ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் 

மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரில் 3ல் ஒருவர் சிறார்

மனிதவர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளைப் பலப்படுத்தவும், குற்றவாளிகளை நீதி விசாரணையின்முன் நிறுத்தவும், உலக அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் – ஐ.நா.வின் தலைமைப் பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 30, இவ்வெள்ளியன்று, மனிதவர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இந்த வர்த்தகத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி விண்ணப்பித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று, ஏறத்தாழ, 12 கோடியே 40 இலட்சம் மக்களை கூடுதலாக வறுமைக்கு உள்ளாக்கியுள்ள இவ்வேளையில், மனிதவர்த்தகம் என்ற கொடுமைக்கு மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் உட்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகுவோரில், மூன்றில் ஒருவர் சிறார் என்று, கவலையோடு கூறியுள்ளார்.

வருவாய் குறைவாக உள்ள நாடுகளில் இக்கொடுமைக்குப் பலியாகுவோரில் பாதிப்பேர் சிறார் என்றும், இவர்களில் அதிகமானோர், தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

குற்றக்கும்பல்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏழை மக்களை இனம்கண்டு, அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்கின்றன எனவும், இணையதளத்தைக் களமாகப் பயன்படுத்தி, சிறாரை, பாலியல் தொழில், கட்டாயத் திருமணம், மற்றும் ஏனைய தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றன, இத்தகைய சிறாரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்றும், கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களுக்கு, நாடுகள் நிதியுதவி செய்யுமாறும், மனிதவர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளைப் பலப்படுத்தவும், குற்றவாளிகளை நீதி விசாரணையின்முன் நிறுத்தவும், உலக அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூட்டேரஸ் அவர்கள், வலியுறுத்திக் கூறியுள்ளார். (UN )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 13:54