பழையதும் புதியதும் பழையதும் புதியதும் 

விதையாகும் கதைகள் : காடுகள் எங்கே?

காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல், பறவையினங்கள், வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்ற கவலை மனிதனுக்கு இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. அந்தத் திறந்தவெளியில் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் இருந்தன. ஒன்று அரச மரம், மற்றொன்று, புதிதாக வளர்ந்து வரும் வேப்பமரம். ஒருநாள் அவ்விடத்திற்கு வந்த இரண்டு மனிதர்கள், அந்த மரங்களைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு ஏதேதோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்துச் சென்றுவிட்டார்கள். அவர்கள் போனபிறகு, இளமையாக இருந்த வேப்பமரம் அரசமரத்தைப் பார்த்து, “அரச மரமே, ஏதோ காடு, காடென்று பேசிக்கிட்டாங்களே, காடென்றால் என்ன? அது எப்படியிருக்கும்?’ என்று கேட்டது. இதைக் கேட்ட அரசமரத்துக்கு அழுகை, பொங்கிக்கொண்டு வந்தது.

“ஆமாம், இங்கே பச்சைப் பசேல்னு ஓர் அடர்ந்த காடு இருந்தது. காடு என்றால், எங்குப் பார்த்தாலும் நிறைய மரங்கள், செடிகொடிகள், மணம் வீசும் பூக்கள் எல்லாம் இருக்கும். அதனுள் வன விலங்குகள், பறவையினங்கள், ஊர்வன என எண்ணற்ற உயிரினங்கள் வசித்துக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்து வந்தன. அந்த விலங்குகள் எல்லாம் எங்களைச் சுற்றிச் சுற்றி விளையாடும். இரையைத் தேடி அங்குமிங்கும் அலைந்துவிட்டு, எங்கள் நிழலில் வந்து இளைப்பாறும். ஒருநாள் இந்தக் காட்டை சுற்றிப் பார்க்க மனிதர்கள் வந்தார்கள்… கொஞ்ச நாள் கழித்து, ஒரு பத்து இருபது பேர் வந்தார்கள்… ஈவிரக்கம் இல்லாமல், இங்கிருந்த மரங்களையெல்லாம் வெட்ட ஆரம்பித்தார்கள். பாவம், அந்தப் பறவையினங்கள்தான் கீச் கீச்சென்று கத்தி, அங்குமிங்கும் பறந்தார்கள். விலங்கினங்கள் பயந்து அலறியபடி, போக இடம் தெரியாமல் ஓடின.  நான் முதிர்ந்த மரமாக இருந்ததால், என்னை மட்டும் விட்டுவிட்டார்கள். காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல், பறவையினங்கள், வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்ற கவலை மனிதருக்கு இல்லை“, என்றது அரசமரம்.

அவ்வேளையில், இவ்விரண்டு மரங்களையும் பார்த்துவிட்டுச் சென்ற இரண்டு பேர் மீண்டும் அங்கு வந்தார்கள். “பல டன் தேறும்’ என்று பேசியபடி, அந்த அரசமரத்தையும், வளர்ந்து வந்த வேப்பமரத்தையும் வெட்ட ஆரம்பித்தார்கள். (தினமணி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2020, 14:35