மடகாஸ்கரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் மடகாஸ்கரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் 

துப்பாக்கி வர்த்தகம், உலகில் வன்முறையை பெருக்குகிறது

சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் இந்த ஆயுத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் - UNODC

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துப்பாக்கி வர்த்தகம், மனித வாழ்வுக்கும், உலகளாவிய பாதுகாப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தின் போதைப்பொருள் மற்றும், குற்றத்தடுப்பு அமைப்பு (UNODC) வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

“துப்பாக்கி வர்த்தகம் குறித்த ஓர் உலகளாவிய ஆய்வு 2020” என்ற தலைப்பில் இந்த அறிக்கையை வெளியிட்ட, அந்த ஐ.நா. அமைப்பின் இயக்குனர் Ghada Waly அவர்கள்,  சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் துப்பாக்கி வர்த்தகம் முன்வைக்கும் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார். 

இந்த ஆயுத வர்த்தகம், பல நேரங்களில் பொதுவில் அறியப்படாத பிரச்சனையாகவே உள்ளது என்றும், இது, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வன்முறை மற்றும், குற்றங்களைப் பெருக்குகின்றது என்றும், Waly அவர்கள் கூறினார்.

உலக அளவில் சட்டத்திற்குப் புறம்பே புழக்கத்திலுள்ள துப்பாக்கிகளில் ஏறத்தாழ 39 விழுக்காடு கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இவற்றில் கைத் துப்பாக்கிகளே அதிகம் என்றும் கூறியுள்ள Waly அவர்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கு இடையே, இந்த ஆயுத வர்த்தகம் அதிகம் இடம்பெறுகின்றது என்று  கூறினார். 

சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் இந்த ஆயுத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள Waly அவர்கள், 2016 மற்றும், 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 81 நாடுகளில், ஏறத்தாழ 5,50,000 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தார்.

இவை, பெரும்பாலும் பாதுகாப்பிற்கென வைக்கப்பட்டிருந்தாலும், வன்முறைக்கு, குறிப்பாக, மனிதக் கொலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றும், UNODC அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

உலக அளவில் இடம்பெறும் மனிதக் கொலைகளில் 54 விழுக்காட்டிற்குத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2020, 13:00