Lagosல் கருணை இல்லப் பிள்ளைகள் Lagosல் கருணை இல்லப் பிள்ளைகள் 

விதையாகும் கதைகள்: ஒரேயொரு நல்ல விடயத்தை மட்டும் நினைத்தாலே

நம்மை விட்டுப் பிரிந்து சென்ற யார் மீதாவது வெறுப்பு கோபம் இருந்தால், அவர்கள் செய்த ஒரேயொரு நல்ல விடயத்தை மட்டும் நினைத்துப் பார்த்தாலேபோதும். அந்த நல்ல விடயம், அவர்கள் மீது இருக்கும் அத்தனை வெறுப்பையும் தூக்கி எறிந்துவிடும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள் பட்டதாரி ஆசிரியர் ஒருவர், பெற்றோர்-மாணவர் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினார். அதில் கடைசியில் ஒரு மாணவன் மட்டும் தனியே அவர் முன்னால் போய் நின்றான். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த மாணவன், நன்றாகவும் படிப்பான். ஆசிரியர் அவனிடம், என்னப்பா உனது பெற்றோர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவன், சார், நான் ஓர் அநாதை. நான் குழந்தையாய் இருந்தபோதே எனது பெற்றோர்  என்னை  கருணை இல்லத்தின் வாசலில் போட்டுவிட்டனர். இப்போது ஒரு பெரியவரின் உதவியால்தான் நான் படிக்கிறேன் என்று சொன்னான். ஆசிரியர் அவனிடம், உன்னிடம் ஒன்று கேட்கலாமா என்றதும், ஓ, தாராளமாக என்றான். சரி, உனக்கு உனது அப்பா அம்மா மீது கோபமே வந்தது கிடையாதா என்று கேட்டார். அதற்கு அவன், சார் உண்மையைச் சொல்லவேண்டுமெனில், எனக்கு சிறு வயதில் அவர்கள் மீது கோபம் இருந்தது. ஒரு நாள் எனது கருணை இல்லத் தலைவர் என்னை தனது அறைக்கு அழைத்து, அந்த இல்லப் பதிவேட்டை என்னிடம் காண்பித்தார். அதில் அந்த இல்லத்திலுள்ள சிறார் அத்தனை பேருடைய விவரங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு பதிவை, புகைப்படத்துடன் பார்த்தேன். ஒரு டிசம்பர் மாதக் கடுங்குளிரில், அந்த  கருணை இல்ல வாசலில், ஒரு நல்ல அடர்த்தியான படுக்கை விரிப்பை கீழே விரித்து, அதன் மேல் குழந்தை ஒன்றைக் கிடத்தி, நல்ல நீலநிறத்தில் ஒரு அழகான கனமான துண்டை அதன் மீது சுற்றி, காதுகளை மறைக்கும்முறையில் தலையில் ஒரு தொப்பியை வைத்து, அந்தக் குளிரில் அந்தக் குழந்தை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கும்படியாக அத்தனை பத்திரமாகப் போடப்பட்டிருந்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, நான்தான். அதைப் பார்த்த பிறகு, என் மனதிலிருந்த கோபம் அத்தனையும் மறைந்துவிட்டன. இவ்வளவு பாதுகாப்பாக என்னைப் போட்டுவிட்டுச் சென்ற அந்த தாய் கெட்டவராக இருக்கவே முடியாது. அந்த தாய் மீது எப்படி சார் வெறுப்பு வரும். அதனால் இப்போது நான் எதற்கும் வருத்தப்படாமல், எனது வாழ்வு நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கையில், மகிழ்வோடு வாழ்ந்து வருகிறேன் என்றான். அதைக் கேட்ட, காதல் தோல்வியால் விரக்தியடைந்திருந்த, அந்த முப்பது வயது நிரம்பிய ஆசிரியரின் மனக்கலக்கம் அகன்றது. ஆம். நம்மை விட்டுப் பிரிந்து சென்ற யார் மீதாவது வெறுப்பு கோபம் இருந்தால், அவர்கள் செய்த ஒரேயொரு நல்ல விடயத்தை மட்டும் நினைத்துப் பார்த்தாலேபோதும். அந்த நல்ல விடயம், அவர்கள் மீது இருக்கும் அத்தனை வெறுப்பையும் தூக்கி எறிந்துவிடும். வெறுப்போடு வாழ்வது, வெறுப்பவரைப் பாதிக்குமோ பாதிக்காதோ, ஆனால் அந்த வெறுப்போடு வாழ்கின்றவரைப் பாதிக்கும். (நன்றி குட்டிக் கதை சபரி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2020, 14:51