நியுயார்க்கில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நினைவிடம் நியுயார்க்கில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நினைவிடம் 

பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களுடன் ஒருமைப்பாடு

2017ம் ஆண்டில், ஐ.நா. பொது அவை, பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களின் நினைவு மற்றும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் உலக நாளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

‘நீங்கள் தனியாக இல்லை’ என்ற தலைப்பில், பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களின் நினைவு மற்றும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் உலக நாள் ஆகஸ்ட் 21, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 20, இவ்வெள்ளியன்று, உயர்மட்ட அளவில், மெய்நிகர் கூட்டம் ஒன்றை துவக்கிவைத்து உரையாற்றிய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், நியூயார்க் மற்றும், பாக்தாத் துவங்கி, ஆப்ரிக்காவின் சஹாரா பகுதியில் இடம்பெறும் பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களுக்கு, முதலில் தன் மரியாதையை செலுத்தினார்.

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தேவை உள்ளது என்றும், பயங்கரவாதத்திற்குப் பலியாகியுள்ளவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுகின்றது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

நியூ யார்க் மற்றும், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்கள், பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டை உலகம் நினைவுகூரும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தானின் நிலவரம் கூடுதலாக கவலைதருகின்றது எனவும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

2001ம் ஆண்டிலிருந்து, நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு, புதிய முறைகளில் பயங்கரவாதம் இடம்பெற்று, உலகெங்கும், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துவருகின்றது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், வன்முறை மிகுந்த மத, மற்றும், அரசியல் பயங்கரவாதம், அந்நியர் மீது வெறுப்பு, இனப்பாகுபாடு போன்றவையும், மக்களின் உயிரிழப்புக்களை அதிகரிக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்புடைய கட்டுப்பாடுகளும், இத்தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான வளங்களை வழங்கமுடியா சூழலை உருவாக்கியுள்ளன என்றுரைத்த, கூட்டேரஸ் அவர்கள், இந்த உலக நாள், மனித உரிமைகளும், உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களும் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது என்று கூறினார். 

2017ம் ஆண்டில், ஐ.நா. பொது அவை, பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களின் நினைவு மற்றும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் உலக நாளை உருவாக்கியது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2021, 15:23