இந்தியாவில் மனிதாபிமானப் பணிகள் இந்தியாவில் மனிதாபிமானப் பணிகள் 

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவது இல்லை

இந்த உலகையே ஆள நினைக்கும் பேராசை பிடித்த பேரரசராக இருந்தாலும், தினமும் பிச்சையெடுத்து சாப்பிடும் ஏழையாக இருந்தாலும் சரி, இறந்தால் எல்லார் உடலிலிருந்தும் வெளிவருவது துர்நாற்றம்தான்.

மேரி தெரேசா: வத்திக்கான் 

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாம், அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம். இதற்கு மத்தியில், பல நல்லுள்ளங்களில் ஊற்றெடுக்கும் கருணை, நம்பிக்கையையும் வளர்த்து வருகின்றது. கடந்த வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே பல மனித நேயச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. திருச்சியில் ஏழை கூலித்தொழிலாளி ஒருவர், பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது அவரது மனைவிக்கு பி பிளஸ் (B+) இரத்தம் அவசரமாகத் தேவைப்பட்டது. இந்த ஊரடங்கு நேரத்தில், எங்கே, யாரிடம் போய் கேட்பது என்ற கவலையோடு அவர் தெருவில் நடந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்த இளம் காவல்துறை பணியாளர் ஒருவர், இந்த கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில், தெருவில் நடக்கலாமா என்று அவரிடம் கேட்டார். அப்போது அந்த தொழிலாளி அவரிடம், தனது நிலையை விளக்கினார். உடனடியாக, அந்த காவல்துறை பணியாளர், அவரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்தம் கொடுத்தார். அதன் பயனாக, அந்த தொழிலாளியின் மனைவிக்குச் சுகப்பிரசவமும் நடைபெற்றது. தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர். அவரும், கண்ணீரால், அந்த காவல்துறை பணியாளருக்கு நன்றி சொன்னார். இந்த நற்செயல் பற்றிக் கேள்விப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி, அந்த பணியாளரை அழைத்து, 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்து, தன் பாராட்டையும் தெரிவித்தார். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த பணியாளர், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, அந்த தம்பதியரிடமே அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டார்.

திருப்பூர் சகோதரர்கள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில்,  பலரும், பல விதங்களில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனைகள் தவிர, தெருக்களிலும் பெருந்தொற்று அவசர மருத்துவச் சேவைகளை ஆற்றிவரும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்ற பலருக்கென, திருப்பூரில் இரு உடன்பிறப்புகள், புதிய சேவை ஒன்றைத் துவக்கியுள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்த, 27 வயது நிரம்பிய கலாமணி,  24 வயது நிரம்பிய அவரது தம்பி மோகன் ஆகிய இருவரும்,  தற்போதைய ஊரடங்கு காரணமாக வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் வீட்டிலேயே தேனீர் தயாரித்து, இப்பணியாளர்களுக்கு, இலவசமாக விநியோகித்து வருகின்றனர். மேலும், இவர்கள், தங்களது இப்பணி பற்றி, தினமலர் செய்தியாளரிடம் இவ்வாறு கூறியுள்ளனர்.  நாங்கள் தினக் கூலி வேலை செய்து வந்தோம். தற்போது வருமானம் இல்லை. இருப்பினும் எங்களால் இயன்ற, இந்த சிறிய சேவையைத் துவக்கியுள்ளோம். எங்களால் முடிந்த வரை இச்சேவையைத் தொடர்ந்து ஆற்றத் திட்டமிட்டுள்ளோம்.

உணவக முதலாளியின் நற்பணி

ஓர் ஊரில் உள்ள ஒரு சிறிய உணவகத்திற்கு ஒரு நாள், பத்து வயது சிறுமி ஒருவர், கையில் தூக்கு வாளியுடன் வந்து, அந்த உணவக முதலாளியிடம், "அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வரச்சொன்னாங்க...! காசு நாளைக்குத் தருவாங்களாம் என்று கூறினாள். அந்த முதலாளியும், "ஏற்கனவே கணக்கில் நிறைய செலுத்தவேண்டி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....இப்போ தூக்கு வாளியைத் தா என்று, அவளிடமிருந்து அதை வாங்கி, அந்த வாளி நிறைய சாம்பார், மற்றும், இட்லி பார்சலை அந்த சிறுமியிடம் கொடுத்தார். அச்சிறுமியும், "சரி... அம்மாகிட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே..." என்று கூறிவிட்டு கிளம்பினாள். அந்த உணவகத்தில் வழக்கமாகச் சாப்பிடும் நபர் ஒருவர், முதலாளியின் இந்தச் செயலைக் கவனித்துவிட்டு அவரிடம், "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?" என்று கேட்டார். அதற்கு அந்த முதலாளி, "அட சாப்பாடுதானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி பிள்ளைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனது வரல.. அதெல்லாம் குடுத்துடுவாங்க... என்ன கொஞ்சம் நாள் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? சிறுமி அம்மாக்கிட்ட பசிக்குதுன்னு கேட்டிருக்கும்.. நான் கொடுத்தனுப்புவேன் என்று அவங்க நம்பி, அவளை அனுப்பி இருக்காங்க.. ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல,  அதுதான் முக்கியம். நான் உணவு தரவில்லை என்றால், அந்தச் சிறுமி, தன் தாய்க்காக திருடப் போகும், அல்லது, அந்தத் தாய், தன் பிள்ளையின் பசிக்காக, வேறு தவறுகள் செய்வாள்... ஆனால், நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நமது சமுதாயத்தில் சூழ்நிலையின் காரணமாக இயல்பாக நடக்கக்கூடிய இரண்டு தவறுகளை என்னால் தடுக்க முடிந்திருக்கிறது. நான் கும்பகோணத்தில் வாழ்ந்தபோது, என்னுடைய இளமைப்பருவத்தில் எனக்கும் இதுபோன்ற அனுபவம் ஒன்று இருந்தது. புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதேபோல கடன் சொல்லி, அவ்வப்போது என் பசியை ஆற்றிக்கொள்வேன். ஒருநாள் அந்தப் பாட்டியிடம்,  ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பாட்டி, அட போப்பா,  நீ பணம் தந்தால் அது எனக்கு லாபக்கணக்கு. பணம் தராமல் ஓடிப்போய்விட்டால், அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லி, மெய்மறக்க சிரித்தார் என்று அந்த முதலாளி சொன்னார். இந்த நிகழ்வு பற்றிய தன் எண்ணத்தை, வாட்சப் ஊடகத்தில் ஒருவர், இவ்வாறு பதிவுசெய்திருந்தார்.

தியாகராச பாகவதர்

இதுதான், இந்தியா, இதுதான் நமது நம்பிக்கை, பண்பாடு! வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை. நடிகர் திருவாளர் சிவகுமார் அவர்கள், ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரை ஒன்று, வலைக்காட்சியில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஒரு காலத்தில், தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த எம்.கே.தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, எஸ்.எஸ்.வாசன் போன்ற சிலரின் இறுதிக்கால நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை அவர் கூறியிருந்தார். பாகவதர், ஏழிசை மன்னர் என்று பெயர் பெற்றிருந்தவர். 1944ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், மூன்று ஆண்டுகள் சென்னையில் ஒரே திரையரங்கில் ஓடி, மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை, அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. இந்திய வரலாற்றிலேயே தங்கத் தட்டில் உணவு உண்ட ஒரே ஆள் தியாகராச பாகவதர். இந்தியாவை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்கள் அவரிடம் வந்து, போர் நடக்கவிருக்கிறது, எங்களுக்கு உதவி வேண்டும் என்று பாகவதரிடம் கேட்டனர். அவரும் நாடகம் போட்டு, கச்சேரி வைத்து, ஆங்கிலேயருக்கு உதவினார். போர் முடிந்தவுடன், ஆங்கிலேயர்கள், பாகவதருக்கு வெகுமதியாக, 250 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்க முன்வந்தனர். ஆனால் பாகவதரோ, எனது நாட்டையே பிடித்துக்கொண்டு அதில் ஒரு பகுதியை கூறுபோட்டு எனக்கே தானமாக வழங்குகிறீர்களா, எனது முழு நாட்டையும் கொடுங்கள் என்று, ஆங்கிலேயர்களிடம் கேட்டவர். ஆனால் அவர் இறந்தபோது 110 ரூபாய் கொடுத்து, அவரது உடலை அரசு மருத்துவமனையைவிட்டு வெளியே எடுத்துவர முதலில் எவரும் முன்வரவில்லை. தமிழ்த் திரையுலகில் பாகவதரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்று சொல்லப்படுகிறது. 

பி.யு. சின்னப்பா

புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா (உலகநாதபிள்ளை சின்னப்பா) அவர்கள், தமிழ்த் திரைப்பட உலகில், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று, பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர் அவர் அந்நகரில் 46 வீடுகள் வைத்திருந்தவர். இவர் மொத்த புதுக்கோட்டையையும் வாங்கி விடுவார் என்று அஞ்சிய புதுக்கோட்டை மன்னர்,  இனிமேல் யாரும் அவருக்கு வீடு விற்கக் கூடாது என்று கட்டளையிட்டாராம். ஆனால் கடைசி காலத்தில், பி.யு. சின்னப்பா அவர்களது மனைவி, சென்னை, தாம்பரம் பகுதியில் பத்து அடியில் குடிசை போட்டுக் குடியிருந்தார். அந்த நிலத்தை, அரசு பட்டா போட்டுத் தந்தால் புண்ணியமாக இருக்கும் என்று அவர் கூறியதை அறிந்த அப்போதைய தமிழக முதலமைச்சர் அந்த உதவியைச் செய்ய முன்வந்தபோது, அந்த அம்மா இறந்துவிட்டார்.

இதுதான் மனித வாழ்க்கை. பணம், புகழ் என்பது யாரிடமும் நிரந்தரமாக இருக்கக்கூடிய விடயங்களே அல்ல. இந்த உலகிற்குள் நாம் வரும்போது வெறுங்கையோடு வந்தோம், உலகைவிட்டுப் போகும்போதும் அப்படியே செல்வோம். அதனால் இந்த உலகிற்கு நாம் ஏதாவது நல்லது செய்துவிட்டுப் போகவேண்டும். அதுதான் நிலைத்து இருக்கும். செல்வம் சேர்ந்தால் அதைப் பகிர்ந்துகொள். இல்லாவிட்டால் அந்த செல்வமே உன்னை அழித்துவிடும். இந்த உலகையே ஆள நினைக்கும் பேராசை பிடித்த பேரரசராக இருந்தாலும், தினமும் பிச்சையெடுத்து சாப்பிடும் ஏழையாக இருந்தாலும் சரி, இறந்தால் எல்லார் உடலிலிருந்தும் வெளிவருவது துர்நாற்றம்தான். பசி பிணி மூப்பு ஆகிய எல்லாமே எல்லாருக்கும் பொதுதான் என்றும், சிவகுமார் அவர்கள் கூறியுள்ளார். அன்பு இதயங்களே, இந்த கொரோனா பெருந்தொற்றால் இறப்பவர்கள் அடக்கம் செய்யப்படும் முறை, இந்த உண்மையை நமக்கு அதிகமதிகமாக உணர்த்தி வருகிறது.

இதுவும் கடந்துபோகும்

ஒரு சமயம், ஓர் ஊரில், புத்தரின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த, மக்கள் அவரிடம், நாங்கள் எத்தனையோ பேரிடம் போதனைகள் கேட்டுவிட்டோம். இப்போது எங்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் அனைவருக்குமே ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது, எங்களுடைய பிரச்சனைத் தீர்ந்து வாழ்வில் ஒளிவீச ஏதாவது சொல்லித் தாருங்கள். போதனைகள் வேண்டாம், எளிதாக மனப்பாடம் செய்து சொல்வதற்கு ஏற்ற சிறிய போதனை ஒன்று வேண்டும் என்று கேட்டனர். அம்மக்களைப் பார்த்து புன்னகையை உதிர்த்த புத்தர், இதுவும் கடந்துபோகும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இந்த உலகில் இன்பம், துன்பம், வெற்றி தோல்வி இவை எதுவுமே நிரந்தரமல்ல, இதுவும் கடந்துபோகும் என்று அறிவுரை கூறும், பழமையான சூஃபி கதை ஒன்றையும், நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். ஆம். கொரோனா பெருந்தொற்றும் கடந்துபோகும். அது உருவாக்கியுள்ள பெருந்துன்பங்களும் கடந்துபோகும். ஆயினும், நம் இவ்வுலக இறுதிப் பயணத்திற்குப் பின்னும் நிலைத்திருப்பது, நாம் ஆற்றிய நற்செயல்களே. எனவே, வாழும்போது, இந்த உலகிற்கு ஏதாவது நன்மைகளைச் செய்வோம். Karl Marx அவர்கள் கூறியுள்ளது போன்று, விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை.       

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2021, 14:28