பொகோட்டாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் பொகோட்டாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் 

பெருந்தொற்றின் தடுப்பு மருந்து, உடனடியாக கிடைக்க...

கோவிட்-19 பெருந்தொற்றின் தடுப்பு மருந்து, உலகெங்கும், குறிப்பாக, வறுமைப்பட்ட நாடுகளில் உடனடியாகக் கிடைப்பதற்கு G7 உலகத் தலைவர்கள், இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 11ம் தேதி இவ்வெள்ளி முதல், 13 ஞாயிறு முடிய நடைபெறவிருக்கும் G7 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு, ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பான யுனிசெஃப்பின் (UNICEF) நல்லெண்ணத் தூதர்களாகப் பணியாற்றுவோர், விண்ணப்பம் ஒன்றை, திறந்த மடலாக வெளியிட்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தடுப்பு மருந்து, உலகெங்கும், குறிப்பாக, வறுமைப்பட்ட நாடுகளில் உடனடியாகக் கிடைப்பதற்கு G7 உலகத் தலைவர்கள், இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கவேண்டும் என்று, இந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளிலும் இந்தப் பெருந்தொற்று தடுக்கப்பட்டால் மட்டுமே, ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கமுடியும் என்பதை, யுனிசெஃப் தூதர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இவ்வாறு செய்யத் தவறினால், இந்தப் பெருந்தொற்றின் வெவ்வேறு வடிவங்கள், வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு வயதினரைத் தாக்கக்கூடும், என்ற எச்சரிக்கை, இந்த விண்ணப்பத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகின் செல்வம் மிகுந்த நாடுகளைச் சேர்ந்த G7 தலைவர்கள், வறிய நாடுகளுக்கு அனுப்பும் தடுப்பு மருந்தை ஒரே நேரத்தில் அனுப்பினால், அந்த நாடுகளில் அவற்றை உடனடியாக மக்களுக்கு வழங்கவோ, அல்லது, அவற்றைப் பாதுகாக்கவோ போதிய வசதிகள் இல்லாதச் சூழலில், அவை தூக்கியெறியப்படவேண்டியிருக்கும் என்பதையும், யுனிசெஃப் தூதர்கள் தங்கள் மடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, நடைபெறவிருக்கும் G7 கூட்டத்தில், தலைவர்கள் சரியான கால அளவை மனதில் கொண்டு தங்கள் உதவிகளை வழங்க முடிவெடுக்குமாறு, இந்த விண்ணப்பத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"இவ்வுலகின் நம்பிக்கை உங்கள் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள் நினைத்தால் இந்த சவாலை முழுமனதோடு சந்திக்கலாம். எதிர்காலத்தில் நம் குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைக் காண்பதற்குத் தேவையான முடிவை எடுங்கள்" என்ற சொற்களுடன், இந்த விண்ணப்ப மடல் நிறைவடைகிறது.(UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2021, 14:05