தேவநிந்தனை தண்டனை சட்டத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் கூட்டம் தேவநிந்தனை தண்டனை சட்டத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் கூட்டம்  

70 முறை தள்ளிவைக்கப்பட்ட தேவ நிந்தனை வழக்கு விசாரணை

பாகிஸ்தானைப் பொருத்தவரையில், தேவ நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஒருவர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னரே சாட்சிகள் திரட்டப்படுகின்றன என கூறுகிறார் வழக்கறிஞர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் நாட்டில் தேவ நிந்தனை குற்றத்திற்காக 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட Imran Masih என்ற கிறிஸ்தவரின் வழக்கு விசாரணை, கடந்த 11 ஆண்டுகளில், 70 முறைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்குரைஞர் அறிவித்துள்ளார்.

அரபு மொழி வாசிக்கத் தெரியாத Masih என்ற மளிகைக் கடைக்காரர், தன் கடையை சுத்தப்படுத்தியபோது, அரபு மொழி குரான் புனித நூல் பக்கங்களை எரித்தார், என்று சிலர் கூறிய குற்றச்சாட்டின்பேரில் 2009ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வழக்கின் விசாரணைகள் தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வருகின்றன என்று கூறிய வழக்குரைஞர் Khalil Tahir Sandhu அவர்கள், இதுவரை 10 நீதிபதிகளின் முன், இந்த வழக்கு வந்துள்ளது எனவும் கூறினார்.

மதவெறி பிடித்த கும்பல்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து, தேவநிந்தனை குற்றச்சாட்டு கைதிகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் தயங்குகிறார்கள் என உரைத்த வழக்குரைஞர், இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது சிறுபான்மை மதத்தவரே எனவும் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தானைப் பொருத்தவரையில், தேவ நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னரே சாட்சிகள் திரட்டப்படுகின்றன எனவும் கூறிய வழக்கறிஞர், ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் குற்றமற்றவர் என விடுதலைசெய்யப்பட்ட ஆசியா பீபி என்பவர் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப்பின், Masih அவர்களும் கைது செய்யப்பட்டு இன்னும் விசாரணைகள் தொடர்கின்றன என மேலும் கூறினார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2020, 13:37