வீட்டுச் சுவரில் மாட்டப்படுவதற்கு சிறந்த ஓவியம் வீட்டுச் சுவரில் மாட்டப்படுவதற்கு சிறந்த ஓவியம்  

விதையாகும் கதைகள் : விமர்சனங்கள் கண்டு கலக்கம் தேவையில்லை

தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொன்னால், எல்லாருமே போட்டிப்போட்டுக்கொண்டு வருவார்கள். ஆனால் தவறுகளைத் திருத்தி மேம்படுத்தச் சொன்னால், யாருமே தயாராக இருக்கமாட்டார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

இளைஞன் ஒருவன், முதன்முதலில், அழகான ஓவியம் ஒன்றை வரைந்தான். தான் வரைந்த அந்த ஓவியம் பற்றி பலரது கருத்தை அறிய விரும்பினான். அதனால் அவன் அதை, ஒருநாள் காலையில், பலபேர் வந்துபோகின்ற பொது இடத்தில் கொண்டுபோய் வைத்தான். அதன் அருகில் ஒரு சிறு விளம்பர பலகையையும் வைத்தான். அதில், நண்பர்களே, இந்த ஓவியத்தை நான் முதல்முறையாக வரைந்துள்ளேன். அதில் தவறுகள் இருக்கலாம். எங்கெல்லாம் தவறுகளைக் காண்கின்றீர்களோ அங்கெல்லாம், எக்ஸ் (X) என்று அடையாளப்படுத்துங்கள் என்றும் எழுதி வைத்தான். அன்று மாலையில் அவன் திரும்பி வந்து பார்த்தபோது, ஓவியமே தெரியாத அளவுக்கு, அது முழுவதும் எக்ஸ் அடையாளங்களால் நிறைந்திருந்தது. அதைப் பார்த்த அவன் மனம் கலங்கினான். உடனே அவன், தன் குருவிடம் சென்று, நடந்ததை விவரித்து, நான் இனிமேல் ஓவியமே வரையப்போவதில்லை, எனக்கு வாழவே விருப்பமில்லை என்று சொன்னான். அந்த இளைஞனைத் தேற்றிய குரு, எனக்கு நீ மற்றுமொரு வாய்ப்புக் கொடு, மக்களின் கணிப்பு தவறு என்று நிரூபிக்கிறேன், நீ முதலில் வரைந்த அதே ஓவியம் போன்ற ஒன்றை வரைந்து கொண்டுவா என்று சொன்னார். அவனும், மிகவும் கஷ்டப்பட்டு, ஓவியம் ஒன்றை வரைந்து குருவிடம் கொண்டுவந்து கொடுத்தான். குரு அதைக் கொண்டுபோய், பலர் நடமாடக்கூடிய தெருவில் வைத்தார். அதனருகில் ஒரு பலகையில், நண்பர்களே, நான் இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன். நான் புதியவன். அதனால் இதில் தவறுகள் இருக்கலாம். நீங்கள் அவற்றைக் காண்கின்ற இடத்தில், அருகிலிருக்கிற தூரிகையையும் வர்ணத்தையும் எடுத்து சரிசெய்யலாம் என்று எழுதி வைத்தார். அன்று மாலையில் குருவும் இளைஞனும் சென்று அந்த ஓவியத்தைப் பார்த்தனர். ஓவியம் அப்படியே இருந்தது. அதில் யாரும் எந்த திருத்தமும் செய்யவில்லை. அப்போது குரு இளைஞனிடம், அதை, நாளையும், நாளை மறுநாளும் விட்டுப்பார்ப்போம் என்று சொன்னார். அவர்கள் இரண்டு நாள்கள் சென்று பார்த்தபோதும் அது அப்படியே இருந்தது. அப்போது குரு இளைஞனிடம், தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொன்னால் எல்லாருமே போட்டிப்போட்டுக்கொண்டு வருவார்கள். ஆனால் தவறுகளைத் திருத்தி மேம்படுத்தச் சொன்னால், யாருமே முன்வரமாட்டார்கள். இவர்களுடைய விமர்சனங்களை நினைத்து உனது வாழ்வையே பாழாக்கிக்கொள்ள நினைத்தாயே என்று சொன்னார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2020, 13:50