காவல்பணியிலுள்ள இந்திய இராணுவம் காவல்பணியிலுள்ள இந்திய இராணுவம் 

வாரம் ஓர் அலசல்: கடவுளின் தூதர்களாக மாற...

உண்மை மற்றும் கருணையின் பாதையில் நாம் நடந்துசெல்கையில், ஒவ்வொருவரும் யாருக்காவது கடவுளின் செய்தியைக் கொண்டுசெல்லும் தூதராகச் செயல்படமுடியும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று, வயது முதிர்ந்த ஒருவர், அந்த சாலைக்கு எதிர்ப்பக்கம் இருந்த கடையில், தனக்கும் தனது மனைவிக்கும் காலை உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்து வந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில், வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சட்டென்று பிரேக் போட்டு நின்றது. அந்த வாகனத்தில் வந்த இளம்பெண் கோபத்தோடு முகம் சிவக்க, கடுமையான வார்த்தைகளால் அந்தப் பெரியவரை வாய்க்குவந்தபடி திட்டிவிட்டுச் சென்றார். அந்த அதிர்ச்சியில் அந்தப் பெரியவர் வாங்கிவந்த காலை உணவை கீழே கொட்டிவிட்டார். முகத்தில் கவலையோடு அதைக் குனிந்து எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்துசென்றார் அவர். அந்நேரத்தில் அதே சாலையைக் கடந்துவந்துகொண்டிருந்த வைரவன் என்பவர், அடுத்த நாள், அந்த வயதான பெரியவரிடம் பழங்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஏனெனில் அந்த முதியவரும், அவரது மனைவியும், தர்பூசணி பழங்களைக் கூறுபோட்டு தள்ளுவண்டியில் வைத்து விற்பவர்கள். காலத்திற்கேற்ப, மற்ற பழங்களையும் விற்பவர்கள் அவர்கள். அன்று வைரவன் அவர்கள், பழங்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, அந்த முதியவர் சாலையையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தார். யாரையோ அவர் எதிர்பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென அவர் வைரவனிடம், சார் கொஞ்சநேரம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு, சாலைக்குச் சென்று, இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை கையசைத்து நிற்க வைத்தார். அந்தப் பெண் நேற்றைய கோபத்தையே மீண்டும் முகத்தில் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெரியவரோ, தாயி, நேற்று நீ போன அவசரத்தில் இதை தவறவிட்டுவிட்டுப் போய்விட்டாய் என்று சொல்லி, தன் மடியில் பாதுகாப்பாக வைத்திருந்த விலையுயர்ந்த கைபேசியை எடுத்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்தார். உடனே அந்த இளம்பெண் வண்டியை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஐயா பெரியவரே, இதை தொலைத்ததிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லை, நான் வங்கியில் வேலை செய்கிறேன் முக்கியமான தொடர்பு எண்கள் எல்லாம் இதில் உள்ளன, மிக்க நன்றி என்று கூறிவிட்டு கண்கலங்கினார். ஐயா, நேற்று தங்களை நான் அவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கக் கூடாது, வேலையில் கடுமையான நெருக்கடி, அதனால் என்ன பேசுகிறேன் என்றே புரியாமல் சுடுசொற்களால் தங்களை அவமானப்படுத்திவிட்டேன், மன்னியுங்கள் என்று சொன்னார். அதற்கு அந்தப் பெரியவர், அட விடு தாயி, கோபம் யாருக்குத்தான் வராது, இதைப்போயி பெரிசுபடுத்துறா, ஜாக்கிரதையாய் போ தாயி என்று பரிவோடு சொல்லி அனுப்பினார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வைரவன், அந்தப் பெரியவரிடம், என்னங்க, நேற்று அப்படித் திட்டின அந்தப் பொண்ணை நாலுவார்த்தை நறுக்கென கேட்டிருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், சார், அந்தப் பொண்ணு கல்யாணம் குழந்தைகள்... இப்படி இன்னும் எவ்வளவோ விடயங்களைப் பார்க்கவேண்டியிருக்கு, வயதாகி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். அந்தப் பொண்ணு, எனக்குப் பேத்தி வயது, என் பேத்தியாக இருந்தா, சத்தம் போடுவேனா, நல்லா இருக்கட்டும் சார், நம்மைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாருமே மனுஷங்கதான் சார், இருக்கிறவரைக்கும் அன்பா, பாசமா இருந்துட்டு போவோமே என்று சொன்னார். அந்த ஏழைப் பெரியவரைப் பாராட்ட வார்த்தையில்லாமல், நல்லதொரு வாழ்வியல் கல்வியைக் கற்ற திருப்தியோடு அங்கிருந்து சென்றதாக, வைரவன் அவர்கள், (vairalaakum video) காணொளி ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாருமே மனிதர்கள்தான். இந்த உலகில் நாம் உயிரோடு வாழ்கின்றவரைக்கும் அன்பாக, பாசமாக இருக்கவேண்டும். இந்த வரிகள், அந்த வயது முதிர்ந்த தள்ளுவண்டி பழக்கடைக்காரர் உதிர்த்த முத்துக்கள்.

காணாமல் போன நாய்

எனது செல்ல நாய் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும். இவ்வாறு, காணாமல் போன நாய் என்று, தடித்த எழுத்துக்களில், உள்ளூர் தினத்தாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார் ஒருவர். இந்த விளம்பரத்தை வாசித்த மற்றொருவர் சார், உங்களது செல்ல நாயை நான் கண்டுபிடித்துவிட்டேன். அது, வயது முதிர்ந்தோர் இல்லத்திலுள்ள உங்களது தாயைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறது என்று, அந்த மனிதருக்கு பதில் அனுப்பியிருந்தார். இந்த பதிவை வாசித்தபோது, தவறு எங்கே இருக்கிறது என்று சிந்திக்க வைத்தது. அனுபவ வாழ்வியல் பாடங்களை அடுத்த தலைமுறைகளுக்குக் கற்றுத்தரும் பாட்டி தாத்தாக்கள் காட்டிய அன்பை செல்லப் பிராணிகள் புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட, சீராட்டி தாலாட்டி வளர்த்து சமுதாயத்தில் உயர்ந்து நிற்க உதவிய பெற்றோருக்கு பிள்ளைகள் வழங்குவதில்லையே. இந்த கோவிட்-19 நெருக்கடியில் வயதில் மூத்தவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைதரும் உண்மை.

உறுதியான கடவுள் நம்பிக்கை

சில ஆண்டுகளுக்குமுன், 15 படைவீரர்கள் தங்கள் தளபதியுடன் இமாலயப் பகுதியில் மூன்று மாதங்கள் காவல்பணியை ஆற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்தனர். அது கடுங்குளிர் காலம். பனிமழை பெய்துகொண்டிருந்தது. கடுமையான இந்தப் பயணத்தில் களைத்திருந்த படைவீரர்கள், வழியில் யாராவது சூடாக ஒரு கிண்ணம் தேனீர் கொடுப்பார்களா? என்ற ஏக்கத்தோடு நடந்துகொண்டிருந்தனர். ஒரு மணிநேரம் நடந்து சென்றபின், அவர்கள் ஒரு பழைய தேனீர் கடை ஒன்றைப் பார்த்தனர். ஆனால் அந்தக் கடை பூட்டப்பட்டிருந்தது. அப்போது தளபதி, கடையில் யாரும் இல்லை, என்ன செய்வது, இருந்தாலும் சிலமணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்வோம் என்று சொன்னார். அப்போது படைவீரர்களில் ஒருவர், நாம்தான் 15 பேர் இருக்கிறோமே, நாமே தேனீர் தயாரிப்போம் என்று கூறினார். மக்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே, பூட்டை உடைத்து தேனீர் தயாரிப்பதா, இது இராணுவத்தின் ஒழுக்கநெறி கட்டுப்பாட்டுக்கே முரணானது என்று சிந்தித்தார் தளபதி. இருந்தபோதிலும், வீரர்களின் நிலையை உணர்ந்த அவர், அதற்கு அனுமதி அளித்தார். வீரர்களும் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் அங்கே தேனீர் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அதோடு பிஸ்கட் பாக்கெட்டுகளும் அங்கு இருந்தன. அவர்களும் தேனீர் தயாரித்து குடித்தனர். பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டனர். அப்போது தளபதி, சில ஆயிரம் ரூபாய்களை எடுத்து அந்தக் கடையின் சர்க்கரை டப்பாவுக்குக் கீழ் வைத்துவிட்டு கடையைப் பூட்டினார். அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இமாலயாவில் 3,4 மாதங்கள் கடுமையான காவல்பணியில் ஈடுபட்ட பின்னர், அந்த 15 பேரும், தளபதியுடன் அதே வழியில் திரும்பிவந்தனர். அந்த தேனீர் கடை திறந்திருப்பதையும், அதன் உரிமையாளர் அங்கு இருப்பதையும் அவர்கள் கண்டனர். அவர்,  வயது முதிர்ந்தவராய், பார்ப்பதற்கு ஏழையாகத் தெரிந்தார். அது மாலை நேரம். அந்த முதியவரும், 15 பேரை ஒன்றாகப் பார்த்தவுடன், இன்று நமக்கு நல்ல வருமானம் என்ற மகிழ்வோடு சூடாகத் தேனீர் தயாரித்து கொடுத்தார். பிஸ்கட்களும் கொடுத்தார். அப்போது படைவீரர்கள் அவரிடம், ஆள்கள் அவ்வளவாக நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் கடை வைத்து நடத்துவது பற்றிய அந்த முதியவரின் அனுபவம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த முதியவரும் பல கதைகள் சொன்னார். தனது கடவுள் நம்பிக்கை பற்றியும் சொன்னார். அப்போது படைவீரர்களில் ஒருவர், பாபுஜி, கடவுள் இருந்தால், ஏன் உங்களை இவ்வளவு ஏழ்மையில் வைத்திருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர், அப்படிச் சொல்லாதே தம்பி, கடவுள் உண்மையிலேயே இருக்கிறார். அதற்குச் சான்றுகூட உள்ளது. மூன்று மாதங்களுக்குமுன் பயங்கரவாதிகள் இங்கு வந்து எனது மகனிடம் ஒரு தகவலைக் கேட்டனர். தனக்கு அது தெரியவே தெரியாது என்று அவன் சொன்னான். ஆனாலும் அவர்கள், என் மகனை நம்பாமல் அவனைக் கடுமையாய் அடித்து குற்றுயிராய் விட்டுச்சென்றனர் நான் உடனே கடையை மூடிவிட்டு, அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். சில மருந்துகள் வாங்கவேண்டிய நெருக்கடிநிலை. என்னிடம் 20 ரூபாய் மட்டுமே இருந்தது. பயங்கரவாதிகளுக்குப் பயந்து யாரும் எனக்குப் பணம் தரவும் முன்வரவில்லை. அந்நேரம் எப்படி மகனைக் காப்பாற்றுவது என்று கலங்கினேன். உதவிக்காக கடவுளிடம் மன்றாடினேன். நீங்கள் நம்பமாட்டீர்கள், அன்று கடவுள் எனது கடைக்கு வந்துள்ளார். அன்று நான் கடைக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஐயோ எல்லாம் முடிந்துவிட்டது என்ற பதற்றத்துடன் கடைக்குள் சென்றேன். ஆச்சரியம், சர்க்கரை டப்பாவுக்குக் கீழ் சில ஆயிரம் ரூபாய்கள் இருந்தன. அந்தப் பணம் எனது ஒரே மகனின் வாழ்வையே காப்பாற்றியது. தம்பிகளா, கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று சொன்னார். அப்போது அந்த முதியவரின் கண்களில் உறுதியான கடவுள் நம்பிக்கை சுடர்விட்டதை படைவீரர்கள் பார்க்கத் தவறவில்லை. 15 படைவீரர்களும் கண்ணீருடன் தளபதியை நோக்கினர். தளபதியின் கண்களும் குளமாகியிருந்தன. அன்று தளபதியின் கண்களில் கண்ணீரைப் பார்ப்பது அவர்களுக்கு அரிதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், பனிகள் படர்ந்த குப்வாரா (Kupwara) பகுதியில் நடந்த உண்மையான நிகழ்வு இது என்று, பேராசிரியர் பரத் மேக்ரா (Bharat J.Mehra) அவர்கள், ஒரு கிண்ணம் தேனீர் (A Cup of Tea) என்ற தலைப்பில், இவ்வாறு ஒரு காணொளியைப் பதிவு செய்துள்ளார்.

உண்மை மற்றும் கருணையின் பாதையில் நாம் நடந்துசெல்கையில், ஒவ்வொருவரும் யாருக்காவது கடவுளின் செய்தியைக் கொண்டுசெல்லும் தூதராகச் செயல்படமுடியும். இன்று உலகில், குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமி காலத்தில், எல்லாருக்குமே இத்தகைய கடவுளின் தூதர்கள் தேவைப்படுகின்றனர். எனவே உண்மை மற்றும், இரக்கத்தின் பாதையில் நடந்து நம்மைச் சுற்றி வாழ்பவர்க்கு, கடவுளின் தூதர்களாக மாறுவோம். கடவுள் இருக்கிறார் என்பதை எல்லாருமே உணரச் செய்வோம். மூத்த குடிமக்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய வாழ்வியல் பாடங்கள் பல என்பதை உணருவோம்.

வாரம் ஓர் அலசல் - கடவுளின் தூதர்களாக மாற...

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2020, 12:52