என்று இணையதளத்தில் எழுதினால், சமுதாய அளவில், அரசியல் அளவில், பன்னாட்டு அளவில், ஒவ்வொரு மனிதரின் உள்மனத்தளவில்.. இவ்வாறு  பல்வேறு நிலைகளில் அதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இக்காலச் சூழலில், அமைதி என்பது, போர், பகைமை, வன்முறை போன்றவை இல்லாத ஒரு நிலை, சொல்லப்பட்டுள்ளது, உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உனது நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதி இருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும் என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார். ஆம், உலகில் அமைதி பிறப்பது, தனிநபரின் வாழ்வுமுறையைப் பொருத்தது. ஒவ்வொருவரின் உள்மனதில் உருவாகும் போர்க்குணமே, சமுதாயப் போர்க்குணமாக மாறி வன்முறை வெடிக்கின்றது, போட்டி பொறாமை, மற்றவரோடு ஒப்பிடுதல், பகைமை, கோபம், பயம் போன்ற எதிர்மறை குணங்களே ஒருவரின் மனஅமைதியின்மைக்குக் காரணம் என பெரியோர் சொல்கின்றனர். குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ஆரோக்ய ஜோஸ் அவர்கள், மனத்தில் அமைதியோடு வாழ்வது பற்றி இவ்வாறு கூறுகிறார்

உள்மன அமைதி- அருள்பணி ஆரோக்ய ஜோஸ்

செப்டம்பர் 21, இச்செவ்வாயன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக அமைதி நாளைச் சிறப்பிக்கிறது. ஐ.நா. பொது அவை, 1981ம் ஆண்டில் இந்த உலக அமைதி நாளை உருவாக்கியது. அதற்குப்பின் இருபது ஆண்டுகள் சென்று, 2001ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனம், இந்த உலக நாள், வன்முறையற்ற, மற்றும், போர்நிறுத்த  நாளாக, கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும், அந்நாளில், அமைதி பற்றிய கருத்தியல்கள் அனைவரிலும் ஆழப்பதிக்கப்படவேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது. கோவிட்-19 பெருந்தொற்றால், பலநிலைகளில் நாம் அனைவரும் துன்புற்றுவரும் இவ்வேளையில், உலகிலும், தனிநபரிலும் அமைதி நிலவ ஆண்டவரை மன்றாடுவோம். நமக்கு, உலகம் தர இயலாத அமைதியைத் தருபவர் அவரே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2021, 15:15