வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை அனுபவம் 

வாரம் ஓர் அலசல்: வாழ்க்கை என்பது, மற்றவர் மனதில் வாழும்வரை

வாழ்க்கை என்பது சாகும்வரை அல்ல, மற்றவர் மனதில் வாழும்வரை- புனித அன்னை தெரேசா

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான, மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், இளையோரைச் சந்திக்கும்போதெல்லாம், கனவு காணுங்கள் என்று உற்சாகப்படுத்தி வந்தார் என்பதை நாம் அறிவோம். அவர், ஒருமுறை, மேல்நிலைப் பள்ளி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலாம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றது. கேள்வி நேரம் வந்தபோது, மாணவி ஒருவர் எழுந்து, ஐயா, இந்தியாவின் மிகப்பெரும் பெருமை என்ன என்று கேட்டார். அதற்கு கலாம் அவர்கள், நான் இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஏற்றிய குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதை ஏற்றுவதற்கு என்னிடம் கொடுக்கப்பட்ட மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம். அதை ஏற்றிய நான் இஸ்லாமியரின் அடையாளம், இதுதான் இந்தியாவின் மிகப்பெரும் பெருமை என்று கூறினார். இவ்வாறு நம்மில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு, பெரியோர், எளியமுறையில் பதில்களைத் தருகின்றனர்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்வழிகாட்டிகள் உள்ளனர். வாழ்க்கை என்ற சொல்லாடலும், வழி என்ற சொல்லாடலும் ஒரே சொல்லில் இருந்துதான் உதித்திருக்கவேண்டும் என்று, IAS அதிகாரி இறையன்பு அவர்கள் சொல்லியுள்ளார். வாழ்க்கை என்பது வழிகாட்டுதல். வாழ்க்கை என்பது வழியைக் கேட்டுப் பெறுதல். நம் உழைப்பு என்பது, நம் வியர்வையை வழிகாட்டுவது. நம்  சேமிப்பு என்பது, நம் சிக்கனத்தை வழிகாட்டுவது. நம் படைப்புக்கள் என்பது, நம் அறிவுத்திறனை வழிகாட்டுவது. இவ்வாறு, உலகத்தில் ஒவ்வொரு செயல்பாடும் வழிகாட்டுகின்ற ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு செயல்பாடும் நாம் சீரான வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு முயற்சியாகவே உள்ளது, அல்லது, நாம் தெரிந்துகொண்டதை மற்றவருக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது என்றும், இறையன்பு அவர்கள் கூறியுள்ளார்.

பத்து வயது ஏழைச் சிறுவன், டிப்ஸ்

ஒருநாள், பத்து வயது ஏழைச் சிறுவன் ஒருவன், நேப்பிள்ஸ் நகரில், உணவகம் ஒன்றிற்குச் சென்று அமர்ந்தான். உணவகப் பணியாள் அச்சிறுவன் இருந்த மேஜையின்மீது ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார். பின்னர் அச்சிறுவனுக்கு வேண்டிய உணவு என்ன என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், வாழைப்பழச் சுவையுள்ள ஐஸ்கிரீம் விலை, என்ன என்று கேட்டான். அதற்கு அந்தப் பணியாளர், ஐம்பது சென்ட் என்று சொன்னார். உடனே அச்சிறுவன் சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளை எண்ணிக்கொண்டிருந்தான். அந்தப் பணியாள் அவனிடம், நான் மற்றவர்களையும் கவனிக்கவேண்டும், சீக்கிரம் சொல் என்று, படபடப்பாகக் கூறினார். சரி, சாதாரண ஐஸ் கிரீம் என்ன விலை என்று கேட்டான் சிறுவன். உடனே அவர், எரிச்சலுடன், 35 சென்ட் என்று பதில் சொன்னார். அப்படியா, அந்த ஐஸ் கிரீமையே எனக்குக் கொண்டு வாருங்கள் என்றான். பணியாளரும் வேண்டா வெறுப்போடு, அந்த ஐஸ்கிரீம் கப்பையும், விலைத் தாளையும் கொண்டுவந்து வைத்தார். அச்சிறுவனும் ஐஸ் கிரீமைச் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றதும், அங்குச் சென்ற பணியாளருக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. அந்தப் பணியாளர், அச்சிறுவன் சென்ற பிறகு, அவன் அமர்ந்திருந்த மேஜையை சுத்தம் செய்யச் சென்றார். அங்கு அவன் சாப்பிட்ட அந்த கப்பின் அடியில், அவர் பார்த்தது, கண்ணீரை வரவழைத்தது. விலைத் தாளில் நன்றி என்று எழுதப்பட்டிருந்தது, அதோடு அந்த ஐஸ்கிரீமுக்குரிய, 35 சென்ட்டும், டிப்ஸாக, 15 சென்ட்களும் இருந்தன. அச்சிறுவன், தான் விரும்பிய ஐஸ் கிரீமைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, குறைந்த விலையில் வேறொன்றை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, டிப்சும் வைத்துவிட்டானே, அதைப் புரிந்துகொள்ளாமல் அவனிடம் கோபமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று அந்த பணியாளர் வருந்தினார். ஆம், நாம் மனத்தாராளமாக இருப்பதற்கு செல்வந்தராக இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் இயலுகின்றபோதெல்லாம் இரக்கத்தோடு இருந்தாலே போதுமானது. அதோடு, வாழ்க்கைப் பாடங்களை யாரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்.

அறிமுகமில்லா முதியவருக்கு உதவி

ஒருநாள், சென்னையில், இரவு நேரத்தில், வயதானவர் ஒருவர், மிகுந்த களைப்போடு, சோர்ந்துபோய், ஒரு மஞ்சள் பையோடு அந்த வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த இளைஞரிடம், இது ஆனந்த் என்பவரின் வீடுதானே, எண் 8, யோகானந்தம் நகர்? தானே என்றார் பெரியவர். நான்தான் ஆனந்த், உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்டார் இளைஞர். நான் உங்கப்பாவோட நண்பன், காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார் என்று, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும். விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக்கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது, செய்வாய் என்று நம்புகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு வினாடி யோசித்த இளைஞர் ஆனந்த், பெரியவரின் பரிதாபமான நிலையைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் அழைத்துச்சென்று, தான் வைத்திருந்த  மாவில் தோசை சுட்டுக்கொடுத்தார். பின்னர், ஆனந்த், அந்த பெரியவரிடம், என்ன நடந்தது? சொல்லுங்கள் என்று கேட்டார்.

தம்பி, எனக்கு 22 வயதில், அழகான ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மகேஷ். பொறுப்பான பிள்ளை. அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். பொறியியல் படிப்பையும் முடித்தான். வேலை கிடைத்துவிட்டால், நம் கஷ்டம் தீர்ந்துவிடும் என்று வாய்க்குவாய் சொல்வான். வேலையும் கிடைத்தது. அன்று எங்களை வணங்கிவிட்டு சென்னைக்குப் புறப்பட்டவன், தெருவைக் கடக்கும்போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டான். அவன் இறந்த துயரத்தில் என் மனைவியும் படுத்த படுக்கையாகிவிட்டார். இவனுக்குமுன் பிறந்த பிள்ளைகளும் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். ஆழ்ந்த துயரத்தில் இருந்த என்னை உன் அப்பாதான் தேற்றி, இழப்பீடு தொகையை வாங்கச் சொன்னார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான் என்று, இந்த கடிதத்தோடு அவர்தான் என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார் என்று அழுகையோடு கூறி முடித்தார் பெரியவர். அடுத்த நாள் காலையில் ஆனந்த், அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு, அந்த பெரியவருக்கு, இழப்பீடு தொகையை வாங்கிக் கொடுத்ததோடு, காரைக்காலுக்கு பயணச்சீட்டும், பயணத்திற்கு தண்ணீரும் சாப்பாடும் வாங்கி பேருந்தில் ஏற்றிவிட்டார்.

அப்போது அந்த பெரியவர், தம்பி ஆனந்த், நான் உனக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டேன் என்று கண்கலங்கினார். உடனே ஆனந்த் அவரிடம், ஐயா, நீங்கள் தேடிவந்த ஆனந்த் நான் இல்லை, நீங்கள் மெயின் யோகானந்தம் நகர் போயிருக்க வேண்டும் என்று ஆனந்த் கூறியவுடன், தம்பி, நீ அதை அப்போதே சொல்லியிருக்கலாமே என்று சொன்னார். இல்லை ஐயா, அந்த இடம், இங்கிருந்து, ஏறத்தாழ  2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சென்னையில், இரவு நேரத்தில் அந்த முகவரியை நீங்கள் கண்டுபிடிப்பது கஷ்டம். அதுவும் நீங்கள் ஊருக்குப் புதிதும்கூட. நேற்று இரவு, நீங்கள் தேடின ஆனந்த் வீட்டிற்குத் தொலைபேசி எடுத்தேன். அவர் டில்லி போயிருக்கிறார், திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்று சொன்னார்கள். எந்த ஆனந்துன்னா என்ன, உங்களுக்கு இழப்பீடு கிடைப்பதற்கு, நான் உதவியாக இருந்தேன் என்ற நிம்மதி இருக்கிறது, அதுவே எனக்குப் போதும் என்று கூறினார், இளைஞர் ஆனந்த். பேருந்து புறப்பட்டவுடன், இறந்துபோன தன் அப்பாவை நினைத்துக்கொண்ட ஆனந்த், அப்பா, நீங்கள் இவ்வாறு கடிதம் எழுதிக்கொடுத்தனுப்பியிருந்தாலும், இதேபோல்தான் செய்திருப்பேன் என்று கண்கலங்கினார். இந்த கதையை, பலமுறை கேட்டிருந்தாலும், அதைக் கேட்கும் ஒவ்வொருமுறையும் கண் கலங்குகிறது.  

வாழ்க்கை

வாழ்க்கையில், முகம் தெரியாத பலர், வயது வரம்பின்றி, தங்களின் சிறு சிறு செயல்கள் வழியாகப் பாடங்களைக் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு கற்றுத்தருபவர்கள், வழிகாட்டிகளாகவும் உள்ளனர். கற்றுத் தருபவர்களின் வார்த்தைகளில் நாம் நம்பிக்கையும் வைக்கவேண்டும். இதற்கு ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்லியுள்ளார். வயதான ஒருவரும், இளைஞர் ஒருவரும் ஓர் ஊருக்குச் சென்றனர். வழியில் அந்த ஊரைச் சார்ந்த ஒருவரிடம், தாங்கள் போகவிருந்த இடத்திற்கு நடந்துசெல்ல, எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டனர். மெதுவாகப் போனால் விரைவில் அடைந்துவிடலாம், வேகமாகப் போனால் நேரம் எடுக்கும் என்று அவர் சொன்னார். இந்தப் பதில் வயதானவருக்கு வித்தியாசமாகப்பட்டது. அவர் வேகமாக நடக்கத் தொடங்கினார். அந்தப் பாதை கரடு முரடாக இருந்ததால் வழுக்கி விழுந்து காயங்கள் ஏற்பட்டு அந்த ஊரை அடைய அதிகநேரம் எடுத்தார். ஆனால் இளைஞரோ மெதுவாக நடந்து தன் இலக்கை விரைவில் எட்டினார்.

வாழ்க்கைப் பாடங்களை உணர்த்த வயதுவரம்பு கிடையாது. வாழ்க்கை என்பது வழிகாட்டும் ஒரு நிகழ்வு. அது நாம் நினைப்பதுபோல் இருக்காது, ஆனால் அந்த நினைப்பையே நம்மால் மாற்ற முடியும் என்று பெரியோர் சொல்கின்றனர். புனித அன்னை தெரேசாவும், வாழ்க்கை என்பது சாகும்வரை அல்ல, மற்றவர் மனதில் வாழும்வரை என்று சொல்லியுள்ளார். அப்துல் கலாம் அவர்கள் கூறியிருப்பதுபோன்று, இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது நம் கைகளில்தான் உள்ளது. ஆம். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2021, 14:41