தேன் குடிக்கும் தேனீ  தேன் குடிக்கும் தேனீ  

விதையாகும் கதைகள் : தேன் குடித்த வண்டு ஊதிய சங்கு

மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது. இது வெண்பா அல்ல, வெறும்பா, என்றார் ஒட்டக்கூத்தர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

புலவர் புகழேந்தி, சோழ மன்னரின் தமிழ் அவையில், தான் எழுதிய நள வெண்பாவை அரங்கேற்ற ஆரம்பித்தார். பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.

இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி, “மல்லிகையே வெண்சங்கா வண்டூத” என்று பாடினார். அதன் பொருள், மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி செய்தபோது, என்பதாகும்.

சோழ மன்னரின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தரும் இருந்தார். அவருக்கும், புகழேந்திக்கும் ஏழாம் பொருத்தம். புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து, எதில் குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருந்தார் ஒட்டக்கூத்தர். புகழேந்தி, மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும், வெகுண்டெஎழுந்தார் ஒட்டக்கூத்தர்.

அவர் கூறினார், “சங்கு ஊதுபவன் சங்கின் பின்புறம் இருந்து ஊதுவதுதான் முறை. மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது. புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல, வெறும்பா”, என்று.

அவையில் அமைதி நிலவியது.

புகழேந்தி என்ன சொல்லப்போகிறார் என்று, அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.

புகழேந்தி அவரை நோக்கி, “ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான். ஆனால், உமக்கு ஒரு விடயம் தெரியவில்லையே! கள் குடிப்பவனுக்கு தலை எது, கால் எது என்று தெரியுமா? கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?'' என்றார்.

அவையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2020, 15:42