"நம் பூமிக்கோளத்தை மீட்டெடுக்க" - பூமிக்கோள நாள் கருத்து

பூமிக்கோளத்தின் செல்வங்களை தேவையின்றி சூறையாடும் நாம், காற்றை, நிலத்தை மற்றும் கடலை குப்பைக் கிடங்குகளாக மாற்றிவருகிறோம் - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் இந்நேரம், இவ்வுலகை, இன்னும், தூயதாக, பசுமையாக, நீடித்து நிலைக்கும் வண்ணம் அமைப்பதற்கு நம் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டார்.

"நம் பூமிக்கோளத்தை மீட்டெடுக்க" என்ற மையக்கருத்துடன், ஏப்ரல் 22, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட 51வது பூமிக்கோள நாளையொட்டி செய்தி வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், மக்களும், பூமிக்கோளமும் நீடித்து நிலைக்கும் வண்ணம் நம் பொருளாதாரம் மாறவேண்டும் என்பதன் அவசரத்தை நாம் புரிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

பூமிக்கோளத்தின் செல்வங்களை தேவையின்றி சூறையாடும் நாம், காற்றை, நிலத்தை மற்றும் கடலை குப்பைக் கிடங்குகளாக மாற்றிவருகிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், கூட்டேரஸ் அவர்கள், பூமிக்கோளத்துடன் நாம் மேற்கொண்டுள்ள போரை உடனடியாக நிறுத்தி, அதை குணமாக்கும் மருத்துவர்களாக செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.  

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில், 1969ம் ஆண்டு சாந்தா பார்பரா (Santa Barbara)வுக்கு அருகே கடலில் ஏற்பட்ட மிகப்பெரும் எண்ணெய் கசிவு பிரச்சனையையும், நதிகள் மாசடைதல் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் மையப்படுத்தி, 1970ம் ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் ஊர்வலங்களை மேற்கொண்டனர். இந்த நிகழ்வையடுத்து, அவ்வாண்டு முதல், 'பூமிக்கோள நாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2021ம் ஆண்டு கடைபிடிக்கப்படும் '51வது உலக பூமிக்கோள நாளை’யொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் முயற்சியால், உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளும் கணணி வழி சுற்றுச்சூழல் உச்சி மாநாடு உட்பட, வெவ்வேறு நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2021, 16:22