barn swallow  பறவை barn swallow பறவை 

வாரம் ஓர் அலசல்: திறமையுள்ளவர்கள் தோற்பதில்லை

திறமையானவர்கள் தோற்பதில்லை. அவர்களை மற்றவரும் தோற்கடிக்க முடிவதில்லை. அதற்கு விடாமுயற்சியும், தளர்ச்சியில்லா துணிவும், நம்பிக்கையும் தேவை

மேரி தெரேசா: வத்திக்கான்

அரண்மனைக்குச் சென்று அரசர்களைப் புகழ்ந்து பாடினால், பிழைப்பு நடத்தலாம் என்ற ஒரு நிலை நிலவிய காலக்கட்டத்தில் வாழ்ந்துவந்த புலவர் ஒருவர், ஒரு நாள் அரசரைப் பார்க்கப் போனார். அந்த புலவரின் தோற்றம், அவரை பிச்சைக்காரர்போன்று காட்டியது. புலவரை அவ்வாறே எண்ணிய அரசரும், அவரின் புலமையைக் கண்டறிந்து பரிசு வழங்குவதற்குப் பதில், காவலாளரிடம் சிறிய பரிசு ஒன்றைக் கொடுத்தனுப்பினார். கிடைத்தது போதும் என்று எண்ணும் இரவலன் அல்ல அந்த புலவர். எனவே பரிசுப்பொருளைப் பார்த்து, கொதித்துப்போனார் புலவர். காணாமலே தந்த பரிசைப்பெறும் மனிதன் நானல்ல என்று சொல்லி, பரிசைப் பெற மறுத்துவிட்டார் அவர். கோபத்துடன் அரண்மனையைவிட்டு வெளியேறியபோது, உலகத்தைப் பற்றி ஓர் அற்புதமான கூற்று ஒன்றை அவர் சொல்லிவிட்டுச் சென்றார். “பேணுநர் பலரே, பெரிதே உலகம்” அதாவது, உலகம் என்ன அவ்வளவு சிறியதா, இல்லை, அது பெரியது. என்னைக் காப்பாற்ற இவன் ஒருவன்தான் இருக்கிறானா, பலர் இருக்கின்றார்கள் என்ற பொருளில், புலவர் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் பலரையும் பல வழிகளில் முடக்கிப்போட்டுள்ளது. இந்த சூழலில், இனிமேல் என்ன செய்வது என்று கவலைப்படும்போது, இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், வாழ்வில் வெற்றிபெறலாம். இதற்கு, நம்பிக்கையோடு, விடாமுயற்சியும், மனஉறுதியும் தேவை. ஏனெனில் வாழ்வில் வெற்றிபெற்றால், நாம் நினைத்தது மாதிரி வாழலாம். ஆனால், தோல்வி அடைந்தால், அடுத்தவர் சொல்வதுபோல்தான் வாழவேண்டியிருக்கும். அடுத்தவர் சொல்வதுபோல் எதற்கு நான் வாழ வேண்டும்? என்னால் வாழ்வில் வெற்றிபெற முடியாதா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு பல்வேறு உயிரினங்கள், குறிப்பாக இரண்டு பறவைகள் நமக்கு வாழ்வியல் பாடங்களைக் கற்றுத்தருகின்றன.

கழுகு பறவை

கழுகு பறவையின் இருநிலை வாழ்வு பற்றி நாம் வாசித்திருக்கிறோம். இது பறவையினங்களில் நீண்ட ஆயுளைக் கொண்டது. இது நினைத்தால், எழுபது ஆண்டுகள் வரை வாழலாம். இந்த ஆயுளை எட்டுவதற்கு அது ஒரு கடினமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டியிருக்கிறது. கழுகு நாற்பது வயதை எட்டும்போது, அதன் அலகு உணவு தேடுவதற்குச் சக்தியை இழக்கிறது. அதன் நீண்ட மூக்கும் வளைந்து விடுகிறது. அதன் கடினமான இறகுகளும் உடம்போடு ஒட்டிக்கொள்கின்றன. எனவே, வழக்கமாக மிக உயரத்தில் பறக்கும் கழுகால், பறக்க முடிவதில்லை. அச்சமயத்தில் கழுகுக்கு இரு வாய்ப்புகள் உள்ளனவாம். ஒன்று இறப்பது. மற்றொன்று ஒரு கடினமான மற்றும், வேதனை நிறைந்த முயற்சியை மேற்கொள்வது. வலிநிறைந்த இந்த முயற்சி 150 நாள்களுக்கு நீடிக்கும். இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்துகொள்ளும் கழுகு, உயரமான மலை உச்சிக்குச் சென்று, தனது கூட்டில் அமரும். அச்சமயத்தில் அது, தனது அலகை பாறை மீது உரசும். அந்த அலகு முழுவதும் கீழே விழும்வரை அது பாறைமீது அதைத் தேய்க்கும். அதற்குப்பின், புதிய அலகு முளைத்து வளருவது வரை அது காத்திருக்கும். பின்னர் அது தன் நகங்களைப் பிடுங்கி எடுக்கும். புதிய நகங்கள் வளர்ந்தபின், தன் பழைய இறகுகளை பிடுங்கிப்போடும். ஐந்து மாதங்கள் சென்று, அந்த கழுகு புதுப்பிறப்பெடுத்து, பறக்கத் தொடங்கும். அதற்குப்பின் கழுகு, மேலும் முப்பது ஆண்டுகள் வாழும்.

நாம் நம் சக்தியை, திறமையைப் புதுப்பிக்கும் முயற்சி, வலியும் வேதனையும் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் அதற்குப்பின் நமக்குக் கிடைக்கும் புதுவாழ்வு அற்புதமாக, புதுமை நிறைந்தாக அமையும். புயல் வரும்போது, மழைபெய்யும்போது,  மற்ற பறவைகள் எல்லாம் புகலிடங்களைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மட்டும் புயலையோ, மழையையோ தவிர்ப்பதற்காக, அதற்கும் மேலே உயரப் பறக்கின்றது. ஆம்,  நம் வாழ்வில் புயல்கள் எழுகின்றபோது, நம் இதயங்கள் கழுகைப்போல் உயரப் பறக்க வேண்டும். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவ தளபதியாகப் பணியாற்றிய, George Smith Patton Jr. என்பவர் சொல்கிறார்:“ஒரு மனிதரின் வெற்றியை, அவர் எவ்வளவு உயரத்திற்குச் செல்கிறார் என்பதை வைத்து அல்ல, மாறாக, அவர் தனது கீழ்நிலையிலிருந்து மேலே எழும்புவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் என்பதை வைத்தே கணிப்பேன்” என்று. எனவே, பிரச்சனைகள் எல்லாருக்கும் பொதுவானவைதான். ஆனால் அவற்றை எவ்வாறு நோக்கவேண்டும், அவற்றை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை, கழுகு நமக்குக் கற்றுத் தருகிறது.

barn swallow

barn swallow என்று பொதுவாக அறியப்படும் Pavon Swallo பறவை, ஐஸ்லாந்து தவிர வடதுருவப் பகுதியில் முட்டையிடும் என்று சொல்லப்படுகிறது. 15 முதல் 20 கிராம் எடையுள்ள இந்த பறவையினத்தின் ஆயுள்காலம், நான்கு ஆண்டுகள் மட்டுமே. தூக்கணாங் குருவி வகையைச் சார்ந்த இந்த barn swallow பறவை, நமக்குக் கற்றுத்தருகின்ற வாழ்வியல் போதனை அற்புதமானது. தமிழகத்தில் வேடந்தாங்கலுக்கு பறவைகள் கடல்தாண்டி, நாடுவிட்டு நாடு வருவதுபோல், இந்த பறவைகளும், இனப்பெருக்கத்திற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியாவிலிருந்து, தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டீனா நாட்டுக்குச் செல்லுகின்றன. இந்தப் பறவைகள் பறந்து வரும் பாதை, தரைப்பகுதியோ மலைப்பகுதிகளோ அல்ல. அவ்வாறு இருந்தால் களைப்பாக இருக்கும்போது சற்று இளைப்பாறிவிட்டு அவை மீண்டும் பயணத்தைத் தொடரலாம். ஆனால், இந்த பறவைகள் மேற்கொள்ளும் பாதை, அட்லாண்டிக் பெருங்கடல். இவை கலிஃபோர்னியாவிலிருந்து பெருங்கடல் வழியாக, 8,300 கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்து, அர்ஜென்டினாவில் முட்டையிடும். இவை முட்டையிட்ட ஒரு மாதத்திற்குள் குஞ்சுகளும், பறக்கும் திறனைப் பெற்றுவிடும். அதனால் அர்ஜென்டினா வந்த இரு மாதங்கள் சென்று, மீண்டும் தாய் பறவைகள் தன் குஞ்சுகளுடன், பெருங்கடல் வழியாக 8,300 கிலோ மீட்டர் தூரப் பயணத்தை மேற்கொள்கின்றன. மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில், 24 நாள்கள் முதல் 30 நாள்களில் அவை சேர வேண்டிய இடத்திற்குச் சென்று விடுகின்றன. இதில் அதிசயம் என்னவெனில், இந்தப் பறவைகள் பறக்கத் தொடங்கும்போது வாயில் சிறிய குச்சியைக் கவ்விக்கொண்டு பறக்கின்றன. அவற்றிற்கு பசி எடுத்தாலோ, களைப்பாக உணர்ந்தாலோ, அவற்றை வழிநடத்திச்செல்லும் தாய்ப் பறவை, மீன்களைக் கண்ட இடத்தில், முதலில் வாயில் கவ்வியிருக்கும் குச்சியை கீழே பெருங்கடலில் போடும். உடனே மற்ற குஞ்சுகளும் அவ்வாறே போடும். அவை அனைத்தும் அந்தக் குச்சிகளின் மீது அமர்ந்து, ஓய்வெடுத்து பெருங்கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்களைச் சாப்பிடும். பின்னர் மீண்டும் அந்தக் குச்சிகளைக் கவ்விக்கொண்டு, தாய்ப் பறவையின் வழிகாட்டலில் அவை பறந்து செல்லும்.  இந்த சிறிய barn swallow பறவைகள், இனப்பெருக்கத்திற்காக, ஒரு சிறு குச்சியை வைத்துக்கொண்டு, 8,300 கிலோ மீட்டர் தூரம் துணிச்சலுடன் பயணிக்கிறது என்றால், நாமும் நம்மிடமுள்ள சிறிய திறமையையும் தன்னம்பிக்கையயும் வைத்துக்கொண்டு இந்த வாழ்வை வெற்றியோடு கடந்துவிட முடியாதா? சிந்தித்துப் பார்ப்போம்.

பெர்னாட் ஷா

அது வறுமையால் வாடிய குடும்பம். அப்பா குடிகாரர். அம்மா, இசைப்பாடம் நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தவர். அவர்களின் ஒரே மகனை அதிகம் படிக்க வைக்க வசதியில்லை. எனவே அன்பு அம்மா, அவனை ஓர் அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துவிட்டார். அந்த வேலையில் பலரும் அவனைத் திட்டினர். எனவே, அந்த வேலையில் தொடர்ந்து இருந்தால், தனது எதிர்காலம் வீணாகப் போய்விடுமே என்ற அஞ்சினான் அந்த மகன். தான் எதிர்கொண்ட மனப்போராட்டத்தால் தாய்க்கு ஒரு மடல் எழுதினான் அவன். “அம்மா, கடவுள் எனக்கு கொடுத்தது ஒரேயொரு வாழ்வு. அதை அலுவலகத்தில் எடுபிடி வேலையாளாகவே இருந்து வீணாக்க விரும்பவில்லை, எனவே அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன்” என்று மகன் எழுதினான். பின்னர் அவனின் வாழ்வு பல தோல்விகளால் தழும்பேறின. ஆனால் அவற்றை தன்வசப்படுத்தும் வெற்றிகளாக வலுவேற்றினான் அவன். நாவல்கள் எழுதினான். அதில் தோல்வியடைந்தான். பின்னர், கலை, இசை போன்றவற்றிற்கு விமர்சனங்கள் எழுதினான். அதிலும் தோல்வியடைந்தான். ஆயினும் அவன் துவண்டுவிடவில்லை. பின்னர் அவன் ஒரு நாடக ஆசிரியனாக மாறினான். அப்போதுதான் அவன் வாழ்வில் வெற்றி என்ற ஒளிவெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. 1925ம் ஆண்டில் நொபெல் இலக்கிய பரிசை அவன் பெற்றபோதுதான், தான் முன்பு எடுத்த முடிவு சரியானது, எவ்வளவு உன்னதமானது என்பதை அவன் உணர்ந்தான். அந்த மகன்தான் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. (26 ஜூலை 1856–2 நவம்பர் 1950).

திறமையானவர்கள் தோற்பதில்லை. அவர்களை மற்றவரும் தோற்கடிக்க முடிவதில்லை. அதற்கு விடாமுயற்சியும், தளர்ச்சியில்லா துணிவும், நம்பிக்கையும் தேவை. அவை இருந்தால், தோல்விகளை வெற்றிகளாக மாற்றலாம். வாழ்வில் உயர்ந்து நிற்கும் மனிதர்களும் சரி, சிறு உயிரினங்களும் சரி, நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் கல்வி இதுதான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2020, 13:20