வியட்நாமில் பெருந்தொற்று மருத்துவ பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் வியட்நாமில் பெருந்தொற்று மருத்துவ பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள் 

மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ள அழைப்பு

இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில், 10 முதல் 11 விழுக்காடு மக்களுக்கும், வியட்நாமில், 2 விழுக்காட்டிற்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பணக்கார நாடுகளிடம், மிகுதியாக இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளுமாறு, அனைத்துல செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க கூட்டமைப்பு, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

உலக நாடுகளிடையே, தடுப்பு மருந்துக்கள், சரிநிகரற்ற முறையில் பகிரப்படுவதாலும், புதிய வகை டெல்டா கொரோனா தொற்றாலும் மிகபெரிய அளவில் இறப்புக்களைச் சந்தித்துவரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிலைகுறித்து, ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இந்த பிறரன்பு கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆசியாவில், வியட்நாம் முதல், மலேசியா மற்றும் மியான்மார் வரை, மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், நோயாளிகளைப் பராமரிக்க போதிய வசதிகள் இன்றி, உயிரிழப்புக்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களில் மட்டும், தென்கிழக்கு ஆசியாவில், 38,522 இறப்புக்கள், அதாவது, வட அமெரிக்காவை விட இருமடங்கு இறப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், நகர்களில் அதிகரித்துவந்த இப்பெருந்தொற்று, தற்போது, தென்கிழக்கு ஆசியாவின், கிராமப்பகுதிகளில், தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் பரவி, ,பெருமெண்ணிக்கையில் உயிரிழப்புகளை உருவாக்கும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது, செஞ்சிலுவை மற்றும் செம்பிறை கூட்டமைப்பு.

பணக்கார நாடுகளில், பல இலட்சக்கணக்கான தடுப்பூசிகள் மிகுதியாக இருப்பதை ஏழை நாடுகளுடன், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பகிரும்படி விண்ணப்பிக்கும் இந்த கூட்டமைப்பு, தடுப்பு மருந்து தயாரிப்போரும், அரசுகளும், இந்த தடுப்பூசி தயாரிப்பு தொழில்நுட்பத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பகிரவேண்டும் எனவும், தடுப்பூசி மருந்து உறபத்தியை அதிகரிக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.

கனடா மற்றும் இஸ்பெயினில் 64 விழுக்காட்டு மக்களும், பிரிட்டனில் 60 விழுக்காடு மக்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 50 விழுக்காடு மக்களும் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றிருக்க, தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியாவும் பிலிப்பீன்சும் 10 முதல் 11 விழுக்காடு மக்களுக்கே தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் 1466 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். வியட்நாமில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே, கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2021, 13:50