சிரியாவில் தாக்குதலுக்கு உள்ளான இடம் சிரியாவில் தாக்குதலுக்கு உள்ளான இடம்  

உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.அவையின் அழைப்பு

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடவேண்டிய இவ்வேளையில், உலகின் பல நாடுகளில் நிகழும் ஏனைய மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - ஐ.நா.நிறுவனத்தின் பாதுகாப்பு அவை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடவேண்டிய இவ்வேளையில், உலகின் பல நாடுகளில் நிகழும் ஏனைய மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று, ஐ.நா.நிறுவனத்தின் பாதுகாப்பு அவை, ஜூலை 1, இப்புதனன்று அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கிருமி உலகளாவிய பரவலாக மாறிவந்ததையடுத்து, உலகெங்கும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, இவ்வாண்டு மார்ச் 23ம் தேதி ஐ.நா. அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விடுத்திருந்த அழைப்பை, ஐ.நா.வின் பாதுகாப்பு அவை தன் தீர்மான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது மோதல்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில், குறைந்தது, அடுத்த 90 நாள்கள் போர்நிறுத்தம் ஏற்பட்டால், கோவிட் 19 கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வழங்க இயலும் என்று, பாதுகாப்பு அவையின் தீர்மான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களும் ஒரே மனதாய் எடுத்துள்ள இந்த தீர்மானத்தைப் பாராட்டியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், இத்தீர்மானம், ஏக மனதாக எடுக்கப்பட்டிருப்பது, மோதலில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான அடையாளமாக விளங்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
ஜூன் 30 இச்செவ்வாயன்று உலக நலவாழ்வு நிறுவனம் WHO வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, உலகெங்கும் 10,185,374 பேர் இந்நோயினால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 503,862 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நோய்தொற்று அதிக அளவில் உள்ள அமெரிக்க நாடுகளில், 5,136,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 247,129 உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2020, 13:52